நீயா 2 (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீயா 2
சுவரொட்டி
இயக்கம்எல்.சுரேஷ்
தயாரிப்புஸ்ரீதர் அருணாச்சலம்
கதைஎல்.சுரேஷ்
இசைஷபிர்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜவேல் மோகன்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்ஜம்போ சினிமாஸ்
வெளியீடு24 மே 2019 (2019-05-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் இயக்குனர் துரை இயக்கி கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான படம் 'நீயா'. தன்னுடைய கணவரை கொன்ற மனிதர்களை, மனித உருவத்திற்கு மாறும் வல்லமை படைத்த பாம்பு பழிவாங்குவது போன்ற கதையை மையமாக வைத்து எடுத்த படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.

அந்தப்படம் வெளியாகி 40 வருடங்கள் கழித்து, 2019ம் ஆண்டு, அதன் இரண்டாம் பாகமாக போல் உருவாகியுள்ளது நீயா 2 படம். இதில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். ராய் லட்சுமி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதிலும் பாம்பு பழி வாங்குவதையே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் எல்.சுரேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை, ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ளது.[1] இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க, ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2]

கதைச்சுருக்கம்

சர்வா, (நடிகர் ஜெய்), புருஷோத்தமன் என்ற புருஷன் (நடிகர் பால சரவணன்) இருவரும் ஒன்றாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். சர்வாவைப் பார்க்கும் திவ்யாவிற்கு (கேத்தரின் தெரசாவுக்கு) அவர் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். திவ்யா தனது காதலை சர்வாவிடம் வெளிப்படுத்த சர்வாவோ காதல் மற்றும் திருமணம் எதுவும் வேண்டாமென மறுக்கிறார். திவ்யா விடாப்பிடியாக வற்புறுத்த, ஒரு கட்டத்தில் தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று சர்வா மனம் திறந்து திவ்யாவிடம் கூறுகிறார். பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக திவ்யா கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு திவ்யாவிற்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.

அங்கு கடந்த ஜென்மத்தில் தனக்கு கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான விக்ரமுடன் (ஜெய்) சேருவதற்காக பல காலமாக காத்திருக்கிறார் பாம்பு ராணியான மலர் (ராய் லட்சுமி?

கடைசியில், சர்வாவின் நாக தோஷம் நீங்கியதா? திவ்யாவுடன் இணைந்தாரா? அல்லது மலருடன் இணைந்தாரா? மலர் மற்றும் விக்ரமின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் கதையாகும்.

நடிகர்கள்

  • ஜெய் - சர்வா மற்றும் விக்ரமாக
  • ராய் லட்சுமி மலர் மற்றும் நாகராணியாக
  • கேத்தரின் தெரசா திவ்யாவாக
  • வரலட்சுமி சரத்குமார் தேவியாக
  • பால சரவணன் புருஷோத்தமன் என்ற புருஷனாக
  • அவினாஷ் ஆனந்த சித்தராக
  • K. S. G. வெங்கடேஷ் சர்வாவின் அப்பாவாக
  • மனஷ், தேவனாக
  • நீதிஷ் வீரா, விக்ரமின் எதிரியாக
  • சுரேஷ் கண்ணன்
  • பிரியதர்சினி
  • லோகேஸ், கல்யாணமாக
  • சேட்டு
  • M. ரூபன்
  • C. M. பாலா, சாமியாராக
  • N. C. நீலகண்டம்
  • மதுரை சரோஜா, மலரின் பாட்டியாக
  • பாண்டி கமல், சர்வாவின் நண்பணாக நடித்துள்ளனர்.

தயாரிப்பு

பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை,சாலக்குடி மற்றும் அதிரப்பள்ளி போன்ற பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் நாயகன் ஜெய் மட்டுமல்லாது நாயகி ராய் லட்சுமிக்கும் இரண்டு வேடமாகும். ஜெய் முன் ஜென்மத்தில் 1993ம் ஆண்டில் கல்லூரி மாணவராக வருகிறார். ராய் லட்சுமி பெரிய குடும்பத்து பெண்ணாக வருகிறார். இந்த ஜென்மத்தில் (2019ல்) அப்பாவியான ஐ.டி-யில் வேலை செய்யும் இளைஞன் சர்வா-வாகவும் ஜெய் நடித்திருக்கிறார். இச்சாதாரியான வரலட்சுமி சரத்குமாரால் சாபமிடப்பட்டு இச்சாதாரி பாம்பாக ராய் லட்சுமி வருகிறார்.

படத்தில் மூன்று கதாநாயகிகள் ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சமி சரத்குமார். மூவருக்கும் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இச்சாதாரியாக நடித்திருக்கும் ராய் லட்சுமியின் நடிப்பு, அந்தக் கோபம், ஆவேசம் என மிரள வைக்கிறது. அப்படி ஆகும் போதெல்லாம் பகலில் கூட அவர் பாம்பாக மாறுகிறார். கொஞ்சம் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் இறுதிகாட்சிகளில் நெகிழ வைக்கிறார். முன் ஜென்மத்தில் கல்லூரி மாணவியாக உடல் எடையைக் குறைத்து இளமையாக இருக்கிறார். இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் கிடைத்த வாய்ப்பில் தன்னைப் பற்றிப் பேச வைத்துள்ளார். கேத்தரின் தெரேசா ஜெய்யைத் துரத்திக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். பின் கணவன் ஜெய்யைக் காப்பாற்றக் கடைசி வரை போராடுகிறார். பிளாஷ்பேக்கில் வரலட்சுமி சரத்குமார் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...' பாடலுக்கு நடனமாடி அடுத்த காட்சியிலேயே இறந்து போகிறார். இவரது சாபத்திலிருந்துதான் படத்தின் கதை ஆரம்பமாகிறது

இசை

சகா திரைப்படத்திற்கு அடுத்து இரண்டாவது படமாக இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷபீர். "தொலையுறேன்" மற்றும் "இன்னொரு ரவுண்டு" என்ற பாடல்கள் குறுப்பிடும்படியாக உள்ளது.

வெளியீடு

நீயா 2 மே மாதம் 10, 2019ம் நாள் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Neeya 2 (2018) | Neeya 2 Tamil Movie | Neeya 2 Review, Cast & Crew, Release Date, Photos, Videos" (in en). https://www.filmibeat.com/tamil/movies/neeya-2.html. 
  2. Neeya 2 Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, retrieved 2018-12-18
"https://tamilar.wiki/index.php?title=நீயா_2_(திரைப்படம்)&oldid=34916" இருந்து மீள்விக்கப்பட்டது