குருதிப்புனல் (திரைப்படம்)
குருதிப்புனல் | |
---|---|
இயக்கம் | பி. சி. ஸ்ரீராம் |
தயாரிப்பு | கமல்ஹாசன் சந்திரஹாசன் |
கதை | கோவிந்த் நிகலனி |
திரைக்கதை | கமல்ஹாசன் |
வசனம் | கமல்ஹாசன் |
இசை | மகேஷ் மகாதேவன் |
நடிப்பு | கமல்ஹாசன் அர்ஜுன் நாசர் கே. விஸ்வநாத் கௌதமி கீதா |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | என். பி. சதீஷ் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 23 அக்டோபர் 1995 (தமிழ்) 26 அக்டோபர் 1995 (தெலுங்கு) |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ், தெலுங்கு |
குருதிப்புனல் (Kuruthipunal) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். தெலுங்கு மொழியில் துரோகி எனும் பெயரில் வெளியானது. பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஆதி நாராயணனும் (கமல்ஹாசன்) அப்பாசும் (அர்ஜுன்) காவல் துறை அதிகாரிகள். தீவிரவாத அமைப்பொன்றின் தலைவனான பத்ரி (நாசர்) குழுவினுள் காவல் துறையினரைச் சேர்ந்த இருவர் வேவுபார்ப்பதற்காக அனுப்பப்படுகின்றனர். மேலும் பத்ரியினை ஒரு சம்பவத்தில் கைது செய்து கொள்ளும் ஆதி நாராயணன் தீவிரவாதக் குழுக்கள் பற்றியும் விசாரணைகள் நடத்துகின்றார். ஆனால் அவரே அத்தீவிரவாத குழுக்களின் தலைவரென்பதனை அறியவும் இல்லை ஆதி. பின்னர் அறிந்து கொண்டபோது ஆதியின் குடும்பத்திற்கு தீங்குகள் விளைகின்றன. ஆதியின் மகன் தீவிரவாதிகளின் அதிஉயர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுக் காயமடைகின்றான். இதனை அறிந்து கொள்ளுன் ஆதி பத்ரியினைக் கொலை செய்யப்போவதாகவும் பயமுறுத்துகின்றார். இதனைப் பார்த்துப் பயப்படாத பத்ரி ஆதியின் குடும்பத்தாருக்குத் தீங்கு விளையப் போகின்றது எனக் கூறுகின்றார். அவர் தான் தீவிரவாதிகளின் தலைவன் என்பதனை அறியாத ஆதி அவரை விடுதலையும் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்ற இரு காவல்துறையினர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அத்தீவிரவாதிகளின் இடத்தினை நோக்கிச் செல்கின்றார் அப்பாஸ் அங்கு அவர் பத்ரியால் கைது செய்யப்பட்டு கொலையும் செய்யப்படுகின்றார். பின்னர் அப்பாஸைத் தேடிச் செல்லும் ஆதி அங்கு இருக்கும் வேவு பார்க்கும் காவல்துறையினரைச் சந்தித்துக் கொள்ளவே இதனை அறிந்து கொண்டு உள்ளே நுழைய முனைந்த தீவிரவாதிகளிடமிருந்து அவ்வேவு பார்ப்பவர்களை அடையாளம் காட்டாத வண்ணமிருப்பதற்காகத் தன்னைச் சுடவும் சொல்கின்றார் ஆதி. அவ்வாறே அக்காவல்துறை அதிகாரியும் செய்கின்றார்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ஆதி நாராயணன் (ஐபிஎஸ்)
- அர்ஜுன் - அப்பாஸ் (ஐபிஎஸ்)[1]
- நாசர் - பத்ரி
- கௌதமி - சுமித்ரா
- கீதா - ஜீனத்
- கே. விஸ்வநாத் - சீனிவாசன் ஐபிஎஸ்
- நிழல்கள் ரவி
- சுபலேகா சுதாகர் - சூரி
- அனுசா - மாலா
- 'பசி' சத்யா
- அஜய் ரத்னம் - சாவித்திரி கிருஷ்ணன் (ஆர். பி. ஜி) பயன்படுத்தும் தீவிரவாதி
- அரவிந்த் கிருஷ்ணா - சிவா
தயாரிப்பு
இப்படம் இந்தியில் வெளியான த்ரோஹ்கால் என்கிற படத்தின் மறு உருவாக்கமாகும். இந்தி வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, கமல் மற்றும் ஸ்ரீராமை 'த்ரோஹ்கால்' திரையிடலுக்கு அழைத்தார். இந்தியில் ஓம் பூரி மற்றும் நசிருதீன் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். படம் பார்த்ததும் தனக்குள் எழுந்த உணர்ச்சி குறித்து இன்று வரை விவரிக்க முடியவில்லை என்கிறார் ஸ்ரீராம். பார்த்து முடித்ததும், படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்வோம் என்று கமல் உடனடியாகச் சொல்ல, அதுவே சிறந்தது என்றாராம் ஸ்ரீராம்.[2]
தமிழில் திரைக்கதை மற்றும் வசனத்தை கமல்ஹாசன் எழுதினார். துரோகி, குருதிப்புனல் ஆகிய தலைப்புகள் உத்தேசிக்கப்பட்டன. தெலுங்கில் 'துரோகி' என்று பெயர் வைக்கப்பட்டது. தமிழில் குருதிப்புனல் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், சிலர் 'குருதிப்புனல்' என்கிற தலைப்பு வேண்டாம் என்றும், ரசிகர்களுக்கு இப்படியான கடுமையான தலைப்பு பிடிக்காமல் போகலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ரீராம் இந்தத் தலைப்பில் உறுதியாக இருந்தார். காரணம், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒரு நாவலின் பெயர் இது. இத்திரைப்படம் 30 நாட்களில் படமாக்கப்பட்டது.[2]
டால்பி தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் இதுவாகும். சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமல் தனது சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றி அமைத்தார்.[3]
வெளியீடு மற்றும் விமர்சனம்
குருதிப்புனல் 23 அக்டோபர் 1995 தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.[4] தெலுங்கில் துரோகி 26 அக்டோபர் 1995 அன்று வெளியானது. பாடல்களே இல்லாமல் வெளியான ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.
இந்தியை விட தமிழில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குருதிப்புனலைப் பார்த்த அசல் வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, "அசலான ஒரு மறு ஆக்கம் படம்" என்று சொன்னதைத்தான் பி.சி.ஸ்ரீராம் பெரிய பாராட்டாகப் பார்க்கிறார்.[2]
விருதுகள்
68வது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - கமல்ஹாசன்
- சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிறந்த திரைப்படம்
மேற்கோள்கள்
- ↑ "அர்ஜுனுக்கு கமல் போட்ட மேக்கப்!". குங்குமம். 3 செப்டம்பர் 2012. http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=4054&id1=3&issue=20120903. பார்த்த நாள்: 22 மே 2021.
- ↑ 2.0 2.1 2.2 "முழு திருப்தியைத் தந்த படம்: 'குருதிப்புனல்' பற்றி பி.சி.ஸ்ரீராம்". இந்து தமிழ். 24 அக்டோபர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/594282-a-remake-that-is-original-pc-sreeram-retrospect-on-25-years-of-kuruthipunal.html. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2020.
- ↑ "ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல்". ஆனந்த விகடன். 7 நவம்பர் 2017. https://cinema.vikatan.com/tamil-cinema/107023-kamal-is-the-one-who-introduced-modern-technologies-into-tamil-cinema. பார்த்த நாள்: 17 செப்டம்பர் 2020.
- ↑ "குருதிப்புனல் 25; 'பயம்னா என்னன்னு தெரியுமா', 'பிரேக்கிங் பாயிண்ட்'! கமல், அர்ஜுன், நாசர், பி.சி.ஸ்ரீராமின் மிரட்டியெடுத்த 'குருதிப்புனல்'!". இந்து தமிழ். 23 அக்டோபர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/594169-25-years-of-kuruthippunal.html. பார்த்த நாள்: 23 அக்டோபர் 2020.