சுங்கிங் கட்டடம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Chungking Mansions
சுங்கிங் மென்சன் கட்டடம்
Front elevation of an 17 storey tenement building with street-level retail access
சுங்கிங் மென்சன் கட்டட முகப்புத் தோற்றம்
பொதுவான தகவல்கள்
முகவரி36–44, நாதன் வீதி, சிம் சா சுயி, ஹொங்கொங்
உரிமையாளர்பலர்
சுங்கிங் கட்டடத்தின் முகப்பு
13-08-08-hongkong-by-RalfR-Panorama2.jpg

சுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் நடுவில் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காளிகள், இலங்கையர் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் எனவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியிலும் நன்கு புகழ் பெற்ற கட்டடமாகும்.

ஹொங்கொங்கில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹொங்கொங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. இந்தக் கட்டடத்துக்குள் கிட்டத்தட்ட 80-க்கும் கூடுதலான தங்குமிட இல்லங்களும் உள்ளன[1], அவற்றில் ஆயிரக்கணக்கான அறைகளும் உள்ளன. இந்திய, பாக்கித்தானிய உணவகங்கள் நிறைந்து காணப்படும் கட்டடமும் இதுவே ஆகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹொங்கொங் வருவோர் இந்த கட்டடத்தைப் பற்றி அறிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாகும்.

1961 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடம், 17 அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. அத்துடன் இக்கட்டடத்தில் A, B, C, D, E என ஐந்து உள்ளடக்கத் தொகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இரண்டிரண்டு மின்தூக்கிகளைச் கொண்டுள்ளன. ஒவ்வொரு மின்தூக்கியின் உள்ளேயும், கட்டடத்தின் ஒவ்வொரு அடுக்கு மாடிகளிலும் 24 மணி நேர மூடியசுற்று தொலைக்காட்சி (CCTV) கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் ஹொங்கொங்கில் ஏனைய இடங்களில் காணப்படுவது போன்ற பளிங்குகள் போன்ற கட்டடங்களுடன் ஒப்பிடுகையிலும், இக்கட்டடத்தில் நிறைந்துக் காணப்படும் பாக்கித்தானியர் மற்றும் இந்தியரின் கடை வடிவமைப்புகள், கடைகளை கடைக்கு முன்னால் நீட்டியமைத்தும், நடைப்பாதையின் பரப்பை குறுக்கியும் உள்ள தோற்றம், இரைச்சல், செயல்பாடுகள், நூய்மை நிலை போன்றவை இந்தியாவில் அல்லது இலங்கையில் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்த நினைவை ஏற்படுத்தும்.

கட்டட அமைவிடம்

சுங்கிங்கின் முன்னால் மக்கள் கூட்டம்

இந்த கட்டடத்தின் அமைவிடம் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் மைய இடமான கவ்லூண் பிரதேசத்தில் சிம் சா சுயி எனும் நகரில் அமைந்துள்ளது. இவ்விடம் ஹொங்கொங்கில் மிகவும் மக்கள் நெரிசலான பகுதிகளில் ஒன்றாகும்.

எம்.டி.ஆர் தொடருந்து வசதி, பேருந்து, சிற்றுந்து வசதி, சிம் சா சுயி பேருந்தகம், நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars), சிம் சா சுயி பள்ளிவாசல், சிம் சா சுயி இந்து கோயில், கவ்லூண் பூங்கா, ஹொங்கொங் கலாச்சார மண்டபம், ஹொங்கொங் கலை அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இருத்தல், ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தொடருந்து, பேருந்து போக்குவரத்து வசதிகள், சீனாவின் எல்லைகளான லோ வூ மற்றும் லொக் மா சாவ் செல்வதற்கான கிழக்கு சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து வசதி, ஹொங்கொங் தீவுக்கு செல்வதற்கான இசுடார் பெறி வல்லத்துறை என பல வசதிகளை கொண்ட இடத்தின் நடுவில் இக்கட்டடம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

தமிழர்கள்

சுங்கிங் கட்டடத்தில் தமிழ் எழுத்துக்கள்

ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை (வசிப்புரிமை) பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள், ஹொங்கொங்கில் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், அதிகமானோர் இந்த கட்டடத்தின் அருகிலேயே வசிக்கின்றனர். சிலர் இக்கட்டத்தின் மேல் மாடிகளிலும் வசிக்கின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போரும் அடிக்கடி ஒன்று கூடும் இடமாகவும் இக்கட்டடமே திகழ்கிறது.

ஹொங்கொங்கில் இந்த "சுங்கிங் மென்சன் கட்டடம்" அமைந்திருக்கும் சிம் சா சுயி நகருக்கு வெளியில் தமிழர்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று. தமிழர்கள் அடிக்கடி வந்து போகும் ஒரு கட்டடமாக இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் விளங்குவதால், தமிழர்களை இந்த கட்டடத்திற்கு சென்றால் கட்டாயம் காணமுடியும். ஹொங்கொங்கில் இந்த கட்டடத்தில் தான் தமிழருக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள், தமிழ் திரைப்பட குறுந்தட்டுகள், உணவுப் பொருட்கள், புடவைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் போன்றனவும் உள்ளன.

இக்கட்டடத்தில் தமிழருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்குமிட இல்லங்கள், இலத்திரனியல் பொருள் கடைகள், குறிப்பாக தொகை அழைப்பேசி கடைகள், நாணய மாற்றகங்கள், களஞ்சிய சாலைகள் எனவும் உள்ளன. அவற்றில் பணிபுரியும் தமிழர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் உள்ளனர்.

ஹொங்கொங்கில் தமிழ் மொழி கற்பித்தல் வகுப்புகள் இந்த சுங்கிங் மென்சன் கட்டடத்தில், E தொகுதியில், 9 ஆம் மாடியில் "அலாவுதீன்" எனும் தமிழரின் உணவகத்திலேயே ஆரம்பத்தில் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்

ஹொங்கொங்கில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அதிகமானோர் அகதிக்கான கோரிக்கையாளர்களாகவே உள்ளனர். இவர்கள் ஹொங்கொங்கில் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும், அதிகமானோர் இக்கட்டடத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 மைல்களுக்கு அப்பால், யுங் லோங் எனும் நகர் பகுதியிலேயே வசிக்கின்றனர். இவர்களும் அடிக்கடி வந்து போகும் ஒரு இடமாகவே இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் விளங்குகின்றது.

குறிப்பாக ஹொங்கொங் அகதிகளுக்கான ஐக்கிய உயர் ஆணையம், குடிவரவு திணைக்களம், பன்னாட்டு நலன்புரி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு சமூகம் அளிக்கும் இலங்கைத் தமிழர்கள், இந்த சுங்கிங் மென்சனில் இருக்கும் தமிழர் உணவகங்களைத் தேடி வருவர். அத்துடன் திரைப்பட குறுந்தட்டு மற்றும் இந்திய பலசரக்கு கடைகளில் சமையல் பொருட்கள் கொள்முதலுக்காகவும் இக்கட்டடத்திற்கு வந்து செல்வர். நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு இடமாகவும் இக்கட்டடம் விளங்குகின்றது.

அத்துடன் அகதிகளுக்கான அத்தியாவசிய உதவிகளை செய்து வரும் ஒரு நிறுவனமான கிறித்துவ செயலகம் எனும் பதிவு செய்யப்பட்ட ஒரு நலன்புரி நிறுவனம் இக்கட்டடத்தில், E தொகுதியில், 16 – 17 மாடிகளில் அமைந்துள்ளது.[2] அதனால் அதற்கு வந்து செல்லும் ஏனைய நாட்டு அகதிகளைப் போலவே, இலங்கைத் தமிழரும் வந்து செல்வதைக் காணலாம்.

கட்டிட வரலாறு

சுங்கிங் கட்டடத்தின் புணரமைப்பு மாதிரி வடிவம்

இக்கட்டிடம் 1961 இல் கட்டப்பட்டதாகும். தொடக்கத்தில் குறைந்த தொகையிலான மக்களே வசித்த இக்கட்டத்தில், நாற்பதாண்டுகளில் நான்காயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கட்டடமாக மாறியது. காலப்போக்கில் மலிவு விலை தங்குமிடங்களின் இடமாக இக்கட்டடம் வரவேற்பு பெறவும், தற்போது அதிகமான மாடிகள் ஓரளவு வசதியுள்ளவர்களால் கொள்முதல் செய்யப்பட்டு தங்குமிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன; மாற்றப்பட்டுக்கொண்டும் உள்ளன. அத்துடன் இக்கட்டடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகளில் சிறிய அளவிளான கடைகளாக இருந்த போதிலும், கட்டிடத்தின் மூன்றாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையான மக்கள் வசிப்பிடமாக இருந்தவை, சில தனியார்களால் விலைக்கும், குத்தகைக்கும் வாங்கப்பட்டு, அவற்றை உடைத்தும், பல வீடுகளை ஒன்றாய் இணைத்தும் ஓரளவு வசதிகளுடன் கூடிய, இடவசதியான உணவகங்களாகவும் மாறியுள்ளன.

இக்கட்டடத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் நடைபெறுகின்றன. சில தொகை வணிக நிறுவனங்களும் இவற்றில் உள்ளன.

இக்கட்டடம் இன்று பார்ப்பதைப் போன்று அல்லாமல் 2003 க்கு முன்பு மிகவும் வசதியற்றதாகவும், பழமையாகவும் காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டு கட்டடப் புனரமைப்பாளார்களால் புனரமைப்பதற்குத் தோராயமாக HK$200 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் கோரப்பட்டது. ஆயினும் புனரமைப்புத் திட்டமிடலின் கீழ் HK$50 மில்லியன் டொலர்களில் முதலாம் மாடியும் இரண்டாம் மாடியும் புனரமைப்பு செய்யப்பட்டன. இரண்டாம் மாடியில் 360 சிறியக் கடைகள் கட்டப்பட்டன.

2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சுங்கிங் மென்சன் கட்டடத்தின் முகப்பில் வலது பக்கமாக தானுருளிப் படிகளுடன் புதிய வசதிகளுடன் கூடிய ஒரு புதியக் கடைத்தொகுதி சுங்கிங் எக்ஸ்பிரஸ் (Chungking Express) எனும் பெயரில் மீளுருவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.[3]

2007-ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுக்கின்படி 120-க்கும் மேற்பட்ட தேசிய இனத்தவர்கள் இந்த கட்டடத்திற்கு வந்து செல்வதாக அறிய முடிகிறது.[4] உலகமயமாதலின் ஒரு சிறப்பு முன்னுதாரணமாக, இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் சிறப்புடன் ஆசியாவில் விளங்குவதாக "டைம் மெகசின்" (TIME Magazine) எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.[5]

நாணய மாற்றகங்கள்

சுங்கிங் கட்டடத்தில் நாணய மாற்றகங்கள்

சுங்கிங் மென்சன் கட்டடத்தின் நுழைவாயில் பகுதியிலும், இரண்டாம் மாடியிலும் பல நாணய மாற்றகங்கள் உள்ளன. இவை ஹொங்கொங் நாட்டவரான ஹொங்கொங் சீனர்களுக்குச் சொந்தமானதும், இந்தியர்களுக்கும் பாக்கிஸ்தானியர்களுக்கும் சொந்தமானதுமாக உள்ளன. தமிழருக்கு சொந்தமானதும் உள்ளது. தமிழர் பணிப்புரியும் நாணய மாற்றகங்களும் உள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கான நாணயங்களை நியாயமான பெருமதியுடன் மாற்றிக்கொள்ளலாம்.

இருப்பினும் கட்டடத்திற்கு முன்னால் சில தரகர்கள் நாணயம் மாற்றித்தருவதாகக் கூறி ஈவு (கமிசன்) பெறும் நிகழ்வும் இங்கு காணப்படும். ஈவு கிடைப்பதால், கட்டடத்தின் வெளியில் இருந்தும் சில உல்லாசப் பயணிகளை சில தரகர்கள் இங்கு அழைத்து வந்து நாணயங்களை மாற்றிக்கொடுத்துவிட்டு கமிசன் எடுத்துக்கொள்வர். அதனால் சில நாணய மாற்றகங்கள் கமிசன் கொடுப்பதில்லை எனும் விளம்பரப் பலகையை நாணய மாற்றகங்களின் முன்னால் போட்டிருப்பர்.

உணவகங்கள்

சுங்கிங் கட்டடத்தில் நிலப்பகுதியில் ஒரு தமிழரின் உணவகம்
சுங்கிங் கட்டடத்தில் நிலப்பகுதியில் ஒரு இந்திய உணவகம்

உணவகங்கள் எனும்போது மிகவும் வசதியான, விலை கூடிய உணவகங்கள் இக்கட்டிடத்தில் இல்லை எனலாம். இருப்பினும் வழக்கமான பெட்டிக் கடை போன்ற அமைப்புகள் உள்ள கடைகள் முதல், ஓரளவு இடைத்தரமான வசதிகளைக் கொண்ட உணவகங்கள் வரை உள்ளன. கட்டிடத்தின் நிலப்பகுதியிலும், முதலாம் மாடியிலும் சிறிய அளவிளான தடார் உணவு (Fast Food) கடைகள் உள்ளன. கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து 17-ஆம் மாடி வரையிலான அடுக்குகளில் ஓரளவு வசதியான, இடவசதியுடன் கூடிய உணவகங்கள் உள்ளன. அவற்றில் அதிகமானவை பாக்கிஸ்தானியர்களின் உணவகங்களாகும். இந்தியர், நேப்பாளவர், வங்களாதேசத்தவர் உணவகங்களும் பல உள்ளன. மற்றும் ஆப்பிரிக்கர்களின் உணவகங்கள், சீன உணவகங்கள் மற்றும் வேற்றின மக்களின் உணவகங்களும் கூட உள்ளன.

கட்டடத்தின் நிலப்பகுதியில் தடார் உணவு வகையிலான இரண்டு மூன்று தமிழர்களின் உணவகங்களும் உள்ளன. ஆனால் அவற்றின் பெயர் தமிழ்ப்பெயராக அல்லாமல், அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருப்போரான பாக்கிஸ்தானியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, "லாவூர் பாஸ்ஃபூட்", "இஸ்லாமா பாத்", "பிஸ்மில்லா பாஸ்ஃபூட்" போன்று பெயர்கள் இடப்பட்டிருக்கும். இது ஒரு வகையில் பாக்கிஸ்தானியர்கள் ஊடான தமது உறவை வெளிப்படுத்தும் வகையாகவும் இப்பெயர்கள் இடப்படுகின்றன என்றும் கொள்ளலாம். இவற்றின் உரிமையாளர்கள் இஸ்லாம் மார்க்கதினராக இருப்பதும் இன்னொரு காரணமாகும். இருப்பினும் "சரவணா உணவகம்" எனும் பெயரில் ஒரு உணவகம் தமிழ் எழுத்துக்களுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டடத்தின் D தொகுதியில், நான்காம் மாடியில் "தென்னிந்திய உணவகம்" (South Indian Food) எனும் பெயரில் இக்கட்டடத்திற்குள் மிகவும் பழமையானதும், ஓரளவு வசதியானதுமான உணவகம் ஒன்றும் உள்ளது. புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்கள் (எம். ஜி. ஆர். முதல் அண்மையில் அஜித் குமார் வரை), பாடகர்கள், அமைச்சர்கள் போன்றோரும் இக்கடைக்கு வந்து சென்றுள்ளதாக நம்பமுடிகிறது.

மற்றும் ஹொங்கொங்கில் இந்தியத் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெறும் போது, இவ்வுணவகங்களில் இருந்தே உணவு வினியோகம் நடைபெற்றதாகவும் அறிய முடிகிறது.

தங்குமிட இல்லங்கள்

சுங்கிங் கட்டடத்தின் தங்குமிடங்களின் பெயர் பலகையும், மின் உயர்த்திக்காக வரிசையில் சுற்றுலாப் பயணிகளும்
சுங்கிங் கட்டடத்தின் அடுக்கு மாடிகளில் தங்குமிட இல்லங்களின் முகப்பு

தங்குமிடங்கள் எனும் போது ஹொங்கொங்கில் மிகவும் மலிவான விலையில் தங்குமிட வசதி இக்கட்டத்திலும், இதன் அண்மையிலான இன்னுமொரு கட்டடமான மெராடோ கட்டடத் தொகுதியிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஹொங்கொங்கில் மற்ற தங்குமிடங்களுடன் ஒப்பிடும் போது மூன்று நட்சத்திர வசதிகளைக் கொண்ட தங்குமிடங்களின் விலை HK$1500.00 டொலர்கள் என்றிருக்கும் போது, இக்கட்டத்தில் HK$ 650.00 டொலரில் இருந்து HK$ 100.00 டொலர் வரையிலான மலிவு விலையில் தங்குமிட அறைகளைப் பெறலாம். சில தங்குமிடங்களில் பேரம் பேசி விலையைக்குறைத்துப் பெறுவதும் காணப்படுகின்றது.

ஹொங்கொங் அரசு தங்குமிடங்களுக்கான சில அடிப்படை வசதியும் பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே தங்குமிட இல்லங்களுக்கான அனுமதி வழங்குகிறது. அத்துடன் அடிக்கடி ஹொங்கொங் அரசின் குறிப்பிட்ட துறைக்குப் பொறுப்பானவர்கள் வந்து பார்வையிடுவதற்கும் வருவர். இதனால் HK$ 100 டொலர் அறைக்கும் அரசு நிர்மாணித்துள்ள அனைத்து வசதிகளும் இருக்கும்.[6] எடுத்துக்காட்டாக: சுடுநீர் வசதி, குளிரூட்டி, காற்று வெளியேருவதற்கான வசதி, அவசர ஆபத்துகளின் போது முதலுதவி வசதி, தீயணைக்கும் வசதி, தூய்மை பேணல் என்பனவும் உள்ளடங்கும்.

தங்குமிடங்கள் அதிகமானவை ஹொங்கொங் சீனர்களுக்குச் சொந்தமானவைகளாகவே இருக்கும். ஒரு சில இந்தியர், பாக்கிஸ்தானியருடையவைகளும் உள்ளன. பெரும்பாலான தங்குமிடங்களில் தொழில் புரிவோர் வங்கதேசம், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாட்டவர்களாகவே இருப்பர். தங்குமிடங்களைப் பொருத்த வகையில் இந்திய, பாக்கிஸ்தானிய தங்குமிடங்களை விடவும், சீனர்களின் தங்குமிடங்கள் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பர். அநேகமாக பேசும் போதும் தன்மையாகப் பேசுபவர்களாகவும், தங்குமிடங்கள் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கபெரும்பாலும் இந்த தங்குமிடங்களை நடாத்தும் சீனர்கள் நன்கு ஆங்கிலம் பேசுபவர்களாக இல்லாவிட்டாலும், ஓரளவு பேசி சமாளிக்கக் கூடிய அளவிளான ஆங்கில அறிவையேனும் பெற்றவர்களாக இருப்பர்.

மேலும் தங்குமிடங்களில் தங்கியிருப்போர் தமக்குத் தேவையான உணவை அருகில் இருக்கும், தாம் விரும்பும் வகை உணவகங்களில் இருந்து எடுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. குறிப்பாகத் தமிழர்கள், தமக்கு தேவையான உணவுகளை அண்மையில் இருக்கும் தமிழர்களின் கடைக்கு அழைபேசி ஊடாக அழைத்து எடுப்பித்துக்கொள்ளலாம். உணவு மட்டுமன்றி தேனீர் மட்டும் என்றாலும் அழைப்பு விடுத்தால், தங்கியிருக்கும் அறைக்கு தேனீர் வந்துவிடும்.

பிற வணிகம் மற்றும் நிறுவனங்கள்

முதலாம் மாடியில் இந்தியர்களின் இலத்திரனியல் கடைகள்

இக்கட்டடத்தில் முதலாம் மாடியிலும் இரண்டாம் மாடியிலும் புடவைக் கடைகளும் உள்ளன. இலத்திரனியல் பொருட்களைத் தொகையாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யும் கடைகளும் நிறைய உள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொகை வணிக நிறுவனங்கள் பல இரண்டாம் மாடியில் உள்ளன. இந்த சுங்கிங் கட்டடம் அழைபேசி தொகை வணிகத்திற்குப் புகழ்பெற்ற இடமாகும். இரண்டாம் மாடியில் சில கடைகள் சில்லரை வணிகங்களை செய்வதில்லை.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதிகள் நடைபெறுகின்றன. அதேபோன்றே சீனாவில் இருந்து ஹொங்கொங் வரும் பொதிகளும் வந்த வண்ணமே இருக்கும்.

மூன்றாம் மாடி முதல் 17-ஆம் மாடி வரையான அடுக்குகளில் பல வணிகர்களுக்கு சொந்தமான களஞ்சியச் சாலைகளும் உள்ளன. சில தனியார் நிறுவனங்களும், சிறு தொழில் நிறுவனங்களும், விமானப் பதிவு நிலையங்கள், முகவர் பணிமனைகள், உதவி நிறுவனங்கள் போன்றனவும் இக்கட்டடத்தில் உள்ளன.

கூவியழைப்போர்

சுங்கிங் கட்டடம் முன்பாகக் கூவியழைப்போர்

சுங்கிங் மென்சன் கட்டடத்தின் முன்பாகவும், முகப்பிலும் கூவியழைப்போர் நூற்றுக்கணக்கில் இருப்பர். இவர்களே சுங்கிங் கட்டடத்திற்கு வருவோரை, இரண்டாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையிலான அடுக்குகள் உள்ள உணவகங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றிற்கான அழைப்பு அட்டையைக் காட்டி அழைத்து செல்வர்களாவர். சில உணவகங்களில் உள்ள உணவு அட்டவணையும் இவர்களின் கையில் இருக்கும். இக்கட்டடத்தின் உள் நுழையும் போதே, "உணவகம் வருகிறீர்களா? எமது உணவு வகைகளைப் பாருங்கள்." என்றும், "எம்மிடம் வாடகைக்கு அறைகள் உள்ளன, வேண்டுமா?" என்றும் அழைக்கத் தொடங்கிவிடுவர். இதை ஹொங்கொங்கில் வேறு எங்குமே காணமுடியாத ஒரு தொந்தரவான செயலாகப் பார்ப்போரும் உளர்.

இந்த கூவியழைப்போர் நடுவே போட்டியும் சண்டையும் கூட அடிக்கடி காணப்படும். இவர்களில் அதிகமானோர் பங்களாதேசத்தவர்களாவர், அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவின் கல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர்களும் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில பாக்கிஸ்தானியர்களும், ஆப்பிரிக்கர்களும் உள்ளனர். இவர்கள் அநேகமானோர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், ஹொங்கொங் வந்து தொழில் செய்வோர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்கள் மிகவும் குறைந்தளவு ஊதியமே பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுங்கிங் கட்டட நிர்வாகப் பணியகம்

சுங்கிங் மென்சன் கட்டட நிரவாகப் பணியகம்

சுங்கிங் மென்சன் கட்டடம் ஒரு குறிப்பிட்ட தனியாருடையது அல்ல; உரிமையாளர்கள் பலராவர். இருப்பினும் ஹொங்கொங்கில் பிற இடங்களில் இருப்பதனைப் போன்றே, இக்கட்டடத்தின் பராமரிப்பு (பேணுகை) சுங்கிங் மென்சன் நிர்வாகப் பணியம் எனும் பெயரில் ஒரு நிர்வாகத்தினரிடமே உள்ளது. இந்த நிர்வாகத்தினர் அனைவரும் ஹொங்கொங் சீனர்களாவர். இந்த நிர்வாகத்தினரின் பணிமனை, தொகுதி A, மூன்றாம் மாடியில் உள்ளது.

இந்த நிர்வாகத்தினரே இக்கட்டடதிற்கு வாயில் காப்போர்களைப் பணியமர்த்துவதுமுதல், அனைத்து பாதுகாப்பு நிலைகளையும் கண்காணிப்பவர்கள் ஆவர். இந்த நிருவாகத்தினரின் பணிகளாவன: மின் தூக்கியில் சன நெரிசல் ஏற்படும் போது உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்துச் சென்று மக்களை நெறிப்படுத்தி மின் தூக்கிகளுக்கு வழிநடத்துதல், மின் தூக்கிகளில் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கெமரா உதவியுடன் உற்புறத்தைக் கண்காணித்தல், ஒவ்வொரு மாடியிலும் என்ன நடைபெறுகிறது என 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொள்ளல் என கட்டடத்தின் பல பணிகளை நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் நடாத்தி வருகின்றனர்.

ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் அவற்றின் பதிவு காணொளி நாடாவை காவல் துறையினருக்கு கையளிக்கும் அதிகாரம் முதல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தினையும் இந்த நிர்வாகத்தினர் கொண்டுள்ளனர். அத்துடன் இந்த சுங்கிங் கட்டடம் தொடர்பான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புணரமைத்தல் போன்றனவும் இந்த நிர்வாகத்தினரிடமே உள்ளது.

யாருக்கேனும் ஒரு ஆபத்து அல்லது உதவி தேவையெனில் 999 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் சில நிமிடங்களில் ஹொங்கொங் காவல் துறையினர் வந்துவிடுவர். இக்கட்டடத்தில் ஏதேனும் சிக்கல் என்றால் வாயில் காப்பாளரிடம் அல்லது சுங்கிங் மென்சன் நிர்வாகப் பணியகத்தினரிடம் தயங்காமல் உதவி கோரலாம்.

போக்குவரத்து

சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து வெளியேற்றப் பக்கம் E (Exit E), சுங்கிங் கட்டடம் முன்பாக

இந்த சுங்கிங் கட்டடத்தில் தங்குமிட வசதியினைப் பெறுவோரில் மிகுதியானோர் போக்குவரத்து வசதியினைக் கருத்தில் கொண்டு தங்குபவர்களாக உள்ளனர். குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் தொகை வணிகர்கள் தமது கொள்முதல்களை ஹொங்கொங்கில் முடித்துக்கொண்டு, சீனாவுக்கு செல்லும் ஏற்பாட்டுடனேயே பெரும்பாலும் வருகின்றனர். இவ்வாரானவர்களுக்கு சுங்கிங் கட்டடத்தில் தங்குமிடம் பெறுவதால், இக்கட்டடத்தில் இருந்து சீனாவுக்கு செல்லும் எம்.டி.ஆர் தொடருந்து சேவைகளில் ஒன்றான சிம் சா சுயி கிழக்கு தொடருந்தகம் அருகிலேயே உள்ளது. இதனால் தமது வணிகப் பொதிகளை ஏற்றி இறக்கிக்கொள்வதற்கு இக்கட்டடமும் இதன் அயல் பகுதிகளும் ஏற்றதாக உள்ளன. மேலும் விமான நிலையத்திற்கான தொடருந்து, பேருந்து வசதிகளுக்கும் இவ்விடத்தில் ஏற்றதாக உள்ளது.

இவற்றைத் தவிர ஹொங்கொங்கில் உள்ள முக்கிய இடங்கள் அனைத்திற்கும் இவ்விடத்தில் இருந்து போக்குவரத்தை மேற்கொள்ள வசதியாக உள்ளது. ஹொங்கொங் தீவுப் பகுதிக்கான இசுடார் பெறி வல்லத்தின் ஊடான போக்குவரத்திற்கும் இவ்விடம் அண்மையில் இருப்பதும் ஒரு வசதியாகும்.

விமான நிலையத்திலிருந்து

ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்வதற்கான எம்.டி.ஆர் தொடருந்து சேவை

ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து வழியிலக்கம் A21 கொண்ட விமான நிலைய அதிவிரைவு பேருந்து காலை 6:00 முதல் இரவு 12:00 வரை தொடர்ச்சியாக உள்ளது. பெரிய பொதிகளானாலும் ஏற்றிச் செல்வதற்கான வசதி இந்த பேருந்துகளில் உள்ளது.

விமான நிலையத்தில் இருந்து வருவதானால், ஹொங் ஹாம் (Hung Hum) எனும் இடப்பெயர் பலகையே காணப்படும். அதில் வருவோர் சிம் சா சுயி எனும் இடத்தில் (சுங்கிங் மென்சன் கட்டடம் முன்பாக) இறங்கிக்கொள்ள வேண்டும். பேருந்தில் டிஜிட்டர் மின் பலகையில் ஒவ்வொரு நிறுத்தகத்தின் பெயரும் காட்டப்படும். அத்துடன் ஒலிப்பதிவு வடிவாகவும் எதிர்வரும் நிறுத்தகத்தின் பெயர் ஒலிபரப்பப்படும். ஒருவழி பயணக் கட்டணம் HK$33.00 டொலர்கள் அறவிடப்படுகின்றன.

விமான நிலைய எம்.டி.ஆர் அதிவிரைவு தொடருந்து ஊடாகவும் போக்குவரத்தினை மேற்கொள்ளலாம். விமான நிலையத்தில் இருந்து தொடருந்தில் சுங்கிங் மென்சன் கட்டடம் நோக்கி வருபவர்கள், சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து நிறுத்தகத்தில் இறங்கி, வெளியேற்றம் C அல்லது வெளியேற்றம் E (Exit-C or Exit-E) பக்கங்கள் ஊடாக வெளியேறினால், எதிரே சுங்கிங் மென்சன் கட்டடத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Coordinates: 22°17′46.94″N 114°10′20.89″E / 22.2963722°N 114.1724694°E / 22.2963722; 114.1724694

"https://tamilar.wiki/index.php?title=சுங்கிங்_கட்டடம்&oldid=28791" இருந்து மீள்விக்கப்பட்டது