அ. சபாபதி
அருணாசலம் சபாபதி சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் | |
பதவியில் 1917–1921 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1853 தலையாழி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | மே 5, 1924 (அகவை 70–71) |
குடியுரிமை | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி |
தொழில் | ஊடகவியலாளர், பத்திரிகை ஆசிரியர் |
அருணாசலம் சபாபதி (Arunachalam Sabapathy, 1853 – மே 5, 1924) இலங்கைத் தமிழ் பத்திரிகை ஆசிரியரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
சபாபதி 1853 இல் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணைக்கு அருகே தலையாழி என்ற ஊரில்[1][2] முருகன் செட்டியார் என அழைக்கப்பட்ட முருகன் அருணாசலம், எஸ். அன்னபிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார்.[1] தந்தை முருகன் 18ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய வீரப்பன் செட்டியாரின் வழித்தோன்றல் ஆவார். முருகன் செட்டியார் யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியில் இருந்து வண்ணார்பண்ணைக்குக் குடிபுகுந்தார்.[1] சபாபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.[3]
சபாபதி, சரவணமுத்து உடையார் என்பவரின் மகள் சின்னம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.[1][4]
பணி
சபாபதி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இலங்கைத் தமிழரின் இரண்டாவது பிரதிநிதியாக 1917 சனவரி 9 இல் நியமிக்கப்பட்டார்.[5][6][7] இவர் யாழ்ப்பாண சபை என அழைக்கப்பட்ட அரசியல் அமைப்பின் நிறுவன செயலரும், அதன் தலைவருமாக இருந்து செயல்பட்டார்.[2][3][6] தமிழர்களுக்கு கூடிய பிரதிநித்துவம் வழங்க சிங்களத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர் என பொன்னம்பலம் அருணாசலம் உறுதிமொழி வழங்கியதை அடுத்து சபாபதி அவரது இயக்கத்தினருடன் இலங்கை தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[8] எனினும், முதலாவது மென்னிங் சீர்திருத்தங்கள் தமிழருக்கு எதிர்பார்த்த பிரதிநித்துவத்தை வழங்கவில்லை. இதனால், சபாபதி 1921 இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மகாசன சபையில் சேர்ந்து, அதன் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.[3]
சமூகப் பணிகள்
சபாபதி சைவ பரிபாலன சபையின் நிறுவன உறுப்பினர் ஆவார். அத்துடன் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக 1891 முதல் 1924 வரை 33 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.[4] இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். இக்கல்லூரியின் முகாமையாளராக 1913 முதல் 1924 வரை பணியாற்றினார்.[2][3][6]
மறைவு
சபாபதி 1924 மே 5 இல் தலையாழியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Hon. Mr. A. Sabapathy". Hon. Mr. A. Sabapathy, The Tamil Hero. http://www.sabapathy.co.uk/sabapathy.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Sabaratnam, T.. "Chapter 17: The Arunachalam Factor". Sri Lankan Tamil Struggle. http://www.sangam.org/2010/12/Tamil_Struggle_17.php.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Honourable A. Sabapathy's Achievements". Hon. Mr. A. Sabapathy, The Tamil Hero. http://www.sabapathy.co.uk/Acheivements.html.
- ↑ 4.0 4.1 4.2 "The Late Mr A. Sabapathy". The Straits Times: p. 11. 16 May 1924. http://newspapers.nl.sg/Digitised/Page/straitstimes19240516-1.1.11.aspx.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 108
- ↑ 6.0 6.1 6.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 168-169. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ "The London Gazette". The London Gazette. 6 March 1917. http://www.london-gazette.co.uk/issues/29972/pages/2252/page.pdf.
- ↑ A. Jeyaratnam Wilson (2000). Sri Lankan Tamil Nationalism. Penguin Books. பக். 59. http://www.noolaham.org/wiki/index.php?title=Sri_Lankan_Tamil_Nationalism.