இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சோசலிச, மார்க்சிய வேலைத்திட்டத்தினடிப்படையில் இலங்கை எழுத்தாளர்களை நிறுவனப்படுத்தும் நோக்குடன் உருவான அமைப்பே ஆகும். இவ்வமைப்பும் இயக்கமும் சோசலிச யதார்த்தவாதத்தை தமது செயற்பாடுகளின் இறுதி இலக்காக பிரகடனப்படுத்தியிருந்தது.

தோற்றம்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் பல்வேறு எழுத்தாளர் குழுக்களும் அமைப்புக்களும் இருந்துள்ளன. அவற்றுள் யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கிய ஈழகேசரி (அமைப்பாக இல்லாவிட்டாலும் இப்பத்திரிகையைச்சூழ எழுத்தாளர்கள் பலர் இயங்கிக்கொண்டிருந்தனர்), மறுமலர்ச்சி, இலங்கை எழுத்தாளர் சங்கம் ஆகியன பற்றிய தகவல்கள் கிடைப்பிலுள்ளன.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததை உடனடுத்த காலப்பகுதிகளில் எழுந்த சோசலிச அலை காரணமாக இலங்கையில் சோசலிச இலட்சியங்களைக்கொண்ட பல எழுத்தாளர்கள் தோன்றினர். அவர்கள் முன்னர் தனித்தனியாக இயங்கிவந்தபோதும் காலப்போக்கில் நிறுவனமயமாகவேண்டிய தேவை வலுவாக உணரப்பட்டது.

இதன் விளைவாக கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் இளங்கீரன், அ. ராகவன், எம். பி. பாரதி, எம். ஏ. அப்பாஸ் ஆகியோர் நடத்திய இலக்கிய கூட்டத்தில் இதற்கு அத்திவாரமிடப்பட்டது. அடுத்தவாரம் 1954 ஜூன் 27 ஆம் நாள் கொழும்பு மருதானை வீரரத்ன மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடக்கி வைக்கப்பட்டது.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டதும் தனது இலட்சியங்களையும் நோக்கங்களையும் வேலைத்திட்டங்களையும் இலக்கிய உலகுக்கும் நாட்டுக்கும் 1954 ஒக்டோபர் 25ம் திகதி ஒரு பிரசுரத்தின் மூலம் பிரகடனப்படுத்தியது.

வளர்ச்சி

1955 இல் யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, திருக்கோணமலை போன்ற ஊர்களில் கிளைகள் அமையப்பெற்றன. இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு தெற்கிலும் (அக்கரைப்பற்று) பூண்டுலோயாவிலும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.