கே. ஆர். ரங்கம்மாள்
கே. ஆர். ரங்கம்மா | |
---|---|
பிறப்பு | தெலுங்குப்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு |
இறப்பு | 2022 ஏப்ரல் 29 (வயது 89 - 90) தெலுங்குப்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு |
இறப்பிற்கான காரணம் | வயது முதிர்வு |
செயற்பாட்டுக் காலம் | 1967-2022 |
பெற்றோர் | பொன்னம்மாள், நல்லி செட்டியார் |
வாழ்க்கைத் துணை | ரங்கசாமி |
பிள்ளைகள் | 6 ஆண் பிள்ளைகள், 6 பெண் பிள்ளைகள் |
கே. ஆர். ரங்கம்மாள் (K. R. Rangamma; இறப்பு: 29 ஏப்ரல் 2022) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 500 இற்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், இந்தி மொழி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் ஆவார். இவர் 2008-இல் பாட்டி வேடத்தில், வடிவேலுவுடன் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு எனும் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இரசிகர்களால் பாராட்டைப் பெற்றது. இவர் குட்டீம்மா என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்திருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
கே. ஆர். ரங்கம்மா கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர், தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை நல்லி செட்டியார், தாயார் பொன்னம்மாள் ஆவார்கள். ரங்கம்மாவுக்கு 4 இளைய சகோதரிகள் இருந்தனர். திரைப்படங்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். எம். ஜி. ஆரின் விவசாயி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் உட்பட பல நடிகர்களுடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
குடும்பம்
ரங்கம்மாவின் கணவர் ரங்கசாமி காவல் அதிகாரியாக இருந்தவர். அவர் 1987 திசம்பர் 21 அன்று காலமானார். (நடிகர் எம். ஜி. ஆர். இறப்பிற்கு 2 நாட்களுக்கு முன் இறந்தார்) இவர்கள் 6 பெண் பிள்ளைகளையும் 6 ஆண் பிள்ளைகளையும் பெற்றனர். தனது இறுதிக்காலத்தில் பிள்ளைகளின் ஆதரவின்றி, உணவுக்காக மெரினா கடற்கரையில் கைக்குட்டைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்று வந்தார். பின்னர் வயது முதிர்வு, வறுமை காரணமாக சொந்த ஊரான தெலுங்குப்பாளையத்திற்கு திரும்பினார்.[1] [2]
மறைவு
ரங்கம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக 2022 ஏப்ரல் 29 அன்று தனது 89 ஆவது அகவையில் காலமானார்.[3][4][5]
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- விவசாயி (1967)
- நம் நாடு (1969)
- என் அண்ணன் (1970)
- நான் ஏன் பிறந்தேன் (1972)
- நல்ல நேரம் (1972)
- சூரியகாந்தி (1973)
- நினைத்ததை முடிப்பவன் (1975)
- நீதிக்கு தலைவணங்கு (1976)
- மீனவ நண்பன் (1977)
- படிக்காதவன் (1985)
- பணக்காரன் (1990)
- ரோஜா (1992)
- சீவலப்பேரி பாண்டி (1994)
- அவள் வருவாளா (1998)
- ரோஜாவனம் (1999)
- அலைபாயுதே (2000)
- கி. மு (2008)
- முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு (2008)
- படிக்காதவன் (2009)
- மகிழ்ச்சி (2010)
- காஞ்சனா (2011)
- பாட்டி (2013)
மேற்கோள்கள்
- ↑ மெரினாவில் கர்சீப் விற்கும் ரங்கம்மாள் பாட்டி - நடிகர் சங்கம் உதவ கோரிக்கை
- ↑ கர்சீப் விற்கும் நடிகை ரங்கம்மா பாட்டி: நடிகர் சங்கம் உதவ கோரிக்கை!
- ↑ "வடிவேலுடன் கலக்கிய மூத்த நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
- ↑ "நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்". Dailythanthi.com. 2022-04-29. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
- ↑ "பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி மறைவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.