இராஜன் முருகவேல்
இராஜன் முருகவேல் (சோழியான், ஆகத்து 4, 1960 - நவம்பர் 15, 2016) ஒரு ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதியவர். தமிழமுதம் இணைய இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். புலம் பெயர்ந்து செருமனியில் வாழ்ந்து வந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இராஜன் முருகவேல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம், சுழிபுரம், பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முருகவேல் சரோஜியினி தம்பதிகளின் மூத்த புதல்வர். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி (8ம் வகுப்பு வரை), கொழும்பு றோயல் கல்லூரி (12ம் வகுப்பு வரை) ஆகியவற்றில் கல்வி கற்றவர். 1984 இலிருந்து புலம்பெயர்ந்து செருமனி, பிறேமனில் வாழ்ந்து வந்தார்.
எழுத்துலக வாழ்வு
இசையும் கதையும், வானொலி நாடகம் என்பவற்றினூடு எழுத்துலகில் பிரவேசித்த இவர் சிறுகதைகள், புதினங்கள் என்று எழுதினார். இவரது ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் கலாவல்லி, மாணிக்கம், நம்நாடு, வசந்தம், தென்றல், கடல், நமதுகுரல், தளிர், ஏலையா, கலைவிளக்கு, மண், சிறுவர் அமுதம், தூண்டில், பூவரசு, ஆகிய இதழ்களிலும், ஒரு பேப்பர், தாயகப்பறவைகள், யாழ்.கொம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.
இவரது கைக்கெட்டாத கைமாத்துக்கள், ஐஸ்கிறீம் சிலையே நீதானோ ஆகிய இரு நாவல்களும் பத்திரிகை, சஞ்சிகைகளிலும், இணையத்தளங்களிலும் தொடராகப் பிரசுரமாகியுள்ளன.
மேடை அனுபவம்
கவியரங்கு, பட்டிமன்றம், நாடகம், வில்லிசை போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார்.
பரிசுகள்
- ஆறுதல்தேடி ஆண்டவன் சந்நிதியில்.. (1977 - இலங்கையில் மெய்கண்டான் வெளியீடாக வெளிவந்த கலாவல்லி மாத இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு)
- யாகாவாராயினும் நாகாக்க.. (2000 - ஜேர்மனி மண் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு.)
- ஐயாயிரம் மார்க் அம்மா.. (1999 - ஜேர்மனி ஹார்ட்ஸ் தமிழர் ஒன்றியம் நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதலாம் பரிசு.)
- தேசம் கடந்த பின்.. (2001 - ஜேர்மனி பூவரசு சஞ்சிகை நடாத்திய கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசு.
வெளியிட்ட சஞ்சிகைகள்
- வசந்தம் (ஜெர்மனி),
- கடல் (ஜெர்மனி).
வெளிவந்த நூல்கள்
- யெளவனமில்லாத யதார்த்தங்கள் (பங்குனி 1998, வெளியீடு் பூவரசு கலை இலக்கியப் பேரவை,ஜெர்மனி)
- பெயர் ஒன்று வேண்டும் (2000 - வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், சென்னை.)