கம்பர் தனிப்பாடல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கம்பர் தனிப்பாடல்கள் பாடிய கம்பர் கம்பராமாயணம் பாடியவர் அல்லர் என்பதை பாடல்களில் அமைந்துள்ள நடையோட்டம் காட்டும். கம்பராமாயணம் அரங்கேறியது கி.பி. 885 [1] கம்பர் தனிப்பாடல்களில் வரும் பாடல்கள் ஒட்டக்கூத்தரோடு போட்டியிட்டுக்கொண்டு பாடியனவாக வருகின்றன. ஒட்டக்கூத்தர் விக்கிரமன், குலோத்துங்கன், இராசராசன் ஆகிய மூன்று அரசர்கள் காலத்தில் வாழ்ந்தவன்.[2] கம்பரின் தனிப்பாடல்கள் தொகுப்பு காட்டும் பாடல்கள் 69. இவற்றில் கம்பரும் அம்பிகாபதியும் பாடிய பாடிய பாடல், கம்பர் காலப் பாண்டியன், பாண்டியன் மனைவி, இடைக்காடர், ஏகம்பவாணர் மனைவி, கம்பர் வீட்டு வெள்ளாட்டி முதலானோர் பாடிய பாடல்களும் உள்ளன.[3]

நாட்டு எல்லை

  • சோழநாடு – கிழக்கில் கடல், தெற்கில் வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாடு – இவற்றுக்கு இடையில் 24 காதம் [4]
  • பாண்டிய நாடு – வடக்கில் வெள்ளாறு, மேற்கில் தெள்ளார், தெற்கில் கன்னியாகுமரி, கிழக்கில் கடல் – இடையில் 56 காதம்.[5]
  • சேரனாடு - வடக்கில் பழனி, கிழக்கில் தென்காசி, மேற்கில் கோழிக்கோடு, தெற்கில் கடற்கரை-ஓரம் – இடையில் பத்துக் காதம்.[6]
  • தொண்டைநாடு – மேற்கில் பவளமலை, வடக்கில் வேங்கடம், கிழக்கில் கடல், தெற்கில் பினாகினி – இடையில் 20 காதம் [7]

அறநெறி

  • பல்லில்லாப் பொக்கைவாய், வழுக்கைத்தலை, கண்ணிலே பார்வைப் பூச்சி போய்விட்டது. இந்த நிலையில் செல்லாப் பணத்தைத் தேடி அலைகின்றேன். பொன்னிநாட்டு மக்களே, எனக்குத் துணை யார் வருவார்கள்.[8]
  • சிவனடியார் புரவலர்-பால் கால் நீட்டுவர். இரவலர்-பால் கை நீட்டுவர் – என்றது. மருதவனத்து ஈசன்-அடியார் 70 பேர் புரவர்பால் கால் நீட்டி நடந்து சென்று அவர்கள் தந்த பொருளை இரந்துண்ணும் இரவலர்களுக்குத் தருவர் என்றது.[9]
  • கம்மங் கருதைக் கைவிரல்களால் நிமிடி, அதனை உள்ளங்கையில் கைத்துக் கசக்கி அதில் இருக்கும் சொங்கு போக ஊதித் தின்னுவது போல மக்களிடையே இருக்கும் தீயவர்களை விலக்கி நல்லவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.[10]
  • கொல்லிமலை நாடா! தவளை நீரை உண்ணாமல் கத்திக்கொண்டே இருக்கும். தாழ்ந்தவர்கள் தம்மைப் புகழமாட்டார்கள் என்பதை உயர்ந்தவர்கள் அறிவர். எனவே ஊர் வாயை மூட உலைமூடி இல்லை.[11]

உழவர் மேன்மை

  • வேளாளர் மட்டுமே காப்பாறுவார்கள். எனவே செட்டி, செக்கார், பார்ப்பார் வாசல் பக்கம் நான் செல்லவேண்டுவதில்லை.[12]
  • வேளாளர் என்னும் உழவரின் மேன்மையை விளக்கும் பாடல் [13]
  • காராளர் என்னும் உழவரை கடலை ஆடையாக உடுத்திக்கொண்டிருக்கும் நிலமகள் தனக்கென்று பெற்றுச் சீராட்டிக்கொண்டிருப்பதால் மதுரையிலிருக்கும் திருமால் பூமாதேவியையே பார்த்துக்கொண்டிருக்கிறான். சிவன் அவளைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். உழவரைப் பெற்றெடுத்ததால் நிலமகளுக்கு இந்தச் சிறப்பு.[14]

நன்மக்கள்

  • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் அடையா நெடுங்கதவும் அஞ்சாதே என்று அடைக்கலம் தரும் சொல்லும் உடையவன் என்று போற்றியது.[15]
  • சீராமன் என்னும் வண்ணான் நன்றாகத் துணியை வெளுத்தான் [16]
  • அம்பட்டத் தம்பி என்னும் முடிதிருத்தும் தொழிலாளியைப் போற்றிப் பாடியது [17]
  • அழகி வல்லி என்பாளுக்குத் தொப்பையை மட்டும் பிரமன் பெரிதாகப் படைத்துவிட்டான்.[18]
  • மாமண்டூர்ச் சிங்கன் உலைக்களத்திற்குச் சென்று ஆழியான் திருமால் ஆழியும், அயன் எழுத்தாணியும், கோழியான் வேலும், பூழியான் (திருநீறு பூசிய சிவன்) மழுவும் செய்து தரும்படி கேட்பார்களாம்.[19]

அகப்பொருள் சார்ந்த பாடல்கள்

  • காமப் பெருநெருப்புக்கு ஈரம் உண்டோ எனப் பாடும் அகப்பொருள் பாடல்.[20]
  • விசயன் என் கண்ணில் புகுந்துகொண்டதால் உயிர் போனாலும் என் கண்ணைத் திறந்து காட்டமாட்டேன் – என்கிறாள் ஒரு தலைவி [21]
  • பொன்னி நாட்டுத் தத்தன் அழகில் பெண் மயங்கியதைப் கூறும் பாடல் இயைபுத் தொடை நலம் மிக்கதாக விளங்குகிறது.[22]
  • ஆறையர் கோன் வாணன் விலங்கு கொண்டுவா என்றானாம். அந்த விலங்கு எனக்கோ, சேரனுக்கோ, சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, யாருக்கோ என்று தலைவி ஒருத்தி கூறும் பாடல்.[23]
  • காதல் விதிப்படி நிறைவேறும் என்று தலைவி கூறும் பாடல் [24]
  • உறங்கு என்னும் சொல் மீண்டும் வரும்படிப் பாடி அதில் எல்லாம் உறங்கின அவள் உறங்கவில்லை என்று கூறும் அகப்பொருள் பாடல்.[25]
  • பெருமாள் என்னும் பெண் விழிப்பார்வை பாய்ச்சிய தீ என் நெஞ்சில் எரிகின்றதே. என்ன செய்வேன். – என்கிறார் கம்பர். இது அம்மையப்பர் இடப்பக்க அம்மையைத் திருமால் எனக் காட்டும் கோட்பாடு.[26]
  • அம்பல சோமாசி என்பவனைத் துரை என்று குறிப்பிடும் ஒருத்தி அவன் நினைவாகவே இருக்கும் தன் காதலை வெளிப்படுத்தும் பாடல் [27]
  • சீவிலி மாறன் வரதுங்கராமன் மீது காதல் கொண்டவளாகச் சொல்லும் அகப்பொருள் பாடல்.[28]
  • நெய்வேலிச் சீவிலிமாறன் தமிழை ஆய்ந்திருக்கும் அருமையைக் குறிப்பிட்டு அவன் அணிந்திருக்கும் வேப்ப மாலையை விரும்புவதாக ஒரு பாடல்.[29]
  • வேம்பு போல் கசக்கும் சொல்லாகிலும்,உன் வேப்பந்தார் மாலையையாகிலும் இவளுக்குத் தரவேண்டாமா என ஒருத்தி வேண்டுவதாக அமைந்துள்ள அகப்பொருள் பாடல் சுவை மிக்கது.[30]

அச்சுதன்

  • தினை விதைத்தவர் முற்றத்தில் தினை காயும். நெல் விதைத்தவர் முற்றத்தில் நெல் காயும். அதுபோல அச்சுதன் முற்றத்தில் பகையரசர் முரசும்சங்கும் காயும்.[31]
  • நெல்வேலி இராமனாகிய அச்சுதன் வலிமையில் வாலிக்கு இணையானவன்.[32]
  • அச்சுதன் பிறந்த நாள் விழாவின்போது அவன் முற்றத்தில் முரசு முழங்கும் ஓசையைக் காட்டிலும் சிறைப்பட்ட அரசர்களின் கால் விலங்கை வெட்டிவிடும் ஓசை மிகுதியாகக் கேட்கும்.[33]
  • அச்சுதன் என்பவனின் முரசின் சிறப்பு பாராட்டப்பட்டுள்ளது.[34]

அரசர் முதலானோர்

  • மாறன் குலசேகரப் பெருமாள் என்பவன் பொற்கைப் பாண்டியன் ஆன வரலாறு.[35]
  • கடகரி வாணன் என்பவன் பொற்கைப் பாண்டியன் என்னும் பெயர் மாற்றத்துக்குக் காரணமாக இருந்தான்.[36]
  • நாறை அரசன் வானபூபதி தனக்குப் பரிசளித்துச் சிறப்பித்ததை இந்தக் கம்பர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.[37]
  • தனக்குப் பரிசில் வழங்கிய பின்னர் கண்டுகொள்ளாமல் நகர்ந்த மன்னன் ஒருவனை அகளங்கா துங்கா [38] என அழைத்து அன்றிருந்த நிலப்பரப்பு இன்று அகன்றிருக்கிறதா, இல்லையே, நீ மட்டும் 24 அடி நகர்ந்து சென்றுவிட்டாயே, என்று ஏளனமாகப் பாடுகிறார்.[39]
  • கொல்லிமலை அரசன் தன்னைப் பேணாமையால் சினந்து ‘நீ முனிந்தால் எங்கட்கு இடம் இல்லையோ என்று பெருமிதத்துடன் பாடுகிறார்.[40]

வாணன்

  • வல்லாள களங்கன் என்னும் வாணர் குடி அரசனைப் போற்றியது [41]
  • கோனாறை (கோன் நாறை) என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மகதேவன் என்னும் வாண அரசன் இலையில் போடும் சோற்றுக்கு அரிசி கேட்டபோது யானை கொடுத்ததைப் பாடியது.[42]
  • தென்னாறை (தென் <தெற்கு நாறை) வாணன் கற்றவர்களுக்கு யானையைக் கொடுக்கிறானே பொன்னை எவ்வாறு கொடுப்பான்.[43]
  • மக தேவன் நாறை நகர் காவலன் வாணபூபதி தந்த பரிசைக் கொண்டுவரும் புலவன் ஒருவன் ‘நீயும் சென்றால் பெறலாம்’ என்று பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்தும் கட்டளைக் கலித்துறைப் பாடல்.[44]
  • பூக்கொடி தாங்கி நிற்காத கொம்பு உண்டோ? இல்லை அல்லவா, அதுபோல மாகதர்கோனாகிய மகதேவன் என்னும் என்னும் வாண அரசனை நினைக்காதவர்கள் உண்டா – என்றது [45]
  • களப்பாள் (வாணன்) போர் செய்யச் சென்ற இடத்துக்கெல்லாம் பருந்து, நரி, பேய் முதலாவை விருந்து கிடைக்குமென்று உடன் சென்றன.[46]
  • வாணன் வேந்தர்க்கெல்லாம் வரிசை என்ற பெழரில் பரிசுகளை வழங்கினான்.[47]
  • பாண்டியன் மகதேவனிடம் தோற்றான்.[48]
  • இந்த வாண அரசன் உதவியோடு பாண்டியன் அரசாண்டான் என்றது.[49][50]
  • வாணன் ஒரு கொடைவள்ளல் எனல்.[51]
  • ஆறை ஏகம்பவாணன் பாண்டியனை வென்றான் என்னும் செய்தி வானவர்கோன் இந்திரன் தலையில் தன் சங்கை உடைக்கும் வலிமை மிக்க பாண்டியன் ஆறை ஏகம்பவாணனின் பேய்த்தேர் வருமென்று அஞ்சி வேம்பைக் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறான் என்று நயம்பட ஒரு பாடல் தெரிவிக்கிறது.[52]

நாடு

  • தொண்டை நாட்டு அரசு தாதகி (ஆத்தி = ஆர்), வேம்பு, பெண்ணை மலர் சூடிய முந்நாட்டு அரசையும் தாங்கும் என்றது.[53]
  • கொங்கு நாடு தன்னை மதிக்கவில்லை என்று ‘கொங்கு நாட்டைக் கனவிலும் நினைக்கக்கூடாது’ என்று பாடுகிறார்.[54]

நிகழ்வு

  • நெல்லஞ்சோறே கிடைக்காமல் தேடித் திரிந்த எனக்குக் கல்நிலத்தில் விளைந்த கம்மஞ்சோறே கிடைத்தது.[55]
  • ஒரு தம்பி நாடாள, ஒரு தம்பி உடன் வர, இராமன் மனைவியுடன் காடு போந்த வரலாற்றை ஒருபாடல் குறிப்பிடுகிறது.[56]
  • பெருங்கதை நூலின் பாட்டுடைத் தலைவன் உதயணனின் தாய் அவனைக் கள்ளிக்காட்டில் பெற்றெடுத்த செய்தியை ஒருபாடல் தெரிவிக்கிறது.[57]
  • அழகி ஒருத்தியின் முலை முதலானவற்றைப் பாராட்டிப் பாட்டு ஒன்று எதற்காக எழுதிக் கொடுத்தளன் என்கிறாயா, சொல்கிறேன் கேள். அவள் பொன் தந்தாள், எழுதிக் கொடுத்தேன் – என்று பாடல் தெரிவிக்கிறது.[58]
  • பாம்பு கடித்த நஞ்சு இறங்கப் பாடிய பாடல் இரண்டு [59]
  • பாட்டுப் பாடி, வேலி என்னும் பெண்மணிக்குச் சுவர் இடியாமல் நிற்கும்படி கட்டித் தந்து கூலி பெற்றபோது “நெல் கொண்டுபோகும் அளவுக்கு அந்தச் சுவர் நிற்கவேண்டும் என்று பாடியது.[60]
  • ஆற்றின் தென்கரை வழியே சென்ற வணிகச் சாத்தன் ஒருவனை அந்த ஆற்றின் வடகரையில் இருக்கும் காளிகாள் அம்மை என்னும் பேய் உன்னைத் தின்னப்போகிறேன் என்றதாம். அதனை கேட்ட வீரன் அந்தப் பேயின் கையை வெட்டிப் போட்டானாம்.[61]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, பக்கம் 28
  2. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, 12 ஆல் நூற்றாண்டு, பாகம் 1, பக்கம் 290
  3. தனிப்பாடல் திரட்டு – பக்கம் 45-54
  4. பாடல் 1
  5. பாடல் 2
  6. பாடல் 3
  7. பாடல் 4
  8. பாடல் 58
  9. பாடல் 59
  10. பாடல் 41 கட்டளைக் கலித்துறை
  11. தேரையார் செவ்விள நீருண்ணாப் பழிசுமப்பர்
    நாரியார் தாமறிவார் நாமவரை நத்தாமை
    கோரைவாய்ப் பொன்சொரியுங் கொல்லிமலை நன்னாடா
    ஊரை வாய்மூட வுலைமூடி தானிலையே.(பாடல் 45)

  12. பாடல் 42
  13. மேழி பிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை
    ஆழி தரித்தே யருளுங்கை- சூழ்வினையை
    நீக்குங்கை யென்று நிலைக்குங்கை நீடூழி
    காக்குங்கை காராளர் கை. (பாடல் 43)

  14. பாடல் 49
  15. பாடல் 15
  16. பாடல் 8
  17. பாடல் 9
  18. பாடல் 17
  19. பாடல் 19
  20. பாடல் 55
  21. பாடல் 24
  22. இருந்தவளைப் போனவளை யென்னை யவளைப்
    பொருந்தவளை பறித்துப் போனான்-பெருந்தவளை
    பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டின்
    மாத்தத்தன் வீதியினில் வந்து.பாடல் 18

  23. பாடல் 32
  24. பாடல் 46 கட்டளைக் கலித்துறை
  25. மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
    காவுறங்கின வெங்கண் மானிருகண் ணுறங்கில ளையகோ
    கோவுறங்கு கடைத்தலைக் குலதீபவள்ளை குதட்டிவாய்
    ஆவுறங் குபகார சஞ்சலமஞ்ச லென்ன வடுக்குமே.(பாடல் 51)

  26. பாடல் 56
  27. பாடல் 63
  28. பாடல் 64
  29. பாடல் 65
  30. வேம்பாகிலு மினிய சொல்லுக்கு நீபுனைந்த
    வேம்பாகிலு முதவ வேண்டாமோ- மீன்பாயும்
    வேலையிலே வேலைவைத்த மீனவர் நின்புயத்து
    மாலையிலே மாலைவைத்தாண் மான். பாடல் 66

  31. பாடல் 21
  32. பாடல் 22
  33. பாடல் 23
  34. பாடல் 20
  35. பாடல் 10
  36. பாடல் 25
  37. 31 ஆம் பாடல் விருத்தம்.
  38. இவன் பாண்டியன் போலும்
  39. பாடல் 38
  40. காதமிருபத்து நான்கொழியக் காசினியை
    ஓதக்கடல் கொண் டொளித்ததோ- மேதினியிற்
    கொல்லிமலைத் தேன்சொரியுங் கொற்றவா நீமுனிந்தால்
    இல்லையோ வெங்கட் கிடம். – பாடல் 39

  41. பாடல் 11
  42. பாடல் 12
  43. பாடல் 30
  44. பாடல் 31
  45. பாடல் 13
  46. பாடல் 28
  47. பாடல் 29
  48. பாடல் 26
  49. பாடல் 14,
  50. பாடல் 27
  51. பாடல் 57
  52. பாடல் 67
  53. பாடல் 16
  54. நீரெல்லாஞ் சேற்றுநாற்ற நிலமெலாங் கல்லுமுள்ளும்
    ஊரெலாம் பட்டிதொட்டி யுண்பதோ கம்பஞ்சோறு
    பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும்பேயும்
    காருலாங் கொங்குநாட்டைக் கனவிலு நினைக்கொணாதே. (பாடல் 40)

  55. பாடல் 50
  56. பாடல் 33
  57. பாடல் 34
  58. பாடல் 35
  59. பாடல் 6, 7
  60. மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து
    சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே
    விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
    நெற்கொண்டு பொமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே (பாடல் 44)

  61. பாடல் 48
"https://tamilar.wiki/index.php?title=கம்பர்_தனிப்பாடல்கள்&oldid=18313" இருந்து மீள்விக்கப்பட்டது