பாலம் (திரைப்படம்)
பாலம் | |
---|---|
சுவரோவியம் | |
இயக்கம் | கார்வண்ணன் |
தயாரிப்பு | எம். வி. ஜெயப்பிரகாஷ் |
கதை | கார்வண்ணன் சி. என். ஏ. பரிமளம்(வசனம்) |
இசை | என். எஸ். டி. ராஜேஷ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. எஸ். தரண் |
படத்தொகுப்பு | நாகேஷ் ராவ் |
கலையகம் | எஸ். எஸ். ஸ்கிரீன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 10, 1990 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாலம் (Paalam) என்பது 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் முரளி, செந்தில், மா. நா. நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் எதிர்நாயகனான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.[2] இப்படத்தை கார்வண்ணன் இயக்கி,[3][4] என். எஸ். டி. ராஜேஷ் இசையமைத்துள்ளார்.
கதை
ஜீவா (முரளி) நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவன். அவனது அண்ணன் முத்து (சூர்யகாந்த்), அண்ணி வடிவுக்கரசி (கௌரி), மற்றும் பார்வைத்திறன் இல்லாத தங்கை செல்வி (பாலாம்பிகா) கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். முத்துவும் கிராமத்தினரும் தங்களுக்கு கிடைக்கும் தினக்கூலி மிகவும் குறைவாக இருப்பதால் சோர்வடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வூரின் நிலங்களுக்கு உரிமையாளரான அறிவுமதி (வாசுதேவன் பாஸ்கரன்) தயக்கத்துடன் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். இதற்கு காரணமான முத்துவை கொல்ல எண்ணி தனது கையாளை அனுப்பினார். இதற்கிடையில், அறிவுமதி முத்துவின் மனைவியை பலாத்காரம் செய்து அவனின் தங்கையை கடத்திவிட்டான். அவனது கையாட்கள் கிராமத்தினரின் குடிசை வீடுகளுக்கு நெருப்பு வைத்தனர். தனக்கிருந்த செல்வாக்கினைப் பயன்படுத்தி, அறிவுமதி கிராமத்தில் நடந்த சம்பவங்களுக்கு முத்துவும் அவனது மனைவி வடிவுக்கரசியும் தான் காரணம் எனக் கூறி அவர்களை சிறையில் அடைக்கிறான். பின்னர், ஜீவா நடந்ததை அறிந்து செல்வியைக் காப்பாற்றுகிறான்.
ஒருவருடம் கழித்து, அறிவுமதி ஊழல் செய்யும் மந்திரியாகிறார். ஜீவா தனது தங்கை செல்வியை பார்வையற்றோர் படிக்கும் கல்லூரிக்கு அனுப்புகிறான். ஜீவாவும் அவனது நண்பர்களும் கல்லூரி படிப்பு முடித்தும் வேலை கிடைக்காமல் அலைகின்றனர். ஒருநாள் கல்லூரி விழாவின் போது அறிவுமதியை இகழ்ச்சியாகப் பேசுகின்றனர். அதனால் காவல்துறையினர் ஜீவாவின் இரண்டு நண்பர்களைக் கைது செய்கின்றனர். தங்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு, ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளே காரணம் என்று நினைக்கின்றனர். ஜீவாவும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஊழல் மந்திரியான அறிவுமதியைக் கடத்த திட்டம் தீட்டினர். அறிவுமதி எப்போதும் இரவு நேரத்தில் பரமன்கேணி பாலம் வழியாக வாகனத்தில் செல்வார். அதனால் ஜீவா தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலத்தின் அடியில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டான்.
ஓர் இரவில், பாலத்தின் மேற்பகுதியில் மந்திரி செல்லும் வாகனத்தை வழிமறித்து, ஓட்டுநரையும் செயலாளரையும் துரத்தி அறிவுமதியை பிணைக்கைதியாக பிடித்து வைக்கின்றனர். காவல்துறைக்கு செய்தி பரவியதால் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜன் சர்மா (கிட்டி) மந்திரி அறிவுமதியை விடுவிக்கும்படி ஜீவாவிடம் கேட்கிறார். ஆனால் ஜீவா மறுக்கிறான். ஜீவா தனது அண்ணன் - அண்ணி மற்றும் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துவரும் தன் இரண்டு நண்பர்களையும் விடுவிக்காவிட்டால் மந்திரியைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். இந்நிலையில் காவல் துறைக்கு உதவி செய்வதற்காக காவல்துறை கண்காணிப்பாளர் இளவேனில் (மா. நா. நம்பியார்) வருகிறார். இளவேனில் மற்றும் ராஜன் சர்மாவுக்கு மந்திரியைக் காப்பாற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. ஒவ்வொரு முறையும் மந்திரியைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் ஜீவா மற்றும் அவனது நண்பர்களால் முறியடிக்கப்படுகின்றன. பின்னர் நடக்கும் சம்பவங்களால் கதை முடிவுக்கு வருகிறது.
நடிப்பு
- முரளி - ஜீவா
- மா. நா. நம்பியார் - காவல்துறை கண்காணிப்பாளர்
- கிட்டி - காவல்துறை துணை கண்காணிப்பாளர்
- வாசுதேவன் பாஸ்கரன் - அறிவுமதி
- செந்தில்
- அனுஜா - குத்தாட்டப் பாடல் பாடுபவர்
- சூரியகாந்த் - முத்து
- பாலாம்பிகா - செல்வி
- கண்ணன் - ஸ்ரீதர்
- ரமேஷ் - உயரதிகாரி ராமராஜ்
- கௌரி - வடிவுக்கரசி
- ஸ்ரீ பாலா
- சுலக்ஷனா
- பானு ஸ்ரீ
- ச. இராமதாசு
- இனியன் சம்பத்
- சோ ராமசாமி
பாடல்கள்
இப் படத்திற்கு இசை அமைத்தவர் என். எஸ். டி. ராஜேஷ். பாடல்களை எழுதியவர் ராஜன் சர்மா.
எண் | பாடல் | பாடியவர்கள் | காலம் |
---|---|---|---|
1 | 'இந்த வானம்' | பி. சுசீலா | 3:35 |
2 | 'பாலம் பாலம்' | மனோ, கிருஷ்ணராஜ், குழுவினர் | 4:04 |
3 | 'ஆட்சி பண்ண அய்யாக்கண்ணு' | மனோ, குழுவினர் | 3:40 |
4 | 'ஜெகதம்பா ஜெகதம்பா' | மலேசியா வாசுதேவன் | 3:33 |
5 | 'சின்ன சின்ன பெண்களுக்கு' | மனோ, பி. சுசீலா | 4:07 |
மேற்கோள்கள்
- ↑ "பாலம் / Paalam (1990)" இம் மூலத்தில் இருந்து 1 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220201050202/https://screen4screen.com/movies/paalam.
- ↑ "கடமை கண்ணியம் கட்டுப்பாடு". கட்டுரை (தி இந்து). 4 ஆகத்து 2017. http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19413581.ece. பார்த்த நாள்: 4 ஆகத்து 2017.
- ↑ Shankar (2015-02-13). "இயக்குநர் கார்வண்ணன் மரணம்... எம்ஜிஆர் கையால் ஆட்டோ பெற்றவர்!" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053546/http://tamil.filmibeat.com/news/director-karvannan-passes-away-033198.html.
- ↑ "முரளி பட இயக்குநர் காலமானார்!" (in Tamil). 2015-02-13 இம் மூலத்தில் இருந்து 30 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161030141630/http://cinema.dinamalar.com/tamil-news/27338/cinema/Kollywood/Murali-movie-Director-Karvannan-dead.htm.