பி. ஆர். ராஜமய்யர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பி. ஆர். ராஜமய்யர் |
---|---|
பிறந்ததிகதி | ஜனவரி 25, 1872 |
இறப்பு | மே 13, 1898 |
அறியப்படுவது | எழுத்தாளர் நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவம் |
பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதியவர்.
வாழ்க்கை
ராஜமய்யர், 1872ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். அவர் ஒரு சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைக் கல்வியை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1889 இல் கலைமாணி (B.A.) பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதனால் விரக்தியில் ஆழ்ந்திருந்த சமயத்தில், தனது மனத்தை ஞான மார்க்கத்தில் செலுத்தினார்.
இதழியல் தொடர்பு
பிரம்மவாதின் என்ற ஆங்கிலத் திங்களிதழில் Man his littleness and greatness என்ற தனது முதல் கட்டுரையை எழுதினார். இவருடைய எழுத்துக்கள், இவர் வாழ்க்கையின் ஆன்மிகத் தேடலின் பிரதிபலிப்பாக அமைந்தன. சுவாமி விவேகானந்தரால் பணிக்கப்பட்டு பிரபுத்த பாரதா என்ற ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் எழுதிய தத்துவ விசாரணை கட்டுரைகள், பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது.
மறைவு
மே 13 ஆம் நாள் 1898 ஆம் ஆண்டு ,தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக இயற்கை எய்தினார். பிரபுத்த பாரதாவின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. [ஆனால், சுவாமி விவேகானந்தரின் பெருமுயற்சியால், பி. ஆர். ராஜமய்யரின் மறைவை அடுத்து 1898 ஆகஸ்டு இதழில் இருந்து சென்னைக்கு பதிலாக அல்மோராவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.]
கமலாம்பாள் சரித்திரம்
தமிழில் முதல் நாவல் என சொல்லப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1870ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜமய்யர், தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத பத்திரிக்கையில் தொடராக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அப்போது வயது 21.
ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். ஷெல்லி,வேர்ட்ஸ்வொர்த் போன்ற சிறந்த கவிஞர்களின் கவிதைகளை ஊன்றிப் படித்தார். உலகக் கவிஞர்களில் தலைசிறந்தவர் கம்பர் என்பது அவருடைய கருத்து.[1]
படைப்புகள்
நாவல்
- கமலாம்பாள் சரித்திரம்
கட்டுரைகள்
- மனிதனின் பெருமையும் சிறுமையும்
- வேதாந்த சஞ்சாரம்
சிந்தனைகள்
- "இச்சரித்திர மெழுதுவதில் எனக்கு கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோவெனில், பகவானது மாயா விபூதியாம் பெருங்கடலினுள் ஒர் அலையுள், ஒர் நுரையுள், ஒர் அணுவை யானெடுத்து, அதனுள் என் புல்லறிவுக் கெட்டியமட்டும் புகுந்து பார்த்து, தூண் பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக் கண்டு கைகூப்பி ஆடிப்பாடி, அரற்றி உலகெல்லாம் துள்ளித் துதைத்த இளஞ்சேயொப்ப யாரும் ஆடிப்பாடி ஓடவேண்டுமென்பதேயன்றி வேறன்று. இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மூலமான ஓர் இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்" - கமலாம்பாள் சரித்திரத்தைப் பற்றி
- "கவிதை இன்பம் வேதனை இரண்டையும் அளிக்கிறது. பிரபஞ்சத்தின் மகிமையையும் மனிதனின் சிறப்பையும் அது பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உயர்ந்த பட்ச கவிதை என்பது கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள மண்டபம். சாலையோரம் சற்று இளைப்பாற தங்குமிடம்"
- "கவிதை தரக்கூடியதை விட மேலான இன்பம் மனிதனின் பிறப்புரிமை. நிரந்தரமாகவும், மாறாத இன்பத்தோடு இருப்பது, நிலவொளி இரவைப் போலவே வெப்பமான பருவகாத்தை ரசிப்பதும், மனிதனின் தயாள, தன்னல தியாகத்தையும், முறைகேடான அக்கிரமத்தையும் சமமான சாந்தத்துடன் மதிக்கவும், காம்பீர்ய சூர்ய அஸ்தமனத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் மட்டும் விடாமல், வானம்பாடிபோல், பாடிப்பறக்கும் வானம்பாடியைப்போல் வானவெளியில் சஞ்சரிப்பது மட்டும் இல்லாமல், பிரபஞ்சத்தோடு கலந்து வருவதுடன் தன்னால் ஒரு போதும் வெளியிட முடியாததை ஆனால் எல்லாவற்றையும் மறைக்க முடியாததை உணர்ந்து, தானே சூர்யனாகவும், அஸ்தமனமாயும், ஒளியாயும், வானம்பாடியாயும், கானமாகவும், வானமாகவும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையாக உள்ள அத்தனையுமாக ஆகிவிடவேண்டும். மனிதன் தன் வாழ்க்கையிலும் எல்லையற்ற வெளியில் தான் கரைந்து குமுறும் அலைகடலையும், உயர் மலையையும் ஒளிரு தாரகைகளயும் ஓசையிடும் அருவிகளையும் தனக்குள்ளே உணரப்போகிறான். இந்த அர்த்தத்தில் அவன் கடவுள். வேதங்களில் கூறப்படும் பரப்பரும்மன். பந்தம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ந்த மனிதனின் மனதில் சாசுவத நிலவொளி, வெளியீட்டுக்கும் அப்பாற்பட்ட எல்லையற்ற பேரின்பம், அதாவது நானும் நானே. நானே மற்றவர்களும். நானே பிரம்மனும்" - Rambles in Vedanta
பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள்
- ராஜமய்யர் என்ற சக்தி, ஒரு வால் நட்சத்திரம் போல, அணு ஆயுத வெடிப்பின் பிரம்மாண்டம் போல ஒரு குறுகிய காலத்திற்குள், பல்வேறு திசைகளில் ஓர் அசாதாரண வேகத்தில் துடித்து இயங்கி மறைந்துவிட்டது. இவ்வியக்கத்தின் துடிப்பும், வேகமும், பலதிசை நோக்கும், வாழ்ந்த காலத்தின் சுருக்கமும், இதை அணுகி புரிந்து கொள்ள முயற்சி செய்பவனைத் திக்கித் திணற வைத்துவிடுகிறது. இதன் விளைவு, வெடித்துச் சிதறிய துணுக்குகளில் தனக்கு அகப்பட்டதை வைத்துக் கொண்டு, ராஜமய்யரை, நாவலாசிரியர், தத்துவ ஞானி என்று பலவாறாக மதிப்பிடுகிறோம் - வெங்கட் சாமிநாதன்
சான்றாதாரங்கள்
- சில இலக்கிய ஆளுமைகள். ஆசிரியர்: வெங்கட் சாமிநாதன்.
- அசோகமித்திரன் கட்டுரைகள் - பாகம் 1. ஆசிரியர் : அசோகமித்ரன்
- அசோகமித்ரன், "B.R. Rajam Aiyar and His Kamalambal Charitrans", The Literary Criterion 21.1&2 (1986):86-92.
- உமா பரமேஸ்வரன். "Rajam Aiyar's Vasudeva Sastry" , The Literary Endeavour 6.1 (1985):55-67.
- S.விஸ்வநாதன். "Rajam Iyer's Vasudeva Sastry or True Greatness: Apologue or Religious Novel?" Journal of Indian Writing in English 2.1: 49-53.
- க. நா. சுப்பிரமணியம் Rajam Iyer: a pioneer Tamil novelist. (Modern Indian authors), Indian and Foreign Review (New Delhi) 16, no.12 (1 Apr 1979, 20-22 )
மேற்கோள்கள்
- ↑ சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு (பக்கம் 515). ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சென்னை.