அ. மாதவையர்
அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (A. Madhaviah, ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
பிறப்பு
அ. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.
கல்வி
தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892-இல் முதல் மாணவராக முடித்தார்.
பணி
பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார்.
தொடர்கதை எழுத்தாளர்
மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையர் மரணமடைந்தார்.
இதழாளர்
அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
மரணம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.
குடும்பம்
அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, மா. அனந்த நாராயணன், மீனாட்சி தியாகராஜன், மா. கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலட்சுமி, விசாலாட்சி, டாக்டர் சரசுவதி உட்டபட ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன்.
சுவையான செய்திகள்
- 1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார்.
- 1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது.
படைப்புகள்
நாவல்
- பத்மாவதி சரித்திரம் (1898)
- முத்துமீனாட்சி (1903)
- விஜயமார்த்தாண்டம் (1903)
- Thillai Govindan (1903)
- Satyananda (1909)
- The story of Ramanyana (1914)
- Clarinda (1915)
- Lieutenant Panju (1915)
- Markandeya (1922)
- Nanda (1923)
- Manimekalai (1923)
- பத்மாவதி சரித்திரம் மூன்றாம் பாகம் (1928, முற்றுப்பெறாதது)
சிறுகதை
- Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.
- குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)
நாடகம்
- உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம்) (1903)
- திருமலை சேதுபதி (1910)
- மணிமேகலை துறவு (1918)
- ராஜமார்த்தாண்டம் (1919)
- பாரிஸ்டர் பஞ்சநதம் (1924)
கவிதை
- Poems (20 கவிதைகள்) (1903)
- Dox vs Dox poems (1903)
- பொது தர்ம சத்கீத மஞ்சரி (இரண்டு பாகங்கள், 1914)
- The Ballad of the penniless bride (1915)
- புது மாதிரிக் கல்யாணப் பாட்டு (1923)
- இந்திய தேசிய கீதங்கள் (1925)
- இந்தியக் கும்மி
கட்டுரை
- Thillai Govindan's Miscellany (1907)
- ஆசாரச் சீர்திருத்தம் (1916)
- சித்தார்த்தன் (1918)
- பால வினோதக் கதைகள் (1923)
- பால ராமாயணம் (1924)
- குறள் நானூறு (1924)
- Dalavai Mudaliar (1924)
- தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)
- தட்சிண சரித்திர வீரர் (1925)
இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Padmavati - A. Madhaviah மொழிபெயர்ப்பு: மீனாட்சி தியாகராஜன், கதா பதிப்பகம்
- A. Madhaviah - A Biography and a Novella, Sita Anantha Raman and Vasantha Surya, Oxford University Press