முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம்.
முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும் முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன எனப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943-ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன போன்று பல இருந்தன என்றும், இதனால் தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்[1].தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும். இந்த இலக்கிய வகைக்கு,
“ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே,
சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்” (இ.வி.பாட்டியல், நூ.88)
என இலக்கண விளக்கப் பாட்டியல் இலக்கணம் கூறுகிறது.
ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5-ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார்.[2]
பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றெட்டு வெண்பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும்(1) சேரனைப் பற்றி இருபத்திரண்டும்(22) சோழனைப் பற்றி இருபத்தொன்பதும்(29) பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும்(56) சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும்.
மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.மன்னர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார். இந்நூலில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் பெண்பாற் கைக்கிளையாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்தொள்ளாயிரம் எழுந்த காலத்துத் தமிழர்தம் பண்பாட்டு நிலையை அறிய, அதன் ஆசிரியர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்.
அசுவனி முதலாக எண்ணப்படும் 27 விண்மீன்கள் பற்றிய அறிவு அன்று தமிழர்க்கு இருந்தது. மன்னிய நாண்மீன், ஆதிரையான் (பா.1) தென்னன் திருஉத்திராட நாள் (பா.7) என்ற குறிப்புகளை நோக்கி அறியலாம்.
பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (பா.9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (பா.19). நீரில் நின்று தவம் செய்தனர் (பா.25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (பா.34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (பா.35), முதலான செய்திகள் இதனுள் பதிவு செய்யப்பட்டுள்ளதனால் அக்காலத் தமிழர் பண்பாட்டினை அறிய முடிகிறது.
மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு
மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.[3] இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.
பதிப்புகள்
முத்தொள்ளாயிரப் பாடல்களை முதன்முதலில் இரா. இராகவையங்கார் 1905-ஆம் ஆண்டில் பாண்டித்துரைத் தேவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான செந்தமிழ்ப் பத்திரிகை மூலம் வெளியிட்டார்.அவர் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுப் பதிப்பித்த அப்பதிப்பில் 110 வெண்பாக்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த எஸ். வையாபுரிப்பிள்ளை முத்தொள்ளாயிரப் பாடல்கள் அடங்கிய புறத்திரட்டை 1938-ஆம் ஆண்டில் பல்கலைக்ககழகப் பதிப்பாக வெளியிட்டார்[1].புறத்திரட்டு என்னும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுட்களே இன்று முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிட்ட விருந்து என்னும் வகையைச் சாரும்.
முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய நடையில் உரையெழுதியவர் தமிழறிஞர் டி. கே. சிதம்பரநாதர். இவர் தமது பதிப்பில் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ளன 108 பாடல்களில் 99 பாடல்களுக்கு மட்டுமே உரை செய்துள்ளார். அவர் உரை செய்யா எஞ்சிய 9 பாடல்களைப் பொருள் நன்கு புலப்படாதவை எனக் குறிப்பிட்டு உரை எழுதாமல் பின்னிணைப்பாக வெளியிட்டார்[1].
1946-இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார்.அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 முத்தொள்ளாயிரம், இரட்டையர்கள், மறுமலர்ச்சி (இதழ்)[தொடர்பிழந்த இணைப்பு], சித்திரை 1948, யாழ்ப்பாணம்
- ↑ "Tamil Virtual University". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2019-09-20.
- ↑
- சோழனை வாழ்த்தியது
தீம் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.- பாண்டியனை வாழ்த்தியது
பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்- சேரனை வாழ்த்தியது
சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்:
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்:
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல். (சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)