கலிப்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதனை விட்டால் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன. வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர். [1]

கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. [2] துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.

கலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும்; நேர்ஈற்று இயற்சீரும் (தேமா, புளிமா), நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கூவிளங்கனி, கருவிளங்கனி) ஆகியன வரா.

கலிப்பா உறுப்புகள்

பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புகளைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புகள், 1. தரவு, 2. தாழிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.

இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.

கலிப்பா வகைகள் (தொல்காப்பிய நெறி)

கலிப்பாவானது ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலி, உறழ்கலி என நான்கு வகைப்படும். [3] இவற்றுள் கலிவெண்பாட்டைக் காரிகை, வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது.

கலிப்பா வகைகள் (காரிகை நெறி)

மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,

  1. ஒத்தாழிசைக் கலிப்பா
  2. வெண் கலிப்பா
  3. கொச்சகக் கலிப்பா

என்பனவாகும். இவற்றுள் . ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,

  1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
  2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
  3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

என மூன்று துணைப்பிரிவுகளும், வெண் கலிப்பாவுக்கு

  1. வெண் கலிப்பா
  2. கலிவெண்பா

என இரண்டு வகைகளும் உண்டு கொச்சகக் கலிப்பாவுக்கு,

  1. தரவுக் கொச்சகக் கலிப்பா
  2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா
  3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
  4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
  5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன. இம்முறைமையின்படி கலிப்பா பத்து வகைப்படும்.

வகை - யாப்பருங்கல நெறி

ஓசை வகை
  1. ஏந்திசைத் துள்ளல் ஓசை
  2. அகவல் துள்ளல் ஓசை
  3. பிரிந்திசைத் துள்ளல் ஓசை

என்று கலிப்பா 3 வகைப்படும். [4]

பா வகை
  1. ஒத்தாழிசைக் கலிப்பா
  2. வெண்கலிப்பா
  3. கொச்சகக் கலிப்பா

இனங்கள்

கலிப்பாவின் இனங்கள்:

  1. கலித்துறை
  2. கலித்தாழிசை
  3. கலிவிருத்தம்

அடிக்குறிப்பு

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 173
  2. துள்ளல் ஓசை கலி' என மொழி தொல்காப்பியம் 2-388)
  3. ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டே,
    கொச்சகம், உறழொடு, கலி நால் வகைத்தே. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 435)

  4. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 225
"https://tamilar.wiki/index.php?title=கலிப்பா&oldid=13295" இருந்து மீள்விக்கப்பட்டது