நீலகேசி விருத்தியுரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய நீலகேசி நூலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல் நீலகேசி விருத்தியுரை. [1] [2] இந்த உரைநூலின் ஆசிரியர் சமய திவாகர வாமனமுனிவர். இதனால் இந்த உரைநூலுக்குச் சமய திவாகர விருத்தி என்னும் பெயரும் வழங்கலாயிற்று.

உரையின் பயன்கள்

  • இறந்துபோன குண்டலகேசி நூலின் பாடல்கள் 20 கிடைத்துள்ளன.
  • குண்டலகேசியின் கதை இதில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
  • குண்டலகேசி நூலின் ஆசிரியர் 'நாத குத்தனார்' என்பதையும் இவ்வுரை குறிப்பிடுகிறது
  • பல இலக்கண சூத்திரங்கள் கிடைத்துள்ளன.
  • பிம்பிசாரக் கதை, மானாவூர்ப் பதிகம் முதலான பௌத்த சமய நூல்கள் இவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உரையின் பாங்கு

பாடல்களுக்கான பொருள் வெளிப்படையாக இதில் எழுதப்படவில்லை. சமயக் கருத்துகள் மிகுதியாக விளக்கப்பட்டுள்ளன. வடமொழி நூல்கள் பல காட்டப்படுகின்றன. தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களிம், அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு போன்ற சமண நூல்களும் காட்டப்படுகின்றன. கொலை மறுத்தல் பற்றிக் கூறும் வெண்பாநூல் ஒன்றும் அதன் பாடல்கள் சிலவும் இதனுள் காட்டப்பட்டுள்ளன. 'ஈழம் அடிப்படுத்த தாடையாழ்வார் என்னும் போதி சத்துவர்' என்னும் பௌத்த முனிவர் இதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மருவிய வினைகள் மாற்றா மாசினைக் கழுவி வீட்டை
தருதலால் புனிதன் ஆக்கும் தன்மையால் புண்ணியமாமே

என்னும் மேருமந்திரப் பாடலைக் (95) காட்டி, "என்பது எம் ஓத்து" என்று இவ்வுரை குறிப்பிடுகிறது. [3] இந்த உரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளது.

உரைநூலின் பாயிரப் பாடல்

மெய்ந்நூல் நெறியை விளக்கி விளங்காப் பிடகம் முதல்
பொய்ந்நூல் நெறிகளைப் போகத் துரந்தது [4] பூதலத்தில்
எந்நூலும் வல்லவர் ஏத்து சமயத்து இறைவன் கண்ட
செம் நீலகேசி விருத்தி சமய திவாகரமே
அருகள் திரு அறத்து அன்பு செய்வாரும் அழிவழக்கால்
பெருகும் துருநெறி [5] பீடு அழிப்பாரும் இப் பேர் உலகில்
பொருள் இன்றி நின்ற தமிழ்ப் புலவோர்க்குப் பொருளை எல்லாம்
திரிவின்றிக் காட்டும் சமயத் திவாகரம் சேவிக்கவே.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 249. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. சக்கரவர்த்தி நாயனார் பதிப்பு
  3. இது மேருமந்திரப் புராணத்தில் காணப்படவில்லை
  4. ஓட்டியது
  5. துருப்பிடித்த நெறி
"https://tamilar.wiki/index.php?title=நீலகேசி_விருத்தியுரை&oldid=15712" இருந்து மீள்விக்கப்பட்டது