குண்டுகட் பாலியாதனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குண்டுகட் பாலியாதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு இடம் பெற்றுள்ளன. அவை: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனை காழ்த்திப் பாடிய புறநானூற்றுப் பாடல் எண் 387, நற்றிணைப்பாடல் எண் 220 ஆகியவை.

குண்டுகண் பாலி ஆதனார் என்று இப் புலவரின் பெயரைப் பிரித்துப் பார்ப்பது முறை. இவரது கண் குண்டாகப் பால் போல எண்மையாக இருந்திருக்கலாம் என்று எண்ணி இவரை உறுப்பால் பெயர் பெற்ற புலவர் என்பர்.

புறம் 387 தரும் செய்தி

செல்வக் கடுங்கோ வாழியாதன்

பூழிநாட்டை வென்று இவன் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்ததால் இவன் 'பூழியர் கோ' என்று போற்றப்படுகிறான்.

(புகழூர்த் தமிழ்ப்பிராமி கல்வெட்டில் இவன் 'கோ ஆதன் செல் இரும்பொறை' என்று குறிப்பிடப்படுகிறான்.)

நாடு

வஞ்சிநகர மதில்

இந்தச் சேர வேந்தன் வஞ்சி நகரக் கோட்டையில் ஒருந்துகொண்டு ஆண்டுவந்தான். பகையரசர்கள் தாம் நல்கும் திறைப்பொருளைத் தேரில் ஏற்றிக்கொண்டு உள்ளே நுழைய ஒப்புதல் கிட்டாமல் அந்த மதிலைச் சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

பொருநை ஆறு

இக்காலக் கருவூர் நகரை அடுத்து ஓடும் அமராவதி ஆறு சங்ககாலத்தில் ஆன்பொருநை எனப்பட்டது. சேர வேந்தர்களில் ஒரு பிரிவினர் பொறையர் எனப்பட்டனர். அவர்கள் இந்தக் கொங்குநாட்டுக் கருவூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தனர். இந்த ஆன்பொருநை ஆறுதான் இங்குப் 'பொருநை' என்று குறிப்பிடப்படுகிறது.

மேலைக் கடற்கரையில் இருந்த வஞ்சிநகரமும் இவனது மற்றொரு தலைநகர் எனலாம்.

கொடை

இவன் தன்னைப் பாடிய இப் புலவர்க்கு குன்றைச் சூழ்ந்திருக்கும் களிறுகளையும், பழக்கப்பட்ட பரிக்குதிரைகளையும், மன்றம் நிறைந்திருக்கும் ஆனிரைகளையும், விளைவைக் குவிக்கும் களத்துடன் கூடிய உழவர்களையும் பரிசிலாக நல்கினான்.

செம்மொழித் தொடர்

  • பகைப்புல மன்னர் = பகைநாட்டு மன்னர்
  • நகைப்புல வாணர் = புலமையால் ஆடிப் பாடி நகைப்பூட்டி வாழ்பவர்கள்

உவமை

கிணை என்னும் பறைக்கருவி ஆமை போல் இருக்குமாம். கிணையில் போர்த்தப்பட்டுள்ள தோல் ஆமையின் வயிறு போல வெண்மையாக இருக்குமாம்.

நற்றிணை 387 சொல்லும் செய்தி

தோழி தலைமகளைத் தலைமகனுடன் அவன் ஊருக்குச் செல்ல ஆற்றுப்படுத்தும் பாடல் குறிஞ்சித்திணைப் பாடல் இது.

மடன்மா

பனைமடலால் செய்த குதிரையை மடன்மா என்பர். அதனை இப்பாடல் 'உண்ணா நன்மா' என்று குறிப்பிட்டு மேலும் தெளிவுபடுத்துகிறது.தலைமகன் மடன்மா ஊர்ந்து வந்திருக்கிறான். இடுப்பில் கச்சு அணிந்திருக்கிறான் அந்தக் கச்சில் மணி கட்டப்பட்டிருக்கிறது. தலையில் எருக்கம்பூ மாலையைச் சூடியிருக்கிறான். அவனது பனைமடல் குதிரையைச் சூழ்ந்து ஊர்ச் சிறுவர்கள் வட்டமிட்டுக்கொண்டு வருகின்றனர். முழவு முழங்க ஊரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இவன் தன் குதிரைமேல் எழுதி வைத்திருக்கும் பெயரைப் பார்த்தவர் இவள் எம் ஊர்தான் என்கின்றனர். - எனவே அவனுடன் அவன் ஊருக்குச் செல் என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

"https://tamilar.wiki/index.php?title=குண்டுகட்_பாலியாதனார்&oldid=11904" இருந்து மீள்விக்கப்பட்டது