தனிப்பாடல் திரட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Tamil book 1.jpg
Old Source Book in Tamil, compiled individual poems.jpg

சங்ககாலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்) அவ்வப்போது ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்கள் எட்டுத்தொகை என்னும் பெயரிலும், பத்துப்பாட்டு என்னும் பெயரிலும், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திரட்டப்பட்டுள்ளன.

பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்புப் பாடலும், 'நானாற்பது' என்னும் பெயரில் நான்கு நூல்களையும், 'ஐந்திணை' என்னும் பெயரில் ஐந்து நூல்களையும் திரட்டிக் காட்டியுள்ளது.

முத்தொள்ளாயிரம் நூலிலுள்ள பாடல்களும் திரட்டப்பட்டனவே.

தனிப்பாடற்றிரட்டு

இந்தத் தனிப்பாடல் திரட்டுக்கு முன்னோடியாகப் பல திரட்டு நூல்கள் இருந்தன.

தனிப்பாடல் திரட்டு 1291 பாடல்களைக் கொண்டது இந்தத் தொகுப்பு.

தொகுத்தவர் பெயர் பெரியதம்பி. இராமநாதபுரத்தில் சிவஞான தேவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மகன் சேதுபதி. இவரால் போற்றப்பட்டு வந்தவர் பொன்னுசாமித் தேவன் என்னும் புரவலர். இவர் இந்த நூலை எழுத்தில் பொறித்து ஈந்திடு என்றார். அதன்படி பொன்னிநாட்டில் தில்லையம்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த சந்திரசேகரன் என்னும் கவிராஜ பண்டிதனால் எழுதப்பட்டது இந்தத் திரட்டுநூல். இதனை மணலி என்னும் ஊரில் வாழ்ந்த பெரியதம்பி என்னும் அறிஞர் அச்சாக்கினார் பாடல்களைத் திரட்டிக் கொடுத்தவர் திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார்.

இந்த நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ஒன்றும் [1] நான்கு சாத்துக்கவிகளும் [2] [3] [4] [5] இரண்டு செய்திப் பாடல்களும் [6] [7] உள்ளன.

தனிச் சிறப்பு

தமிழில் உள்ள பழமையான நூல்களைச் சங்க இலக்கியம், அறநூல்கள், காப்பியங்கள், சமயப்பாடல் தொகுப்புகள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் எனப் பகுத்துக் காணும் நிலையில் உள்ளன. இவற்றில் சமயப் பாடல்கள் எனக் கொள்ளப்படுபவை பெரும்பாலும் திரட்டு நூல்களாகவே உள்ளன. இது சமயத்தை முதன்மையாக வைத்துக்கொள்ளாமல் தமிழின் சுவையை முதன்மையாக வைத்துக்கொண்டு தொகுக்கப்பட்டவை. சிலேடை, மடக்கு, திரிபு, முதலான தமிழ்நடைச் சுவையோடு கூடியவை. கட்டளைக் கலித்துறை, வெண்பா, கலித்துறை என்னும் பாவினங்களை மையமாக வைத்துத் தொகுக்கப்பட்ட பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. வெறி விலக்கல், நடுவெழுத்து அலங்காரம் முதலான துறையினப் பாடல்களும் இதில் உண்டு.

அடிக்குறிப்பு

  1. மகாபாரதக் கீர்த்தனம் செய்த முத்துராம முதலியார் அண்ணன்-மகன் கோ. சபாபதி முதலியார் செய்தது
  2. சென்னைத் துரைத்தனம் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்தும் இயற்றமிழ் ஆசிரியராகிய திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் செய்தது
  3. காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திய வித்வான் சபாபதி முதலியார் செய்தது,
  4. சென்னைத் துரைத்தனம் கல்விச் சங்கத்தில் தமிழ்ப்புலவராகிய அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் செய்தது,
  5. சென்னைக் கல்விச்சங்கத்து மதறசா-ஈ-ஆஜம் என்னும் பாடசாலையில் தலைமைப் புலமை நடாத்தும் கூவம் சு. சிதம்பர முதலியார் செய்தது
  6. தமிழ்ப்புலவர் கடலூர் இரிசப்ப உபாத்தியாயர் செய்தது,
  7. திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் செய்தது
"https://tamilar.wiki/index.php?title=தனிப்பாடல்_திரட்டு&oldid=18148" இருந்து மீள்விக்கப்பட்டது