காளமேகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.

காளமேகப் புலவர் ஒரு பார்ப்பனர். வைணவர். இவரது இயற்பெயர் வரதன். இவர் காலத்தே தென்னாட்டைச் சாளுவ மன்னன் திருமலை ராயன் (1453 - 1468) ஆண்டுவந்தான். சகம் 1375-ல் தோன்றிய இவன் கல்வெட்டு ஒன்று திருவானைக்காவில் உள்ளது [1]

இவரது நூல்கள்

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

பெயர்க் காரணம்

திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

சிலேடைப் பாடல்

பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடை

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்

பாம்பு - நஞ்சினைக் கொண்டிருக்கும். நன் மேல் தோலை உரித்துக்கொள்ளும். சிவபெருமான் தலை முடிக்கு மேல் இருக்கும். அது கொடிய சினத்தோடு இருக்கும்போது அதன் பல் நம் உடம்பில் பட்டால் அதன் நஞ்சிலிருந்து மீளமுடியாது.

வாழைப்பழம் - நைந்து இருக்கும். உண்ணும்போது அதன் தோல் உரிக்கப்படும். இறைவனுக்குப் படையல் செய்வர். கடுமையான பசியில் நம் பல்லில் பட்டுவிட்டால் மீண்டு வராது.

வெங்காயம் சுக்கானால்

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத,
சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் [2] [3]பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

இது சொக்கநாதப் புலவர் பாடலாகவும் காணப்படுகிறது.

வெங்காயம் சுக்கு ஆகுமா? இஞ்சிதானே சுக்காகும். வெந்தயம் உடலுக்குக் குளுமை தரும் மருந்து. சீரகம், பெருங்காயம் ஆகியனவும் மருந்துப் பொருள்கள். இந்த உலர்ந்த பொருள்களை வாணிகம் செய்யும் செட்டியார் ‘சரக்கு’ என்பர்.

விரும்பத் தக்க உடம்பு சுக்கு போல் உலர்ந்தால் வெந்தய மருந்தால் ஆவப்போவது என்ன? இந்த உடம்பாகிய விற்பனைச் சரக்குப் பொருளை ஆர் சுமந்துகொண்டு இருப்பார்? சீரான உள்ளத்தைத் தந்தீரேல், சுவாமி மலையில் இருக்கும் (செட்டியாராக வந்த) முருகனே! பிறவி உடம்பாகிய பெரும் காயத்தை நான் விரும்ப மாட்டேன்.

பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை

ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது

பாம்பு - படம் எடுத்து ஆடும். குடப்பெட்டிக்குள் அடைந்துகொள்ளும். ஆடும்போது ‘உஸ்’ என்னும் இரைச்சலை உண்டாக்கும். குடப்பெட்டியின் மூடியைத் திறந்தால் தன் முகத்தைத் தூக்கிக் காட்டும். அது கடித்து விடம் மண்டைக்கு ஏறிவிட்டால் மண்டையில் எலுமிச்சம் சாற்றை ‘பரபர’ எனத் தேய்ப்பர். அதற்குப் பிளவு பட்ட நாக்கு உண்டு.

எள் - செக்கில் ஆடும். எண்ணெய் குடத்தில் அடையும். ஆடும்போது செக்கில் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்து மூடியைத் திறந்தால் திறப்பவர் முகத்தை உள்ளே காட்டும். குளியலாடும்போது அதன் எண்ணெயைத் தலையில் இட்டடுப் ‘பரபர’ என்று தேய்ப்பர். எள்ளுப் பிண்ணாக்கும் உண்டு.

எழுத்தணிப் பாடல்

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது [4]

தன்னைக் காளமேகம் என்பதற்கான விளக்கம்

கழியும் பிழை பொருள் தள்ளி நன்னூலாங் கடலின் உண்டு
வழியும் பொதிகை வரையினில் கால்கொண்டு
மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னி
பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே

பிழையான பொருள்களைத் தள்ளி, நல்ல நூல்கள் இருக்கும் கடலில் நீர் பருகி, தமிழ்முனி அகத்தியன் இருக்கும் பொதிய மலையில் காலூன்றி மேய்ந்து, மொழியும் புலவர் மனத்தில் இடித்து, முழங்கி, மின்னலுடன் பொழிவதற்காகப் புறப்பட்ட காளமேகம் (கருமேகம்) நான். - இது பாடல் தரும் செய்தி

கற்பனை விளக்கம்

சீரங்கத்தில் திருமால் ஊர்வலத்தில் பிள்ளையார் வருவானேன் என்றதற்குக் காளமேகம் பாடியது

தந்தை பிறந்து இறவாத் தன்மையால் தன் மாமன்
அந்தம் பிறந்து இறக்கும் ஆதலால் - முந்தும் அளி
நாணிக்கு வில் வேலும் மாய்தலால் நன் மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண்

பிள்ளையாரின் தந்தை சிவன் பிறப்பதும் இறப்பதும் இல்லை. மாமன் திருமால் பிறந்து இறப்பதால் வாரிசு உரிமை தோன்றும். திருமால் மகன் காமன். அவன் வண்டினை அம்பாகக் கொண்டவன். காமன் எரிக்கப்பட்டு விட்டான். எனவே காணியாட்சி (வரிசு-உரிமை) கொண்டாடலாம் என்று பிள்ளையார் பெருமாள் ஊர்வலத்தில் வருகிறார். இது பாடல் விளக்கம்.

மேலும் பார்க்க

மேற்கோள்

  1. தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 பக்கம் 176
  2. வேண்டேன் என்னும் சொல்லுக்கு வேறு பாடமாகத் ‘தேடல்’ என்னும் சொல்-பதிவும் உண்டு
  3. சீரகம் -தேடேன் மோனை
  4. இதன் சரியான பாடமும் விளக்கமும்
"https://tamilar.wiki/index.php?title=காளமேகம்&oldid=18304" இருந்து மீள்விக்கப்பட்டது