வஞ்சகன்
வஞ்சகன் (Vanjagan) 2006 ஆம் ஆண்டு சுஜிபாலா, பிரதாப் மற்றும் சுமன் நடிப்பில், ஏ. எம். பாஸ்கர் இயக்கத்தில், எஸ். வி. ஜெயப்ரகாஷ் ராதை தயாரிப்பில், ஜான் பீட்டர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]
வஞ்சகன் | |
---|---|
இயக்கம் | ஏ. எம். பாஸ்கர் |
தயாரிப்பு | எஸ். வி. ஜெயப்ரகாஷ் ராதை |
கதை | ஏ. எம். பாஸ்கர் |
இசை | ஜான் பீட்டர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. ஜி. சங்கர் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | வீரா பிலிம்ஸ் |
வெளியீடு | ஆகத்து 4, 2006 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
நிருபராகப் பணிபுரியும் ஜீவா (சுஜிபாலா) மூன்று பேரால் துரத்தப்படும் ஒருவன் அவள் வீட்டருகே ஒரு பெட்டியை வீசுவதைக் காண்கிறாள். அந்தப் பெட்டியை எடுத்து திறந்து பார்க்கிறாள். அதிலுள்ள நாட்குறிப்பேடு ஒன்றில் நகரத்தின் நான்கு முக்கியமான நபர்கள் கொல்லப்படுவார்கள் என்று எழுதியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் தெரிவிக்கிறாள். காவல் துறையினர் அதை அலட்சியப்படுத்துவதால் தன் நண்பனும் தனியார் புலனாய்வு நிறுவனம் நடத்துபவனுமான சிவாவின் (பிரதாப்) உதவியை நாடுகிறாள்.
அந்த நாட்குறிப்பில் உள்ளவாறு அருணாச்சலம் (தேவன்) மற்றும் பன்னீர்செல்வம் (சேது விநாயகம்) இருவரும் கொல்லப்பட, காவல்துறை ஜீவா மற்றும் சிவாவின் உதவியை நாடுகிறது. ஜீவா இந்த நிகழ்வுகள் குறித்து பத்திரிகையில் ஒரு புலனாய்வுக் கட்டுரை எழுதுகிறாள். இதைக் காணும் முதல் காட்சியில் வந்த மூன்று பேரும் ஜீவாவைக் கடத்த முயற்சிக்கின்றனர். அங்குவரும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஜீவாவைக் காப்பாற்றுகிறார். அந்த மூவரையும் காவல்துறை கைது செய்கிறது. பெட்டியில் பணம் வைத்திருந்ததாகக் கருதியே கட்டிங் பாஸ்கர் என்பவனைத் தாங்கள் துரத்திச் சென்றதாகவும், அதில் பணம் இல்லாததால் அவனைக் கொன்றதாகவும் கூறுகிறார்கள்.
அருணாச்சலம் மற்றும் பன்னீர்செல்வம் கொலையில் ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டறிகிறான் சிவா. அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் ஒரே தொலைபேசி எண்ணிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த எண்ணின் முகவரியில் சென்று பார்க்கும்போது அங்கு வசித்தவர் கொல்லப்பட்டு கிடக்கிறார். இந்தக் கொலைகளைச் செய்வது யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- சுஜிபாலா - ஜீவா
- பிரதாப் - சிவா
- சுமன்
- செந்தில்
- பாண்டு
- சின்னி ஜெயந்த்
- சந்திர ஹாசன் - வீரா
- வையாபுரி - ரவி
- மாறன் - போலீஸ் கான்ஸ்டபிள்
- தேவன் - அருணாச்சலம்
- அஜய் ரத்னம் - சின்ராசு
- சேது விநாயகம் - பன்னீர்செல்வம்
- அழகு - திருநாவுக்கரசு
- மகாநதி சங்கர் - பாலா
- பாலு ஆனந்த் - ஆவுடையப்பன்
- அச்சமில்லை கோபி - வழக்கறிஞர்
- கொட்டாச்சி - கொட்டாச்சி
- கிரேன் மனோகர்
- ஷகீலா
- சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன்
இசை
படத்தின் இசையமைப்பாளர் ஜான் பீட்டர். பாடலாசிரியர்கள் பொன்னடியான், பா. விஜய் மற்றும் கலைக்குமார்.
வ.எண் | பாடல் | காலநீளம் |
---|---|---|
1 | எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் | 2:50 |
2 | சின்ன மாமா | 2:42 |
3 | அடியே அஞ்சலை | 3:49 |
4 | மதுரை பக்கம் மரிக்கொழுந்து | 4:15 |
5 | மேகமே | 4:01 |