அம்பலவாணர் கனகசபை
சர் அ. கனகசபை A. Kanagasabai ச.பே.உ. | |
---|---|
அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் (தமிழ்), இலங்கை சட்டவாக்கப் பேரவை | |
பதவியில் 1906–1917 | |
முன்னவர் | டபிள்யூ. ஜி. ரொக்வூட் |
உறுப்பினர், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை | |
பதவியில் 27 மே 1921 – 1927 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1856 |
இறப்பு | 1927 (அகவை 70–71) |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னை கிறித்துவக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
சேர் அம்பலவாணர் கனகசபை (Sir Ambalavanar Kanagasabai 1856 – 1927) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
கனகசபை இலங்கையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார்.[1][2][3]
ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை உயர் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் கற்று 1878 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1][2][3] பின்னர் சட்டம் பயின்று 1882 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார்.[2][3] இவர் 1885 இல் சங்கரப்பிள்ளை கனகசபை என்பரின் மகள் காமாட்சி அம்மாளைத் திருமணம் புரிந்தார்.[1][3]
பணி
1882 இல் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 1907 இல் யாழ்ப்பாணம் வழக்குரைஞர் அவை (bar) தலைவரானார். புதிய வடக்குத் தொடர்ந்துப் பாதையை அமைப்பதற்கு இவர் பெரும் ஆதரவளித்தார்.[1][2][3]
அரசியலில்
1906 பெப்ரவரி 4 இல் கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவையின் தமிழர் சார்பில் டபிள்யூ. ஜி. ரொக்வூட்டுக்குப் பதிலாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 1912 இல் இவர் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக இவர் 11 ஆண்டுகள் சேவையாற்றினார்.[1] 1921 இல் இவர் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]
சமூகப் பணி
கனகசபை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து பணியாற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். இந்துக்கல்லூரியின் பணிப்பாளர் சபையிலும் இவர் தலைவராக இருந்தார்.[1][2][3] கொழும்பு கொம்பனித் தெருவில் சைவக் கோயில் ஒன்றையும் இவர் அமைத்தார்.[1] அரச ஆசியர் சபை, வேளாண்மைக் கழகம், கல்வி வாரியம் ஆகியவற்றில் உறுப்ப்பினராகவும், யாழ்ப்பாணம் வணிகக் கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து செயலாற்றினார்.[2][3] திருச்சிராப்பள்ளியில் 1909 ஆம் ஆண்டில் நடைபெற்ற சைவ சித்தாந்த சமாசத்தின் நான்காம் ஆண்டு விழாவில் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.[7] 1917 ஆம் ஆண்டில் இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி சிறப்புப்படுத்தியது. சேர் பட்டம் பெற்ற மூன்றாவது இலங்கைத் தமிழர் இவராவார்.[1][2][8] 1921 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் மகாஜன சபையின் தலைவராகவும் இவர் இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 70.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 மார்ட்டின், ஜோன் எச். (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Wright, Arnold, ed. (1907). Twentieth Century Impressions of Ceylon. Lloyd's Great Britain Publishing Company. pp. 785–786.
- ↑ "The London Gazette". லண்டன் கசெட் (27894): 1793. 13 மார்ச் 1906. https://www.thegazette.co.uk/London/issue/27894/page/1793.
- ↑ "The London Gazette". லண்டன் கசெட் (28587): 1659. 15 மார்ச் 1912. https://www.thegazette.co.uk/London/issue/28587/page/1659.
- ↑ "The London Gazette". லண்டன் கசெட் (32352): 4635. 10 சூன் 1921. https://www.thegazette.co.uk/London/issue/32352/page/4635.
- ↑ "சைவசித்தாந்த சமாஜம் - பவலவிழாச் சிறப்பு". மில்க்வைற் செய்தி. மே 1981.
- ↑ "The London Gazette". லண்டன் கசெட் (30022): 3597. 17 ஏப்ரல் 1917. https://www.thegazette.co.uk/London/issue/30022/page/3597.