திருவரங்கம் பெரியார் சிலை
திருவரங்கம் பெரியார் சிலை என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு அருகில் அம்மா மண்டபம் சாலையில் 1996 இல் அமைக்கப்பட்ட [[தந்தை பெரியாரி]ன் சிலை ஆகும்.[1]
வரலாறு
திருவரங்கத்தில் பெரியாருக்கு சிலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தது. இந்நிலையில் 1973 இல் திருவரங்கம் நகராட்சித் தலைவராக நிறுவன காங்கிரசைச் சேர்ந்த வெங்கடேச தீட்சிதரால் நகரமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்து சிலைவைக்க அனுமதி அளிக்கப்பட்டது.[2] அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசினாலும் 24 சனவரி 1973 அன்று அனுமதி அளிக்கப்பட்டது. 1975இல் சிலை வைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. சிலை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு கலைக்கப்பட்டது. இதனால் சிலைவைக்கும் ஏற்பாட்டுப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
கிடப்பில் இருந்த சிலைவைக்கும் பணி 2006 இல் முடுக்கிவிடப்பட்டது. இதனால் 2006 திசம்பர் 24 அன்று சிலை திறப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. பெரியார் சிலைக்கு பீடம் கட்டப்பட்டு அதில் சீமைக்காரையால் சிலையும் நிறுவப்பட்டு திறப்புவிழாவுக்கு ஏற்பாடாகி இருந்தது. ஆனால் 2006 திசம்பர் 7 அன்று இரவு சமூக விரோதிகள் சிலரால் சிலை உடைக்கப்பட்டது. ஆனால் இதனால் அசராத விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேறொரு இடத்தில் வைக்க வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்த பெரியார் சிலையை பீடத்தில் வைத்து திட்டமிட்டபடி சிலையைத் திறந்தனர்.[3]
வழக்கு
சிலை வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்க போடப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சிலை வைப்பதை தடுக்க முடியாது என்று உத்தரவு இட்டது.
சர்ச்சைகள்
2022 சூன் மாதத்தில் சென்னையில் இந்து முன்னணி நடத்திய ஒரு கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று பேசினார். அதைத் தொடர்ந்து பேசிய பா. ஜ. க தலைவர்களும் அதை ஆதரித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்புகள்
- ↑ R, அன்னம் அரசு (2022-08-06). "ஸ்ரீரங்கம் பெரியார் சிலை: கனல் கண்ணன் சர்ச்சைப் பேச்சு... இரு தரப்பு விளக்கம்!" (in ta). https://www.vikatan.com/government-and-politics/controversy/srirangam-periyar-statue-controversy-speech-by-kanal-kannan.
- ↑ R, Rajkumar (2022-08-06). "உடைக்கனும்னு சொல்லி எஸ்கேப்பான கனல் கண்ணன்! ஸ்ரீரங்கத்துக்கு பெரியார் சிலை எப்படி வந்தது தெரியுமா?" (in ta). https://tamil.oneindia.com/news/chennai/kanal-kannan-controversy-how-did-srirangam-periyar-statue-come-about-469631.html.
- ↑ R, ஜோ.மகேஸ்வரன் (2022-08-06). "ஸ்ரீரங்கமும் பெரியாரும்; வரலாற்றுப் பின்னணி!" (in ta). https://news7tamil.live/srirangam-and-periyar-historical-background.html.