தியாகராஜா மகேஸ்வரன்
மாண்புமிகு தியாகராஜா மகேஸ்வரன் | |
---|---|
கொழும்பு தேர்தல் மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004 – 1 January 2008 | |
பின்வந்தவர் | மொஹமட் ரஜாப்தீன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | காரைநகர் | 10 சனவரி 1966
இறப்பு | 1 சனவரி 2008 | (அகவை 41)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசிய கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | விஜயகலா மகேஸ்வரன் |
தியாகராஜா மகேஸ்வரன் (ஜூன் 18 1960 - ஜனவரி 1, 2008] ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமாவார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் தமிழருக்கெதிரான மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இவர் ஜனவரி 1, 2008 இல் கொழும்பில் இந்துக் கோயில் ஒன்றில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ் பரி யோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பெரும்பான்மை சிங்கள் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தாலும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கெதிரான கட்சியின் நிலைப்பாடுகளை என்றுமே எதிர்த்தே வந்திருந்தார். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் இவர் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுத்து வந்தார். தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்ப்பிக்க உள்ளதாகவும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் எண்ணிக்கை 11 இலிருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டது[1].
படுகொலை
புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2008 இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்தார்.[2],[3],[4].
கொலை வழக்கு
மகேஸ்வரனை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பாகக் கைதான முக்கிய நபரான வசந்தன் என அழைக்கப்படும் ஜோன்சன் வலன்டைன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2012 ஆகத்து 27 ஆம் நாளன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளும் விசாரணை அறிக்கைகளும் உறுதி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்[5].
மேற்கோள்கள்
- ↑ "Maheswaran's pleas fell on deaf ears, By Dilrukshi Handunnetti". Archived from the original on 2008-01-04. பார்க்கப்பட்ட நாள் 2008-01-04.
- ↑ Leading Sri Lanka Tamil MP killed (பிபிசி)
- ↑ கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை (புதினம்)
- ↑ Maheswaran MP assassinated in Colombo (தமிழ்நெட்)
- ↑ Maheswaran’s killer sentenced to death பரணிடப்பட்டது 2015-09-11 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்ட், ஆகத்து 27, 2012
வெளி இணைப்புகள்
- குறுங்கட்டுரைகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- 1960 பிறப்புகள்
- 2008 இறப்புகள்
- இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ்த் தொழிலதிபர்கள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி மழைய மாணவர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்