முதுமொழிக்காஞ்சி, நூல்
மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் இப்பெயர் பெற்றது.[1] காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது. [2] இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:
- சிறந்த பத்து
- அறிவுப் பத்து
- பழியாப் பத்து
- துவ்வாப் பத்து
- அல்ல பத்து
- இல்லைப் பத்து
- பொய்ப் பத்து
- எளிய பத்து
- நல்கூர்ந்த பத்து
- தண்டாப் பத்து