பத்மா சோமகாந்தன்
பத்மா சோமகாந்தன் | |
---|---|
முழுப்பெயர் | பத்மாவதி சோமகாந்தன் |
பிறப்பு | 03-05-1934 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், இலங்கை |
மறைவு | 15-07-2020 (அகவை 86) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் பெண்ணியவாதி |
பணி | ஆசிரியர், அதிபர் |
பெற்றோர் | ஏரம்ப பஞ்சநதீசுவரக் குருக்கள், அமிர்தம்மா |
வாழ்க்கைத் துணை |
நா. சோமகாந்தன் (இறப்பு: 2006) |
பத்மா சோமகாந்தன் (3 மே 1934 - 15 சூலை 2020) ஈழத்து எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும், ஆசிரியரும் ஆவார்.[1] இவர் பிரபல எழுத்தாளர் நா. சோமகாந்தனின் மனைவி ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மா சோமகாந்தன் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். ஏரம்ப பஞ்சநதீஸ்வரக் குருக்கள், அமிர்தம்மா ஆகியோருக்கு நான்காவது மகவாகப் பிறந்தவர்.[2] இவர் எழுத்தாளர் நா. சோமகாந்தனைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். பத்மா சோமகாந்தன் நல்லூர் சாதனா பாடசாலை, யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றிப் பின்னர் யாழ்ப்பாணம் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.[3]
எழுத்துலகில்
இவர் பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும்போது சுதந்திரன் பத்திரிகை 1951இல் நடத்திய சிறுகதைப் போட்டியில் புதுமைப்பிரியை என்ற புனைபெயரில் 'இரத்தபாசம்' என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசைப் பெற்றார்.[1] தொடர்ந்து கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கியக் கட்டுரைகள், பெண்ணிய ஆய்வுகளை எழுதியதுடன் மேடைப்பேச்சுக்களிலும் சிறந்து விளங்கினார். தினக்குரல் பத்திரிகையில் சாதனைப் பெண் பகுதியில் எழுதி வந்தார். பெண்ணின் குரல் என்ற இதழின் ஆசிரியராகப் 11 ஆண்டுகளும், சொல் என்ற இதழின் ஆசிரியராவும் பணியாற்றியுள்ளார். வீரகேசரியில் 2002 முதல் 2005 வரை வாராந்தம் எழுதிவந்த ”நெஞ்சுக்கு நிம்மதி” என்னும் கேள்வி-பதில் நூலாக வெளிவந்துள்ளது. வீரகேசரி - கலைக்கேசரி சஞ்சிகையில் "நினைவுத் திரை" என்னும் தலைப்பில் இசை ஆளுமைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தார்.
சமூகப் பணிகள்
ஊடகத்துறையில் கடமையாற்றும் பெண்களின் ஆளுமையை வலுப்படுத்தவும் அவர்களின் நன்மைகளைக் கவனிப்பதற்குமாக இயங்கிய 'ஊடறு' என்ற அமைக்குத் தலைமைதாங்கி சிலகாலம் வழிநடத்தியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கணவர் சோமகாந்தனுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றினார். உலகெங்கும் பரவிவாழும் தமிழ் சிறுவர்களுக்காக Stories from Hindu Mythology என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.
வெளியான நூல்கள்
- ஈழத்து மாண்புறு மகளிர்
- ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்
- நெஞ்சுக்கு நிம்மதி
- பக்த அனுமன் கதை
- புதிய வார்ப்புகள்
- கடவுளின் பூக்கள்
- வேள்வி மலர்கள்
- இற்றைத் திங்கள்
- பாரா முகங்கள் சில பார்வைகள்
- Stories from Hindu Mythology
விருதுகளும் பட்டங்களும்
- ”இலக்கியக் கலாவித்தகி” பட்டம்
- ”செஞ்சொற்செல்வி” பட்டம்
மறைவு
திருமதி பத்மா சோமகாந்தன் 2020 சூலை 15 மாலையில் தனது 86-ஆவது அகவையில் கொழும்பில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[நூலகம்]
- ↑ 1.0 1.1 பத்மா சோமகாந்தன் , ourjaffna.com
- ↑ திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களுடனான நேர்காணல், வெலிகம ரிம்ஸா முஹ்ம்மத், தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, பூங்காவனம், திசம்பர் 2010
- ↑ 'சமூகச் சீர்திருத்த எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் கொழும்பில் காலமானார்', வீரகேசரி, சூலை 17, 2020
- ↑ இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார், வீரகேசரி, சூலை 15, 2020