மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்

மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி என்ற ஊரிலுள்ள சிவன் கோயில் ஆகும். இது ஒரு குடைவரைக்கோயில். இவை பாண்டியர் மற்றும் முத்தரையர் குடைவரைகள்.[1]

அமைவிடம்

மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. [2] சிவனுக்குரிய இக்கோயில் வாகீஸ்வரமுடையார் கோயில் எனப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய நெடுஞ்சாலை 67) , துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் இக்கோயில் உள்ளது. [3]

இறைவன், இறைவி

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் வாகீஸ்வரமுடையார், இறைவி பெரியநாயகி.

சிறப்பு

ஒரே குன்றில் குடைந்து எடுக்கப்பட்ட திருமால் மற்றும் சிவன் கோயில்களில் இந்த சிவன் கோயிலில் நந்திவர்ம பல்லவன் (கி.பி.775-826) காலத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. சுமார் கி.பி.730இல் குவாவன் சாத்தன் என்னும் விடேல் விடுகு முத்தரையர் இம்மலையைக் குடைந்து எடுத்து கோயில் அமைத்தான் என்பதை கல்வெட்டின் மூலம் அறியலாம். இக்கோயில் ஒரு குடவரைக்கோயிலாகும். [3]

மேற்கோள்கள்

  1. மலையடிப்பட்டி
  2. Dr.J.Raja Mohamad, Art of Pudukottai (Art and Architecture), Historical Arcives Committee,Pudukottai, 2003
  3. 3.0 3.1 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003

வெளி இணைப்புகள்