செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

செல்வக் கடுங்கோ வாழியாதன் (செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் | செல்வக் கடுங்கோ வாழி ஆதன்) கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பொறையர் குடிச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் பெயர்கள் 4 வடிவங்களில் குறிப்பிடப்படுகின்றன.

  1. சேரமான் கடுங்கோ வாழியாதன்
  2. செல்வக் கடுங்கோ வாழியாதன்
  3. சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்
  4. கோ ஆதன் செல்லிரும்பொறை

சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் பெயரை பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார். சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந்தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்[1]. இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார்.

சேரமான் கடுங்கோ வாழியாதன்

சேரமான் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். புலவர் கபிலர் ஞாயிற்றோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். [2]

செல்வக் கடுங்கோ வாழியாதன்

புறநானூற்றில் குண்டுகட் பாலியாதனார்

பாடலிலேயே இவனது பெயர் 'செல்வக் கடுங்கோ வாழியாதன்' எனக் குறிக்கப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்தவர் இவனைச் 'சிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்' என்று குறிப்பிடுகிறார். புலவர் இவனைப் 'பூழியர் பெருமகன்' எனப் போற்றுகிறார். வஞ்சி முற்றம் வஞ்சிப் புறமதிலில் அலைபோதும் பொருநை ஆற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பகைவர் பணிந்து தந்த திறையை இவன் தன் நகைப்புல இரவலர்களுகெல்லாம் வாரி வழங்கினானாம். புலவருக்கு அவரது சிறுமையை நோக்காது தன் பெருமையை எண்ணி களிறு, மா, ஆனிரை, நெல்லோடு கூடிய போர்களங்கள் ஆகியவற்றை வழங்கினானாம். [3]

பதிற்றுப்பத்து தரும் செய்திகள்

பெயர் விளக்கம்
’செல்வக் கோ’ என்றும், [4] ‘செல்வக் கடுங்கோ’ என்றும் [5] இவன் போற்றப்படுவது நண்பர்களுக்கு இவன் செல்வம் போல் விளங்கியதால் எனத் தெரிகிறது. [6]
தமிழ் மன்றம்
போர் வெற்றியில் கிடைத்த இவனது செல்வமெல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் பயன்பட்டதனாலும் இவனைச் செல்வக்கோ என்றனர். [7]
கபிலர் பாடியது ஏன்
பாரி இறந்தான், காப்பாற்று என்று கபிலர் இவனைப் பாடவில்லையாம். கொடைப் புகழைக் கேள்வியுற்றுப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களைப் பாடினாராம். [8]
மாவள்ளல்
  • கொடுத்துவிட்டோமே எனக் கவலைப்படுவதோ, கொடுக்கிறோம் என மகிழ்வதோ இல்லாமல் வழங்கும் இவன் மாவள்ளல். [9]
  • பந்தர், கொடுமணம் ஊர்வாழ் பாணர்களுக்குத் தெண்கடல் முத்தும் அணிகலன்களும் வழங்கினான் [10]
  • இளம்பிள்ளைகளைப் பேணுவது போல இவன் முதியரைப் பேணினான். [11]
  • நாட்டுமக்கள் அச்சமின்றித் தேவருலகில் வாழ்வது போல வாழ்ந்தனர். [12]
போர்
  • சோழ பாண்டியரை வென்றான். [13] இந்த வேந்தர்களின் செம்மாப்பைத் தொலைத்தானாம். [14]
  • வில் வீரர்களுக்குக் கவசம் போன்றவன். [15]
  • விதியை வெல்லும் வீரன். தீமை நிகழப்போவதை உன்னமரம் அழுது காட்டினும் இவன் வெல்வான். [16]
பண்புகள்
  • பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியாதவன். [17] *வேள்வி முடித்த அந்தணர்க்கு அருங்கலம் வழங்கினான். [18] (இப்படிச் சொல்பவர் அந்தணப் புலவர்)
  • நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சாதவன், மகளிர்க்கு அல்லது மார்பு மலராதவன் [19]
வழிபாடு
அயிரை நெடுவரை போல வாழ்நாள் சிறக்கட்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துவதால் இவனது வழிபடு தெய்வம் அயிரைமலை ஐயப்பன் எனத் தெரிகிறது. பதிற்றுப்பத்து 70

பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்

  • செல்வக்கடுங்கோ வாழியாதனின் தந்தை அந்துவன்.
  • தாய் ஒருதந்தை என்பவன் ஈன்ற மகள் ‘பொறையன் பெருந்தேவி
  • நாட்டில் ஆங்காங்கே ஊர்களைத் தோற்றுவித்தான்.
  • பல போர்களில் வெற்றி கண்டான்.
  • வேள்வி செய்தான்.
  • மாய வண்ணன் இவனது நல்லாசிரியன். இவன் ஓதுவதற்காக நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையே வழங்கினான். அவனை அமைச்சனாகவும் கொண்டான்.
  • பாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என்று நூறாயிரம் காணமும் (அக்கால நாணயத்தின் பெயர்) பெருபுறமாக ‘நன்றா' என்னும் குன்றின்மீது]] ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்களையெல்லாவற்றையும் கொடுத்தான்.
  • 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

கோ ஆதன் செல்லிரும்பொறை

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் சமணம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் சமணத் துறவிகளுக்குப் பாறைக் குகைகளில் படுக்கைகள் உளியால் செதுக்கி உருவாக்கிக் கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. கருவூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு[20] இவனைக் "கோ ஆதன் சொல்லிரும்பொறை" எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படுபவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்[21]. இவன் மகன் பெருங்கடுங்கோ என்றும், பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் அக் கல்வெட்டு மூன்று கால்வழியினரைக் காட்டுகிறது. இக் கல்வெட்டு அசோகன் காலத்து எழுத்தில் உள்ளது. இந்த எழுத்துக்குத் தமிழி எனப் பெயர் சூட்டியுள்ளர். இந்த எழுத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகும்.

கால்வழி

பதிற்றுப்பத்து வழி
அந்துவன் <மகன்> செல்வக் கடுங்கோ வாழியாதன் <மகன்> பெருஞ்சேரல் இரும்பொறை <மகன்> இளஞ்சேரல் இரும்பொறை
புகழூர்க் கல்வெட்டு வழி
கோ ஆதன் செல்லிரும்பொறை <மகன்> பெருங்கடுங்கோ <மகன்> இளங்கடுங்கோ

குறிப்புகள்

  1. "History of Ancient Kerala" இம் மூலத்தில் இருந்து 2009-03-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090326050108/http://www.keralahistory.net/1b.htm. 
  2. ஞாயிறே! நீ பகலில் மட்டும் ஒளி வழங்குகிறாய். நீ மாலையில் மாண்டுவிடுகிறாய். இவன் இரவிலும் வழங்குகிறான். அதனால் உன்னைக்காட்டிலும் இவன் மேலானவன். - புறநானூறு 8
  3. புறநானூறு 387
  4. பதிற்றுப்பத்து 63
  5. பதிகம் 7
  6. சேர்ந்தோர் செல்வன் பதிற்றுப்பத்து 65
  7. கொண்டி மிகைப்பட தண்டமிழ் செறித்து பதிற்றுப்பத்து 63
  8. பதிற்றுப்பத்து 61
  9. ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான், ஈத்தொறும் மாவள்ளியன் பதிற்றுப்பத்து 61
  10. பதிற்றுப்பத்து 67
  11. இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்தான் பதிற்றுப்பத்து 70
  12. நாமம் அறியா எம வாழ்க்கை, வடபுல வாழ்நர் போல் வாழ்ந்தனர். பதிற்றுப்பத்து 68
  13. ஒரு முற்று இருவர் ஓட்டிய வெல் போரோயே பதிற்றுப்பத்து 63
  14. *கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த … வயவர் பெருமான் பதிற்றுப்பத்து 70
  15. வில்லோர் மெய்ம்மறை பதிற்றுப்பத்து 65
  16. ‘உன்னத்துப் பகைவன்’ - பதிற்றுப்பத்து 61
  17. பதிற்றுப்பத்து 63
  18. பதிற்றுப்பத்து 64
  19. பதிற்றுப்பத்து 63
  20. "புகழூர்க் கல்வெட்டு" இம் மூலத்தில் இருந்து 2007-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070807174658/http://acharya.iitm.ac.in/mirrors/vv/manuscripts/mssb.html. 
  21. செல்வம், வே. தி., 2002. பக்.91

உசாத்துணைகள்

  • புலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
  • செல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).

வெளிப்பார்வை