சௌமியமூர்த்தி தொண்டமான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சௌமியமூர்த்தி தொண்டமான் Savumiamoorthy Thondaman | |
---|---|
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் | |
இலங்கை அமைச்சர் | |
பதவியில் 1978–1999 | |
இலங்கை நாடாளுமன்றம் for நுவரெலியா | |
பதவியில் 1947–152 | |
இலங்கை நாடாளுமன்றம் for நாடற்ற மக்கள் (நியமனம்) | |
பதவியில் 1960–1970 | |
இலங்கை நாடாளுமன்றம் for நுவரெலியா-மஸ்கெலியா | |
பதவியில் 1977–1989 | |
இலங்கை நாடாளுமன்றம் for தேசியப் பட்டியல் | |
பதவியில் 1989–1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மூனா புதூர், தமிழ்நாடு, இந்தியா | ஆகத்து 30, 1913
இறப்பு | அக்டோபர் 30, 1999 கொழும்பு, இலங்கை | (அகவை 86)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
துணைவர் | கோதை தொண்டமான் |
பிள்ளைகள் | ஆறுமுகம் தொண்டமான், இராமநாதன் தொண்டமான் |
வேலை | தொழிற்சங்கவாதி |
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
வாழ்க்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை
தொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார். இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூட, இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்தது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார்.
சௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா, சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார். அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார்.
1927இல், கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில், மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார். அவரின் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.
திருமணமும் குடும்பமும்
அச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இதன்படி 1932 ஆம் ஆண்டு, இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது. அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகாண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.
அரசியல் பிரவேசம்
1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் என்ற சங்கமொன்று இயங்கி வந்தது. இராசலிங்கம், வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர். காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர். சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.
ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும், செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும், இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.
இலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார். எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.
முதலாவது தொழிற்சங்க போராட்டம்
1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை, இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி. எஸ். சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார். பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.
நாடாளுமன்ற அங்கத்தவர்
1947 இல் 95 நாடாளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டு, 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் நாடாளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.
இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் நாடாளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்திய குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது நாடாளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை.
1952 சத்தியாகிரகம்
ஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். நாடாளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே நாடாளுமன்றம் செல்லவில்லை.
அசீசின் பிரிவு
ஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது. அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது. மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிபெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால், டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ், சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
அசீஸ் இ.இ.கா.வின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.
1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.
சிறி கலவரம் 1957
1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வாகன எண் தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார். இதனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது. இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது. இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும், வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுபட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் 1957 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்து, பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு வித்திட்டார்.
போட்டியிட்ட தேர்தல்கள்
டிசம்பர் 23, 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று நாடாளுமன்ற்றம் செல்ல முடியவில்லை. அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார். ஆகஸ்டு 4, 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை நாடாளுமன்றத்துக்கு நியமித்தார். மார்ச் 22,1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார்.
நாள் | தேர்தல் | ஆதரவு கட்சி | போட்டியிட்ட கட்சி | ஆசனம் | நிலை | இறுதி முடிவு | குறிப்பு |
---|---|---|---|---|---|---|---|
1947 | பொது | இல்லை | இ.இ.கா | நுவரெலியா | வெற்றி | ஐ.தே.க | முதல் முறையாக நாடாளுமன்ற நுழைவு |
ஏப்ரல் 28 1952 | பொது | இல்லை | போட்டியிடவில்லை | ஐ.தே.க. | குடியுறிமை பறிப்பு | ||
மார்ச் 19, 1960 | பொது | இல்லை | இ.இ.கா | நுவரெலியா | தோல்வி | ஐ.தே.க. | நாடாளுமன்றம்ம் செல்லவில்லை |
யூலை 1960 | பொது | இ.சு.க | போட்டியிடவில்லை | இ.சு.க வெற்றி | நாடாளுமன்றத்துக்கு விசேட நியமனம் | ||
மார்ச் 22 1965 | பொது | ஐ.தே.க | போட்டியிடவில்லை | ஐ.தே.க.வெற்றி | நாடாளுமன்றத்துக்கு விசேட நியமனம் | ||
மே 27 1970 | பொது | ஐ.தே.க. | போட்டியிடவில்லை | இ.சு.க. வெற்றி | |||
ஜூலை 21 1977 | பொது | ஐ.தே.க. | இ.தொ.கா | நுவரெலியா | வெற்றி | ஐ.தே.க. வெற்றி | அமைச்சரவையில் அங்கம் |
ஆதாரங்கள்
- மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கை தொழிற்சங்கவாதிகள்
- 1913 பிறப்புகள்
- 1999 இறப்புகள்
- இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்