கொரியப் பண்பாடு
கொரியப் பண்பாடு என்பது கொரியத் தீவகத்தின் மரபுவழிப் பண்பாட்டையே சுட்டும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது வடகொரியா, தென்கொரியா எனப் பிரிக்கப்பட்டு விட்ட பிறகு இருபகுதிகளின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் தோன்றலாயின.[1][2][3][4] யோசியோன் பேரரசு காலத்துக்கு முன்புவரை கொரியப் பண்பாட்டில் வெறியாட்டம் அல்லது முருகேற்றம் அல்லது மெய்ம்மறந்த ஆட்டம் என்ற உலகெங்கிலும் தொல்குடிகளில் நிலவிய மாயமந்திரச் சடங்கு, நடைமுறையில் ஆழமாக வேரூன்றி இருந்தது.[5][6]
மரபுக் கலைகள்
நடனம்
இசையைப் போலவே அரசவை நடனமும் நாட்டுப்புறக் கூத்தும் தெளிவாக வேறுபட்டிருந்தன. வழக்கில் இருந்த அரசவை நடனங்களாக, யியோங்யேமூ (정재무)( performed at banquets), இல்மூ (일무) ( performed at Korean Confucian rituals) ஆகிய இரண்டும் அமைந்தன. யியோங்யேமூ என்பது வட்டார நடனமான (향악정재, இயாங்காக் இயோங்யே) எனவும் நடுவண் ஆசியா, சீனாவில் இருந்து வந்த வடிவமான (당악정재, தாங்காக் இயோங்யே) எனவும் இருவகையாகும். இல்மூ என்பதும் குடிமை நடனமான (문무, முன்மூ) எனவும் போர்க்கள நடனமான (무무, முமூ) என இருவகையாகப் பிரிக்கப்பட்டன. கொரியாவின் பல பகுதிகளில் பல முகமூடி நாடகங்களும் பாவைக்கூத்துகளும் நிகழ்த்தப்பட்டன.[7] மரபான உடை என்பது கென்யா ஆகும். இது பெண்கள் விழாக்களில் அணியும் சிறப்புவகை ஆடையாகும். இது வெளிர்சிவப்பில் கழுத்தருகே பல குறியீடுகளுடன் அமையும்.
நிகழ்கால ஆக்கங்களில் மரபான குழு இசையுடன் கூடிய அரசவை நடனங்கள் இடம்பெறுகின்றன. தேக்கையோன் எனும் கொரிய மரபுவழி மற்போர், செவ்வியல் கொரிய நடனத்தின் மையக்கருவாக அமையும். தேக்கையோன் என்பது முகமூடி நடனத்தின் முழு ஒருங்கிணைவான இயக்க முறைமை ஆகும். இது மற்ற கொரியக் கலை வடிவங்களிலும் உடனியைந்து வரும்.
வண்ண ஓவியங்கள்
கொரியத் தீவகத்தின் மிகப்பழைய வண்ன ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களே ஆகும். சீனாவழி இந்தியாவில் இருந்து பௌத்தம் வந்த பிறகு பலவேறுபட்ட நுட்பங்கள் ஓவியங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. மரபு நுட்பங்கள் தொடர்ந்தாலும் பின்னர் இவையே முதன்மை வடிவங்களாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டன.
நிலவடிவங்கள், பூக்கள், பறவைகள் போன்ற இயற்கையோடு இயைந்த காட்சிகளே ஓவியங்களில் பேரளவில் இடம்பிடிக்கின்றன. மல்பரித் தாள் அல்லது பட்டுத் துணியில் மையைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரையப்படுகின்றன.
இலச்சினைப் பொறிப்பிலும் அழகு எழுத்துப் பொறிப்பிலும், 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மரபு நுட்பங்கள் வளர்த்தெடுக்கப் படுகின்றன.
கலைகள் நடப்பு வாழ்வாலும் மரபாலும் உருவாக்கப்படுகின்றன.எடுத்துக்காட்டாக, "இரும்பு வேலைகளின் இடைவேளை" எனும் ஒளிப்படத் தன்மை மிக்க ஃஏன் அவர்களின் ஓவியம் வார்ப்படப் பட்டறைகளில் உழைப்போர் தசைகளில் உருளும் வியர்வைத் துளிகளையும் தகரக் குப்பிகளில் அவர்கள் தண்ணீர் குடிப்பதையும் துல்லியமாக அழகுறக் காட்டுகிறது. யேயோங் சியோன் அவர்களது "குமாங் மலையின் சொன்னியோ கொடுமுடி" பனிமூட்டமிட்ட கொடுமுடி நிலத் தோற்றங்களில் மிகச் செவ்வியலான ஒன்றாகும்.[8]
தேநீர்
முதலில் மரபு மூலிகைகளால் தேநீர்கள் இறக்கப்பட்டு வழிபாடுகளில் மட்டும் கூடுதலான மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. சில தேநீர்கள் பழங்கள், இலைகள், விதைகள், வேர்கள் கொண்டு செய்யப்படுகின்றன. கொரியாவில் ஐவகைச் சுவையுள்ள தேநீர்கள் வழக்கில் உள்ளன. அவை இனிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு என்பனவாகும்.
நம்பிக்கைகள்
கொரியர்களின் முதல் சமயச் சடங்கு வெறியாட்டம் அல்லது ஆவியாட்டம் எனப்படும் மாயவித்தைச் சடங்கு ஆகும். இது பண்டைய நாளில் பரவலாக நிலவியது. ஆனாலும் இன்றும் இது வழக்கில் அருகித் தேயாமல் உள்ளது. முடாங் எனப்படும் பெண் வெறியாடிகள் ஆவிகளின் துணையைக் கொண்டு மெய்ம்மறந்த ஆட்டத்தின் வழியாக இம்மைக்கு வேண்டிய நலங்களைப் பெற்றுத் தருவதாக இன்றும் நம்புகின்றனர்.
பின்னர் சீனப் பேரரசுகளால் பண்பாட்டு பரிமாற்றம் வழியாக கொரியரிடம் பௌத்தம், கன்பூசியம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. கொரியப் பேரரசில் புத்த மதம் அரசின் சமயமாக விளங்கியது. புத்தத் துறவிகளுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. என்றாலும் யோசியோன் பேரரசில் பௌத்தம் அடக்கப்பட்டது. புத்தத் துறவிகள் நகரங்களில் இருந்து ஊர்ப்புரங்களுக்கு விரட்டப்பட்டனர். இதற்கு மாற்றாக கொரியவகைக் கன்பூசியம் சீனாவை விடக் கண்டிப்புடன் அரசு மெய்யியலாகப் பின்பற்றப்பட்டது.[9]
கொரிய வரலாற்று, பண்பாட்டு மரபில் மாயச் சமயச் சடங்கியலும் புத்த மதமும் கன்பூசியயமும் சார்ந்த நம்பிக்கைகள் சமயக் கடைப்பிடிப்பாகவும் இயல்பான உயிர்ப்பான பண்பாட்டுக் கூறாகவும் விளங்கின.[10] உண்மையில் இவை பல நூறு ஆண்டுகளாக கொரியரிடம் அமிதியாக ஒருங்கே நிலவின. இன்று கிறித்தவம் பரவலாக உள்ள தெற்கு, வடக்குப் பகுதிகளிலும் கூட இவை நிலவுகின்றன.[11][12][13] வடகொரிய அரசின் கெடுபிடியால் கூட இதைத் தடுக்க இயலவில்லை.[14][15]
இவாசியோங்
இவாசியோங் என்பது தென்கொரியாவில் சியோல்லுக்குத் தெற்கே உள்ள சுவொன் நகர கோட்டையாகும். இது 1796 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது சமகாலக் கொரியக் கோட்டை வளர்ச்சிக் கூறுபாடுகளையெல்லாம் தன்னகத்தே கொண்டதாகும். இதில் அழகிய அரண்மனையும் உண்டு. அரசர் நகரத்தருகில் உள்ள தன் தந்தையார் கல்லறையை அடிக்கடி பார்க்க கோட்டைக்குள் அமைக்கப்பட்டது.
இக்கோட்டை தரையிலும் மலைப்பகுதியிலும் கிழக்காசியாவில் வேறெங்கும் இல்லாதவகையில் கட்டப்பட்டதாகும். இதன் மதில்கள் 5.52 கி.மீ நீளமுள்ளவை. இதில் மதில் சுற்றில் 41 ஏந்துகள் அமைந்துள்ளன. அவற்றுள் நான்கு முதன்மை வாயில்களும் ஒரு வெள்ளப்பெருக்கு வெளியேற்ற வாயிலும் நான்கு கமுக்கமான வாயில்களும் ஒரு கோபுரமும் அடங்கும்.
இவாசியோங் 1997 இல் யுனெசுகோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "See "Same roots, different style" by Kim Hyun". Korea-is-one.org. Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ The Koreas: A Global Studies Handbook – Mary E. Connor. Google Books. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
- ↑ http://www.gugak.go.kr/download/data/dict_201011241951496.PDF
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
- ↑ Eckersley, M. ed. 2009. Drama from the Rim: Asian Pacific Drama Book (2nd ed.). Drama Victoria. Melbourne.p54,
- ↑ "A rare glimpse into a closed art world". Korea Is One. Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2010-06-01.
- ↑ Buddhism in Korea, Korean Buddhism Magazine, Seoul 1997
- ↑ Asia Society – Historical and Modern Religions of Korea
- ↑ "About Korea – Religion". Korea.net. Archived from the original on 2010-03-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ "South Koreans". Every Culture. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ "Culture of SOUTH KOREA". Every Culture. 1944-09-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ "Culture of NORTH KOREA". Every Culture. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ "CIA The World Factbook – North Korea". Cia.gov. Archived from the original on 2015-07-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
வெளி இணைப்புகள்
- Korea Society Podcast: The Origins of Koreans and Their Culture – Part I பரணிடப்பட்டது 2014-02-24 at the வந்தவழி இயந்திரம்
- Korea Society Podcast: The Origins of Koreans and Their Culture – Part II பரணிடப்பட்டது 2014-02-24 at the வந்தவழி இயந்திரம்
- Online gallery specialized on introducing North Korean artists பரணிடப்பட்டது 2016-01-18 at the வந்தவழி இயந்திரம்
- Early photographs project showing public scenes, behavior, buildings 1895–1930 பரணிடப்பட்டது 2015-10-04 at the வந்தவழி இயந்திரம்
- Brief Explanation of Korean Customs (general customs, respect, marriage, dining)
- http://blog.daum.net/ulsanlike/11788545 பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம் ulsan Korea
- Korean Style And Fashion