காளமேகம் (திரைப்படம்)
காளமேகம் | |
---|---|
காளமேகம் திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | எல்லிஸ் ஆர். டங்கன் |
தயாரிப்பு | ஸ்ரீ தண்டாயுதபாணி பிலிம்ஸ் சேலம் மோகினி பிக்சர்ஸ் |
கதை | பாரதிதாசன் |
நடிப்பு | டி. என். ராஜரத்தினம் பிள்ளை என். எஸ். கிருஷ்ணன் எம். எஸ். முத்துகிருஷ்ணன்]] காளி என். ரத்தினம் எஸ். பி. எல். தனலட்சுமி பி. ஆர். மங்களம் டி. என். ராஜலட்சுமி டி. ஏ. மதுரம் |
படத்தொகுப்பு | ஆர். எஸ் மணி |
வெளியீடு | மே 17, 1940 |
நீளம் | 18986 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முன்னர் | மதுரை ஸ்ரீ தண்டபாணி பிலிம்ஸ் லிமிடெட், |
காளமேகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்க, ஆர். எஸ் மணி படத்தொகுப்பும், ஆர். என். சின்னையா இசையமைப்பையும் மேற்கொண்டனர். இத்திரைப்படத்தில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
காளமேகப் புலவரின் வாழ்க்கையை ஒட்டிய இத்திரைக்கதையில் ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்க அவருக்கு ஒத்து ஊதியவர் என். எஸ். கிருஷ்ணன்[1]. இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[2]
கதைச்சுருக்கம்
திருவரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிசாரக வரதனும் (டி. என். ராஜரத்தினம் பிள்ளை) அவரன் நன்பன் கிட்டுவும் (என். எஸ். கிருஷ்ணன்) வேலை செய்து வருகின்றனர். காவிரி ஆற்றின் படித்துறையில் தன் தோழிளோடு திருவானைக்காவல் கோயில் தாசி மோகனாங்கியும் அவள் தங்கை அஞ்சுகமும் தன் தோழிகளுடன் நீராடிவருகிறாள். அப்போது படித்துறைக்கு நன்பன் கிட்டுவுடன் வரதன் பாடியபடி வருகிறான். அந்தப் பாடலைக் கேட்டு மோகனாங்கி உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள். வரதனை பார்த்தபடி படித்துறையில் ஏறிவரும் மோகனாங்கி ஆற்றில் தவறி விழுந்துவிடுகிறாள். வரதன் நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான். அப்போது இருவரும் காதல் பர்வைகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
திருவானைக்கவாவலில் இறைவன் வீதி உலா வரும்போது மோகனாங்கி நாட்டியம் ஆடுகிறாள். அவளது ஆட்டத்தைக் காண வரதனும் கிட்டுவும் வருகின்றனர். வரதனிடம் வந்த அஞ்சுகம் தங்கள் இருப்பிடத்தைக் கூறுகிறாள். வரதன் மறுநாள் வருவதாக கூறுகிறான். அடுத்த நாள் வரதனும் கிட்டுவும் அவர்கள் இருக்குமிடம் செல்கின்றனர். வரதனும் மோகனாவும் காதலிக்கின்றனர். அதேபோல கிட்டுவும் அஞ்சுகமும் காதலிக்கின்றனர். இதையரிந்த மோகனாவின் தோழியான வீரி மோகனாங்கிமீது பொறாமை கொள்கிறாள். அவளை வம்புக்கு இழுந்து அவமதிக்க தன் தோழிகளோடு திட்டமிடுகிறாள். திருவானைக்காவலில் மாழ்கழித் திருநாள் வருகிறது. அப்போது தாசிகள் திருவெம்பாவை பாடுகிறார்கள். அப்போது வீரி, உங்கையிற் பிள்ளை' என்ற பாட்டைத் துவங்குகிறாள். மோகனாவும், மற்றவர்களும் அதைப் பின்பற்றுகிறார்கள். அந்தப் பாட்டில் வரும் எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க என்ற அடியை மோகனா சொல்லும் போது, அனைவரும் சிரிக்கிறார்கள். இதனால் மோகனா அவமதிக்கப்படுகிறாள்.
அன்றிரவு மோகனா வீட்டுக்கு வரதன் வந்து கதவைத் தட்டுகிறான். அப்போது மோகனா இனி, நான் சைவரல்லாதவரைத் தீண்டு வதில்லை என்கிறாள். இதனால் மனக்குழப்பத்துக்கு உள்ளாகிற வரதன் பின்னர் சைவனாக மதம் மாற நிச்சயிக்கிறான். இதனையடுத்து வரதனும், கிட்டுவும் சைவர்களாக மாறி திருவானைக்கவாவல் மடப்பள்ளியில் பரிசாரகராக சேர்கின்றனர்.
தேவியின் அருளால் கவித்துவம் பெற விரும்பி ஒரு பக்தன் கோயிலின் ஒரு பகுதியில் தவமிருந்து வருகிறான். மோகனாங்கியைக் காண கோயிலுக்குள்ளேயே வரதன் காத்திருக்கிறான். மோகனாங்கி வரதன் காத்திப்பதைக் காணாமல் தன் இருப்பிடம் சென்றுவிடுகிறாள். கோயில் பணியாளர்களும் கோயிலைப் பூட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். இந்நிலையில் தவமிருக்கும் பக்கனுக்கு அருளாபாளிக்க தேவி ஒரு அழகிய பெண்ணாக காட்சியளித்து அவன் வாயைத் திறக்கச் சொல்லுகிறாள். அவனோ தேவியை ஒரு தாசி என்று எண்ணி விரட்டிவிடுகிறான். பிறகு வரதனிடம் வரும் தேவி அவனை வாய் திறக்கச் சொல்கிறாள். தேவியை மோகனாங்கி என்று எண்ணிய வரதன் வாயைத் திறக்கிறான். தேவி அவன் நாவில் ஓம் என்று எழுதி அவனை கவிஞனாக ஆசிவழங்குகிறாள். காலையில் கோயிலைத் திறக்கிறார்கள். வரதன் தன் கவிமழையைப் பொழிகிறான் காளமேகம் என்ற பெயரை அடைகிறான். தேவியின் அருளால் அவன் கவியானது அறிந்து மோகனாங்கி மகிழ்கிறாள்.
திருமலைராயன்பட்டினத்தின் அரசனின் அரசவைக்கு முத்துப்புலவர் என்பவர் பரிசு பெற வருகிறார். அங்கு மன்னரின் ஆஸ்தான கவிஞனான அதிமதுரகவி என்பருக்கும் முத்துப் புலவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முத்துப்புலவர் அவமதிக்கப்படுகிறார். இதனால் முத்துப் புலவர் காலமேகத்திடம் வந்து தனக்கு நடந்ததைக் கூறி அதிமதுரகவியன் ஆணவத்தை அடக்குமாறு வேண்டி அவரை திருமலைராயன்பட்டினத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அங்கு அதிமதுரகவி ஆர்ப்பாட்டமாக பவனி வருகிறார். அப்போது காளமேகம், அதிமதுரகவியைக் கேலியாகப் பாடுகிறார். இதனால் அதிமதுரம் கோபமாகச் செல்கிறார். காளமேகத்தை மானபங்கம் செய்யத் தீர்மானித்து அரசனிடம் காளமேகத்தைப் பற்றிக் கோள் சொல்கிறார். அவர் சூழ்ச்சியில் அரசனும் வீழ்கிறான். அரசவை கூடியிருக்கிறது. காளமேகம் வருகிறார். அங்கு அதுமதுரகவிக்கும் காளமேகத்துக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையடுத்து தன் கவியாற்றலை நிரூபிக்க நெருக்குப் குழியின்மேல் உள்ள உறியில் இருந்தபடி எமண்டம் பாடி காளமேகம் வெல்கிறார். என்றாலும் அரசனாலும் அதிமதுரகவியாலும் காள மேகத்தை அவமதிக்கின்றனர்.
இதனால் காளமேகம் மனம் புண்படுகிறது. திருமலைராயன் நகர் மண்மாரி பெய்யப் பrடுகிறார். இதன்பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை- வரதன், காளமேகம்
- என். எஸ். கிருஷ்ணன் - கிட்டு
- சி. வி. வி. பந்துலு - அதிமதுரகவி
- காளி என். ரத்னம்- கந்தப்புலவர்
- எம். வி. மணி - முத்துப் புலவர்
- எம். எஸ். முத்துக்கிருஷ்ணன் - சிங்காரம்
- எஸ். முருகேசன் அரசன் திருமலை ராயன்
- மாஸ்டர் டி. வி நமசிவாயம் - இளவரசன்
- ஜோக்கர் ராமுடு - கமலக்கண்ணன்
- குஞ்சிதபாதம் பிள்ளை - குஞ்சிதப் புலவர்
- கே. ஆர். வேணுகோபால சர்மா - நட்டுவக் கிழவன்
- கே. எஸ். முத்தையா பாகவதர் - தேவி பக்தன்
- ராமாமிர்த சோழகனார் - மணியக்காரன்
- எஸ். பி. எல். தனலட்சுமி - மோகனாங்கி
- டி. ஏ. மதுரம் - அஞ்சுகம்
- பி ஆர். மங்களம் - சுந்தப்புலவர் மனைவி
- பி எஸ் ஞானம் - வீரி
- டி. என். ராஜலட்சுமி - தேவி
- டி. எம். பட்டம்மாள் - நடன மாது
- என். கே. பெரிய பாப்பு - ரத்னம்
- கே. சுப்புலட்சுமி - அமுதம்
- ஜி. எஸ். சரஸ்வதி - கல்யாணி
- எம். ஆர். சரஸ்வதி - பச்சை
- எஸ் ஆர் மீனாட்சி
- கே. டி. தனலட்சுமி - இதர தாசிகள்
- சிறுமி சிட்டானி ராஜலட்சுமி - வீரியின் வளர்ப்புப் பெண்
- மனோன்மணி அம்மாள் - மோகனாவின் தாய்
பாடல்கள்
காளமேகம் படத்திற்கான பாடல்களை பாரதிதாசன் எழுதியிருந்தார். இந்தத் திரைப் பாடல்களுடன் மணிவாசகரின் பாடலும், காளமேகப் புலவரின் பாடலும் கலந்துள்ளன. ஆர். என். சின்னையா இசையமைத்திருந்தார்.[3]
எண் | பாடல் | பாடியவர் | இராகம் | தாளம் |
---|---|---|---|---|
1. | வான ஜோதி! (வரதன் தோப்பில்) |
சுத்தசாலேரி | சாப்பு | |
2. | தக தக தே (மோகனா வீட்டில், வரதன் மடப்பள்ளியில்) |
இந்துஸ்தான் காபி | ஆதி | |
3. | எனதாசைக்குகந்தவன் (மோகனா நடனமாடும்போது) | காம்போதி | மிஸ்ரம் | |
4. | வருவதாய் உரைத்துச் சென்ற | காம்போதி | மிஸ்ரம் | |
5. | கையில் பணம் இல்லாமல் கலவி செய்ய வந்தீரோ | ஸஹானா | திரிபுடை | |
6. | பாடுரேன் நானே | பியாக் | ஆதி | |
7. | உங்கையிற் பிள்ளை | பூபாளம் | மிஸ்ரம் | |
8. | தாயே அருளவாய் | இந்துஸ்தான் தோடி | சாப்பு | |
9. | பத்தினித்தனம் புரிச்சி போச்சி | அடானா | ஆதி | |
10. | தாழ்சடையும் நீண்முடியும் (வரதன் மதம் மாறுதல்) |
கரகரப்பிரியா | ||
11. | இருகாதலர் சீர் சொல்லி ஆடுவமே (தாசிகள் சோபனப் பாடல்) |
பீம்பளாஸ் | ஆதி | |
12. | எளியேனையாள் உலக நாயகி | கௌரிமனௌகரி | ஆதி | |
13. | என்ன உதாரம் தேவி | நாதநாமக்கிரியை | ஆதி | |
14. | முத்தேவிமார்கும் | கல்யாணி | - | |
15. | வட்டங் கொடுத்த நிலவோ | இந்தோளம் | - | |
16. | நாணுகிறேன் என்று தன்முகங் காட்டிடும் | தோடி | - | |
17. | கொஞ்சும் கிளிகள் பார் | இந்துத்தானி மெட்டு | - | |
18. | நட்ட கல்லைத் தெய்வமென்பார் | கனடா | ஆதி | |
19. | உன்னைப்பற்றிய கவி நீயே | விருத்தம் ஷண்மகப்பிரியா |
- | |
20. | சுகித்திட வாராயோ | ஆதி | ||
21. | சீருள்ள வெண்குடை | சங்கராபரணம் | - | |
22. | கழியும் தியகடல் | சிமேஹேந்திரமத்திமம் | ||
23. | மெச்சுபுகழ் வேங்கடவா | கானடா | - | |
24. | வாரணங்க ளெட்டும் | காம்போதி | ||
25. | நஞ்சிருக்கும் தோலுரிக்கும் | புன்னாகவரளி | - | |
26. | சென் றளரை வென்ற திருமாலை | பிளஹரி | ||
27. | நஞ்சிருக்கும் தோலுரிக்கும் | புன்னாகவரளி | - | |
28. | நாத ப்பிரியமான நாதா | இந்துஸ்தான் காபி இந்துஸ்தான் கானடா |
சாப்பு ஆதி |
இசைக்கலைஞர்கள்
இப்படத்திற்கு ஆர். என். சின்னையாவும், வாத்திய கோஷ்டியும் இசையமைத்தார்கள்.[3]
இசைக்கலைஞர் | இசைக்கருவி |
---|---|
ஆர். என். சின்னையா | ஆர்மோனியம் |
எம். வி. சந்தாண்மையா வி. கோவிந்தசாமி |
பிடில் |
ஆர். என். தம்பி | வீணை |
கே. வி. நாயுடு | மிருதங்கம் |
ஸி குப்புசாமி நாயுடு | கிளார்னட் |
சாது கணபதி சாஸ்திரி | ஜலதரங்கம் |
பந்தேகான் சாகேப் | சாரங்கி |
ராமகிருஷ்ண ராவ் | ஆர்கன் |
நாகையா | புல்லாங்குழல் |
டி. எஸ். மணி | புல்புல்தாரா |
பார்த்தசாரதி நாயுடு | சேக்ஸபோன் |
குறிப்புகள்
- ↑ Memorable notes, ராண்டார் கை, த இந்து, டிசம்பர் 24, 2010.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19.
- ↑ 3.0 3.1 பாவேந்தரின் காளமேகம், சேகர் பதிப்பகம், சென்னை, 1997