கன்பூசியம்
கன்பூசியம் அல்லது கன்பூசியஸ்நெறி (Confucianism) என்பது சீனத்து ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது கன்பூசியஸ் ('குங்-பூ-ட்சு’ அதாவது ”ஆசிரியர் காங்”, கி.மு 551 - 479) என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின்[1] (கி.மு. 771 - 476) ”ஒழுக்க-சமூகவரசியல் போதனை”களாக தோன்றி, பின்னர் ஆன் அரசமரபின் காலத்தில் (கி.மு 206 - கி.பி 220) இயக்கமறுப்புசார் (Metaphysical) கூறுகளையும் அண்டவமைப்புசார் (Cosmological) கூறுகளையும் ஏற்படுத்திக்கொண்டது. சின் அரசமரபிற்குப் பிறகு சட்டவியல் (இதுவும் ஒரு சீன மெய்யியல்) கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கன்பூசியஸ்நெறி சீனாவின் அதிகாரபூர்வ நாட்டுக் கொள்கை ஆயிற்று. பின்னர், சீனக் குடியரசு அமைந்ததைத் தொடர்ந்து ‘மக்களின் மூன்று கொள்கைகள்’ என்ற அரசியல்சார் கொள்கை கன்பூசியஸ்நெறியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.
கன்பூசியம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
டாசெங் கூடம், குஃபூவில் உள்ள கன்பூசியஸின் கோயிலின் முக்கிய கூடம் | |||||||
சீனம் | 儒家 | ||||||
|
கன்பூசியஸ்நெறியின் மையக்கரு மாந்தநேயமே, தனிநபர் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம், குறிப்பாய் தற்பண்படுத்தல் மற்றும் தன்னாக்கம் கொண்ட செயல்பாடுகள் மூலம், மனிதர்கள் கற்றுக்கொடுக்கப்படக் கூடியவர்கள், மேம்படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் முழுமைபடுத்தப்படக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையே அடிப்படை. கன்பூசியஸ்நெறி பண்புநலன்களை வளர்த்துக்கொளல் மற்றும் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறது. இவற்றுள் மிக அடிப்படையானவை ’ரென்’, ’இயி’ மற்றும் ’இலி’ என்பவை. ’ரென்’ என்பது ஒரு சமூகத்தில் உள்ள பிற நபர்கள் மீதான மாந்தநேயமும் பொதுநலம் மீதான கடமையுணர்வும் ஆகும். ’இயி’ என்பது நியாயத்தை நிலைநிறுத்த முனைதலும் நன்மை செய்ய விழையும் ஒழுக்க மனப்பான்மையும் ஆகும். ’இலி’ என்பது ஒரு சமூகத்தினுள் ஒரு மனிதன் எவ்வாறு முறையாக செயல்பட வேண்டும் என நிர்னயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். ’ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் உயிரான அறப்பண்புகளைக் காக்க வேண்டி ஒருவன் தன் உயிரையும் கூட தர வேண்டும் என்று கன்பூசியஸ்நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் என்ற மனிதர் சீனத்து பழைய மதங்களின் மீது நம்பிக்கைகொண்டவர் என்றபொழுதிலும், கன்பூசியஸ்நெறி என்ற கொள்கை மாந்தநேயம் சார்ந்ததாயும், இறைசாரா நெறியாகவுமே இருக்கிறது, இது மீஇயற்கையிலோ அல்லது உருவஞ்சார் இறைவனிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
கன்பூசியஸ் நெறியினால் வலுவாக தாக்கமடைந்த கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளின் பட்டியல் பெருநிலச் சீனா, தாய்வான், கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாம், மற்றும் சிங்கப்பூர் போன்ற சீன மக்கள் பெருவாரியாக சென்று குடியமர்ந்த பலப்பல நிலப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் கன்பூசிய கருத்துக்கள் நிலவினாலும், இச்சமூகத்தைச் சேராத சிலரும் தங்களை கன்பூசியர்கள் (கன்பூசியஸ் நெறியைப் பின்பற்றுபவர்) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர், கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாய் காணுவதற்குப் பதில் பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறியாய் காண்கின்றனர், அப்பிற நெறிகள் மக்களாட்சி, மார்க்சியம், முதலாளித்துவம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பௌத்தம் போன்றவை. ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியத்தை ஒரு சமயமாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.
கன்பூசியசின் கருத்துக்களானது பல நாடுகளில் வாழ்வியல் சிந்தனைகளில் பெரும்பங்கு வகித்தன. கன்பூசியசின் கொள்கைகள் கன்பூசியம் என்ற வாழ்க்கை முறையாக வளர்ச்சியடைந்து பின்பற்றப்படுகின்றன. கன்பூசியம் என்பது ஒரு மதம் அல்ல. ஆனால் கிறித்தவத்தின் அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் அணுகுமுறையை அது பகிர்ந்துகொள்கிறது. இதுவே கன்பூசிய தத்துவத்தின் அடித்தளமாகும். கன்பூசியம், முழுமையாக கருணை, சக மனிதனின் மீதான மரியாதை மற்றும் நன்னடத்தையை வெளிப்படுத்தும் நல்லொழுக்கங்களுக்கான பாராட்டு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.[2]
சமூக சடங்குகள்
கன்பூசியசின் கூற்றுப்படி, சமூக சடங்குகள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான குறிப்பிடத்தக்க வழிகளாகவே பார்க்கப்பட்டன.நாங்கள் எங்களுக்குள்ளான உறவுகளை ஆரோக்கியமான முறையில் பாதுகாத்திருக்க, எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை நியமித்துள்ளோம். அவரவருக்கான பொறுப்பு அல்லது பங்களிப்பு என்ன என்பதைக் குறித்தும், அதனை எவ்வாறு வாழ்ந்து விடுவது என்பதைக் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியத் தொடர்புகளை அடையாளம் காட்டினார்: அவை,
- ஆட்சியாளர் மற்றும் கையாளப்படும் பொருள்
- கணவன் மற்றும் மனைவி
- தந்தை மற்றும் மகன் அல்லது மகள்
- அண்ணன் மற்றும் தம்பி அல்லது சகோதர உறவுகள்
- நண்பன் மற்றும் நண்பன்
கன்பூசியத்தின் உள்ளடக்கமானது சீர்திருத்தவாத, இலட்சியப் பார்வையைக் கொண்டிருந்தது மற்றும் ஆன்மாவுக்குகந்ததாக இருந்தது. இத்தத்துவப் பார்வை குடும்ப ஒருங்கிணைப்புக்கு உயர்ந்த இலட்சியத்தை உருவாக்கியது: உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், மற்றும் அனைவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. கன்பூசியம் அரசுக்கு ஒரு உயர்ந்த இலட்சியத்தை பரிந்துரைத்தது: ஆட்சியாளர் தனது மக்களுக்கு தந்தையாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும், ஊழியர்கள் தங்கள் ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும், ஊழல் செய்தவர்களை மறுதலிப்பதற்கும் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
புதிய கன்பூசியம்
கன்பூசியத்தின் அகநோக்கு மற்றும் கருத்தியல் பிரிவானது மேற்கில் அறியப்பட்ட ஒரு கன்பூசிய சீர்திருத்தத்தை புதிய கன்பூசியமாக வெளிப்படுத்தியது. இந்த இயக்கமானது சீர்திருத்தவாதிகள், தொண்டு நிறுவனங்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சமூக மெய்யியலாளர்கள் ஆகியோரை உருவாக்கியது.
புதிய கன்பூசியத்தின் கருத்தியல் பிரிவு ஒரு மதத் தன்மையைக் கொண்டிருந்தது. அதன் இலட்சியங்கள் ஆழ்ந்ததாக இருந்தன. அவை சொர்க்கம், நரகம் என்ற பார்வையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆழ்ந்த, சிறந்த-முழுமையை நோக்கிய பார்வையிருந்தது. ஒருபுறம், கன்பூசியர்களின் மதிப்புகள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால், அவை சிலநேரங்களில் அற்பமானதாகத் தோன்றுகின்றன. அன்றாட வாழ்க்கை மிகவும் அறிமுகமானதாக இருப்பதால் நாம் அதன் ஒழுக்கநெறியை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒருவருக்கு நண்பராகவோ, அல்லது ஒரு பெற்றோராகவோ, அல்லது நிச்சயமாக ஒரு பெற்றோரின் குழந்தையாகவோ இருக்கிறோம். மறுபுறம், கன்பூசியத்தைப் பின்பற்றுவோர், நட்பு, பெற்றோர் தன்மை மற்றும் பெற்றோரைச் சார்ந்த குழந்தையின் மனப்பான்மை இவை குறித்த அறிந்திருந்த கொள்கைகள் மற்றும் இலட்சிய நோக்கு ஆகியவற்றை நமக்கு ஞாபகப்படுத்துகின்றனர். உண்மையான வாழ்க்கையில் நாம் அரிதாகத்தான் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலும், நாம் அனைவரும் உறவுகளின் மீது முழு கவனம் செலுத்துவதற்கு மிகவும் கடினப்பட்டு, வழக்கமான இயல்புகள் வழியாக செல்கிறோம். மனித ஆற்றலுக்குச் சாத்தியமான மிகச் சிறந்த நண்பன், மிகச் சிறந்த பெற்றோர், மிகச்சிறந்த மகன் அல்லது மகள் என்ற நிலையில் அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துதல் போன்ற அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை ஒழுக்க மற்றும் ஆன்மாவின் நிறைவுக்கான தீவிரமான வழியாக கன்பூசியம் எடுத்துரைக்கிறது.[3]
கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள்
கன்பூசிய மரபில் மிகவும் துதிக்கப்பட்ட அல்லது போற்றப்பட்ட புனிதமான வேதம் இதுவாகும். இத்தொகுப்பு, கன்பூசியசிற்குப் பின் தொடர்ந்து வந்த சீடர்களால் தொகுக்கப்பட்டிருக்கக்கூடும். இத்தொகுப்பினை வாசிக்கும் தற்காலத்திய வாசகருக்கு இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வெளிப்பாடுகள் சீரற்ற முறையில் தொகுக்கப்பட்டவையாகக்கூடத் தோன்றலாம்.[4]
பொதுக் காலம் 1190-இல், கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் அக்காலத்திய நான்கு கன்பூசிய புத்தகங்களின் தொகுதியாக மாறியது, அது 1905 ஆம் ஆண்டு வரை சீனாவில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது. புதிய-கன்பூசிய தத்துவவாதியான சூ சை(Zhu Xi (or) Chu Hsi) என்பவர் கன்பூசியத்தின் தத்துவவாதிகளால் எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வரிகளுக்கு அதிகாரமயமான தகுதிநிலையைக் கொடுத்தார். பின்னாளில் இத்தொகுப்பில் மெனிகசு என்பவரின் புத்தகம் (the Book of Mencius) மற்றும் சிறப்பான கற்றல் (the Great Learning) மற்றும் வழியின் தத்துவம் (the Doctrine of the Mean) ஆகியவையும் உள்ளடக்கப்பட்டன.
பழங்காலத்தின் ஒவ்வொரு சிறந்த தத்துவஞானிகளின் போதனைகளிலும் நடந்தது போல், கன்பூசியசின் சில கருத்துக்கள் மறு பொருள் விளக்கத்திற்கு ஆட்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மனிதர்கள் இயற்கையால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளலாம், மேலும் நடைமுறையில் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள் (இலக்கியத்தொகுப்பு 17: 2). மனித இயல்பைப் பற்றிய இந்த சிந்தனை மரபுவழி கன்பூசிய பள்ளியின் கூற்றுப்படி, மனித இயல்பு இயற்கையான அல்லது அசலான நிலையில் சிறப்புடையதாகும் என்பதாகும்.[5]
கன்பூசியத்தின் முக்கியக் கோட்பாடுகள்
கன்பூசியத்தின் அடிப்படையை ஜென் மற்றும் லி ஆகிய இரட்டைக் கோட்பாடுகளே நிர்மாணிப்பதாக கூறப்படுகிறது.
ஜென் (Zen)
மனிதாபிமானமுடைய மனப்பான்மை, நல்லதன்மை, நல்லுணர்வு, சக மனிதருக்கு நல்லது செய்யும் எண்ணம், மனிதனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் சுபாவம்
லி (Li or Lee)
இலாபத்திற்கான கொள்கை, பயன், ஒழுங்கு, பொருத்தமுடைமை, மனிதச் செயல்பாடுகளுக்கான திடமான வழிகாட்டு நெறிகள்
யி (Yi or Yee)
நியாயமுடைமை, நன்மைகள் செய்வதற்கான ஒழுக்க அமைப்பு
சியாவோ (Hsiao)
மகன் அல்லது மகள், தம் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் மூத்தவர்களை மதித்து, அன்புடனும், மரியாதையுடனும் நடந்து, அவரின் தேவைகளை பூர்த்தி செய்தல்
சிஹ் (Chee)
நன்னெறி சார்ந்த அறிவு, நன்மையையும், தீமையையும் பிரித்தறிந்து பார்க்கும் அறிவு (இந்தக் கோட்பாடு மென்சியசு என்பவரால் கன்பூசியத்திற்குள் உள்ளடக்கப்பட்டது.
இச்சுன் த்சு (choon dzuh)
நல்லியல்புத்தன்மையுள்ள மனிதன், மேன்மையான மனிதன், கண்ணியவான்
டே (Day)
மனிதர்களை ஆளும் சக்தி, நேர்மையின் சக்தி [6]
கன்பூசியத்தின் அரசியல் தத்துவம்
கன்பூசியஸ் அரசியல் தத்துவம், ஒரு ஆட்சியாளர் சுய ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் தொடங்குகிறது. தனது குடிமக்களுக்குத் தான் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதோடு, அவர்களை அன்புடனும், அக்கறையுடனும் நடத்த வேண்டும் எனவும் ஆணித்தரமாகச் சொல்கிறது. இவ்வாறு கன்பூசியம் சட்ட விதிகளைப் பறைசாற்றுவது பற்றிய தவறான விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையானது அவற்றை ஏற்பதைத் தடுக்கும் முயற்சியாக கருதப்படக்கூடாது என்கிறது.[7]
மேற்கோள்கள்
- ↑ இளவேனில் மற்றும் இலையுதிர் காலம் என்பது சீன வரலாற்றில் ஏறத்தாழ கி.மு. 771 முதல் 476 வரை, மஞ்சள் நதியின் வண்டல் சமவெளி, ஷாங்டாங் தீபகற்பம் மற்றும் உஹாய் மற்றும் ஆன்-இன் நதி வெளிகளில் நிகழ்ந்த காலம் ஆகும். இஃது தோராயமாக கீழச் சவு அரசமரபின் முதல் பாதியைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ‘இளவேனில் மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு’ என்ற நூலின் பெயரால் வந்தது ஆகும், இந்நூல் ’லூ’ என்ற மாநிலத்தின் கி.மு. 722-479-இனி காலவரிசை வரலாறாகும், இந்நூல் கன்பூசியஸால் எழுதப்பட்டது என்பது மரபு.
- ↑ Jade Mazarin. "Confucianism: Definition, Beliefs & History". Study.com. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2017.
- ↑ Judith A. Berling. "Confucianism". Asia Society. Center for Global Education. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2017.
- ↑ Tu Welming. "Confucianism". Encylopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2017.
- ↑ Cristian Violatti (31 August 2013). "Confucianism". Ancient History. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2017.
- ↑ "Main Concepts of Confucianism". Oriental Philosophy. Archived from the original on 2017-08-03. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2017.
- ↑ "Confucius". Stanford Encyclopedia of Philosophy. July 3, 2003 and revised on March 23, 2013. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
8.https://www.britannica.com/topic/xiao-Confucianism