கா. வேழவேந்தன்
கா.வேழவேந்தன் (K. A. Vezhavendan, 5 மே 1936 – 26 சனவரி 2022) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், 1967-76 காலகட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகவும், அதே காலகட்டத்தில் ஓராண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் (1969-70) பணியாற்றினார். 1500-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் ஒருசில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவை அனைத்தும் தொகைநூல்களாக வெளிவந்துள்ளன. பதினைந்துக்கும் மேற்பட்ட ஏடுகளுக்கும் இதழ்களுக்கும் பங்களித்துள்ள இவர் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவிவேந்தர் கா. வேழவேந்தன் | |
---|---|
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 8 ஆகஸ்ட் 1969 – 10 செப்டம்பர் 1970 | |
முன்னவர் | ப. உ. சண்முகம் |
பின்வந்தவர் | என். வி. நடராசன் |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 4 மார்ச் 1967 – 31 சனவரி 1976 | |
முன்னவர் | எ. இராகவ ரெட்டி |
பின்வந்தவர் | ஆர். எசு. முனிரத்தினம் |
தொகுதி | கும்மிடிப்பூண்டி |
செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு கிளை, பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் | |
பதவியில் 1968 – 15 மார்ச் 1971 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கஜேந்திரன் 5 மே 1936 காரணி, சென்னை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 26 சனவரி 2022 மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 85)
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (1956[?] - 2022 ; இறப்பு வரை) |
வாழ்க்கை துணைவர்(கள்) | பானுமதி (? - 2022 ; இறப்பு வரை) |
பிள்ளைகள் | வெற்றிவேந்தன் எழில்வேந்தன் |
பெற்றோர் | இராசம்மாள் கா. சின்னசாமி |
படித்த கல்வி நிறுவனங்கள் | பச்சையப்பன் கல்லூரி, சென்னை |
தொடக்க வாழ்க்கை
கஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வேழவேந்தன் கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காரணி எனும் சிற்றூரில் 5 மே 1936 அன்று இராசம்மாள் - கா.சின்னசாமி இணையருக்கு பிறந்தார். இவருக்கு இரு அண்ணன்மார்களும் ஒரு தமக்கையும் இருந்தனர். இவருக்குப் பின் பிறந்தவர்கள் ஆதிகேசவன் என்ற இயற்பெயர் கொண்ட முல்லைவேந்தனும் [1] ஒரு தங்கையும் ஆவர்.
முதலில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் பயின்ற வேழவேந்தன், 1947-48 இல்[2] சென்னை சென்று சௌகார்பேட்டையில் உள்ள இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதல் மாணவராக விளங்கிய இவருக்குத் தகுதி உதவித்தொகை (merit scholarship) வழங்கப்பட்டது. அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோரின்பால் ஈர்க்கப்பட்டு மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் பற்றுடையவரானார். இப் பற்றினால் இவர் பள்ளியில் இருந்த கடவுளர் உருவப்படங்களை வணங்க மறுத்தார். மாணவர்கள் அனைவரும் நெற்றியில் சமயக்குறிகளை அணியவேண்டும் என்ற விதி இருந்த நிலையில், வகுப்பறைச் சுவரிலிருந்து சுண்ணாம்பைக் கீறியெடுத்து அதைத் திருநீறுபோல அணிந்துவந்தார். வார இறுதி நாள்களில் ஊருக்குத் திரும்பித் தன் தந்தைக்கும் அண்ணன்மார்களுக்கும் வேளாண்மைப் பணிகளில் துணைபுரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன் தமிழாசிரியரான "குழந்தைக் கவிஞர்" தணிகை உலகநாதன் என்பாரின் ஊக்கத்தால் "கஜேந்திரன்" என்ற இயற்பெயரைத் துறந்து "வேழவேந்தன்" ஆனார்.[1]
பள்ளிப்படிப்பை நிறைவுசெய்தபின் சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்த வேழவேந்தன், மு. வரதராசனார் (மு.வ) அவர்களிடம் கற்க விரும்பியமையால்[1] பச்சையப்பன் கல்லூரிக்கு மாறி இளங்கலை தமிழ் பட்டம் பெற்றார் (1956-59). அதன்பின் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பயின்றார்.[3]
சட்டப்படிப்பு முடிந்தபின் மதராசு உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவுசெய்துகொண்டார். அந்நாளில் புகழ்பெற்ற வழக்கறிஞரும் பின்னாளில் குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (1985-90) பணியாற்றியவருமான பு. இரா. கோகுலகிருட்டிணன் என்பாரிடம் இளநிலை வழக்குரைஞராகச் சேர்ந்தார்.
கவிஞர் கா.மு.உமர், வி.த. கிருட்டிணமூர்த்தி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் நகரத்தந்தையான சா. கணேசன் ஆகியோர் வேழவேந்தனின் நெடுநாள் நண்பர்கள் ஆவர்.
இலக்கியப் பணி
இவர் மாணவராக இருந்தபோது,'முத்தாரம்' இதழில் 'மழலைச் சிலை' எனும் கவிதையை எழுதினார். இக்கவிதை மு.வ-வின் பாராட்டைப் பெற்றது.[4]
பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபோது அதன் தமிழ்மன்றத் தலைவராகவும் "அனைத்துக் கல்லூரிகள் தமிழ்ப் பேரவை"-யின் தலைவராகவும் இருந்தார். சென்னை சட்டக்கல்லூரிக் காலத்தில் தமிழ்ப்பேரவைத் தலைவராகவும் இருந்தார்.
திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், குயில், தென்றல், தென்னகம், காவியம், இலக்கியம் உள்ளிட்ட ஏடுகளுக்கு மாணவப்பருவத்திலேயே பங்களித்தார்.[5][6][7] பாரதிதாசன், தமிழ்நாட்டுக் கவிஞர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 26 சனவரி 1962 அன்று ஒரு அமைப்பைத் தொடங்கியபோது அதன் உறுப்பினர்களாகச் சேர அழைக்கப்பெற்றோரில் வேழவேந்தனும் ஒருவர்.[8] அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் என்ற அவ்வமைப்பின் பெயர் நீளமாக உள்ளதாக வேழவேந்தன் எழுப்பிய வினாவுக்கு பாரதிதாசன், "இன்றைய அறிவுலகம் எங்கேயோ விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மனிதன் நிலவு உலகில் சென்று குடியேறலாம்;செவ்வாய்க் கிரகம் சென்று வாழ முற்படலாம்; அப்படிப்பட்ட வேற்று உலகங்களில் எல்லாம் கூட நம் பெருமன்றத்தின் கிளைகள் உருவாகித் தழைக்க வேண்டும் என்ற தொலை நோக்குடன் தான் இப்பொழுதே, அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் என்று எண்ணிப் பார்த்துப் பெயர் வைத்திருக்கின்றேன்” என்றார்[9]. மேலும் வேழவேந்தனை அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக்கினார்.[7]
இக் காலகட்டத்தில் "பன்மொழிப்புலவர்" கா. அப்பாத்துரையார், மா. இராசமாணிக்கனார், மயிலை சிவ.முத்து உள்ளிட்ட அறிஞர்களுடன் நட்புக் கொண்டிருந்தார் வேழவேந்தன்.[1]
30 சூன் 2009 அன்று தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ்ப்பட்ட அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் மணவை முஸ்தபா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவ்விடத்தில் வேழவேந்தன் அமர்த்தப்பட்டார்.[10]
தமது 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி எனும் நூலை வெளியிட்டார்.[11]
இதழியல்
அமுதசுரபி, வாசுகி, கலைமகள், தமிழ் மாருதம், தினத்தந்தி, தினகரன், ராணி, மகாகவி, மலைமுரசு, முல்லைச்சரம், கவிதை உறவு, கவிக்கொண்டல் உள்ளிட்ட இதழ்களுக்குப் பங்களித்தார். தமிழ்த்தேன் எனும் இதழைத் தொடங்கி நடத்தினார்.
அரசியல்
தொடக்க காலம்
வேழவேந்தன் கல்லூரிப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபோது திராவிட மாணவர் முன்னேற்றக் கழக அமைப்பாளராகப் பணியாற்றினார். பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) சேர்ந்தார். திமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், இலக்கிய அணித் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்தார்.[1]
சட்டமன்ற உறுப்பினர் - முதல் பதவிக்காலம் (1967-71)
1967 சட்டமன்றத் தேர்தலில், கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு வென்ற வேழவேந்தன், திமுகவின் சட்டமன்றக் கட்சிச் செயலாளரானார். பின்னர் பேரவையின் சிறப்புரிமைகள் குழு உறுப்பினர் (1967-68), விதிகள் குழு உறுப்பினர் (1967-68), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளையின் செயற்குழு உறுப்பினர் (1968-71) ஆகிய பதவிகளில் இருந்தார்.[12][13][14] 1967-இல் பேரவை முதல் அமர்வின் இரண்டாம் கூட்டத்தின்போது பேரவை மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.[12] சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் முன்வரைவை ஆராய்ந்த கூட்டுத் தேர்வுக் குழுவின் 26 உறுப்பினர்களுள் வேழவேந்தனும் ஒருவர்.[12] பின்பு 30 மார்ச் 1969 அன்று பேரவையின் துணைச் சட்டக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[12]
அமைச்சர் பதவி (1969-70)
8 ஆகஸ்ட் 1969 அன்று அன்றைய தமிழ்நாடு ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், மு. கருணாநிதியின் முதல் அமைச்சரவையில் வேழவேந்தனை நியமித்தார். இதற்குமுன் ப. உ. சண்முகம் கவனித்துவந்த தொழிலாளர் நலன், எடைகள்-அளவீடுகள் சட்டம் ஆகிய அமைச்சுகளும் சத்தியவாணி முத்து கவனித்துவந்த யாசகர், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகிய அமைச்சுகளும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.[12]
அக்டோபர் 6 அன்று வேழவேந்தன், முன்னதாகத் தான் வகித்துவந்த துணைச் சட்டக் குழு உறுப்பினர் பதவியைத் துறந்தார்.[12] தனது அமைச்சுக் காலத்தில் "மே நாள் விடுமுறைச் சட்டம்" பிறப்பிக்கப்பட ஆவன செய்தார்.
1970-ஆம் ஆண்டு சூன் 3 முதல் 25 வரை ஜெனீவாவில் நடைபெற்ற 54-ஆம் பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் அன்றைய இந்திய தொழிலாளர் நல அமைச்சர் தாமோதரம் சஞ்சீவய்யாவுடன் சென்று பங்கேற்றார். அதன்பின் செப்டம்பர் 10 அன்று அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[12][15]
சட்டமன்ற உறுப்பினர் - இரண்டாம் பதவிக்காலம் (1971-76)
1971 தேர்தலில் மீண்டும் கும்மிடிப்பூண்டியில் போட்டியிட்டு வென்றார்.[16] அவ்வாண்டு ஏப்ரல் 3 அன்று 1971-72 சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் தலைவரானார். இவர் தலைமையில் அக் குழு 56 அமர்வுகளை நடத்தியது (அதன்பின் அமைக்கப்பட்ட 1972-73 குழுவின் தலைவராக பி. டி. ஆர். பழனிவேல்ராசன் பொறுப்பேற்றார்). 9 மார்ச் 1973 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக வேழவேந்தன் தேர்வானார்.[17]
1975-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற 21-ஆம் பொதுநலவாய நாடாளுமன்ற மாநாட்டில் அன்றைய தமிழ்நாடு சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரான க. இராசாராமுடன் சென்று பங்கேற்றார்.
நெருக்கடி நிலைச் சூழலில் 31 சனவரி 1976 அன்று தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டதால் உறுப்பினர் பதவியை இழந்த வேழவேந்தன், மிசா சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் இருந்தார். இவருடன் சிறைவாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டோருள் ஒருவர், விடுதலை இதழின் அந்நாளைய நிருவாக ஆசிரியரும் பின்னாளைய திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி ஆவார்.[18][19]
பிற்காலம் (1984-2022)
1984 தேர்தலில் மீண்டும் கும்மிடிப்பூண்டியில் தொகுதியில் போட்டியிட்ட வேழவேந்தன் இரண்டாமிடம் பெற்றார்.
ஆண்டு | தொகுதி | முடிவு | வாக்குகள் (விழுக்காடு) | எதிராளி | எதிராளிக் கட்சி | எதிராளி வாக்குகள் (விழுக்காடு) | வேறுபாடு
(விழுக்காடு) |
---|---|---|---|---|---|---|---|
1967 | கும்மிடிப்பூண்டி | Won | 35,887 (52.57%) |
கமலாம்புஜம்மாள் | இந்திய தேசிய காங்கிரசு | 31,527
(46.19%) |
4,360
(6.39%) |
1971 | Won | 43,355 (58.41%) |
பி. ஓபுல் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | 30,875
(41.59%) |
12,480
(16.81%) | |
1984 | இரண்டாமிடம் | 43,174 (43.44%) |
ஆர். எசு. முனிரத்தினம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 55,221
(55.56%) |
12,047
(12.12%) |
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காகப் பரப்புரை மேற்கொண்டார்.[20]
தனி வாழ்க்கை
திமுகவின் அந்நாளைய சென்னை மாவட்டச் செயலாளர் கே.எம். கண்ணபிரானின் மகளான பானுமதியை மணந்தார் வேழவேந்தன்.[9] இத் திருமணம், சர்.பிட்டி.தியாகராயர் மண்டபத் திடலில் அறிஞர் அண்ணாவின் முன்னிலையில் நடைபெற்றது.[1][21]
இவ்விணையருக்கு வெற்றிவேந்தன், எழில்வேந்தன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவர்கள் ஆவர். வெற்றிவேந்தன் ஒரு கேரளப் பெண்மணியைத் திருமணம் செய்துள்ளார். எழில்வேந்தன் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்மணியைச் சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளார்.[1]
மறைவு
சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த வேழவேந்தன், உடல்நலக் குறைவால், 26 சனவரி 2022 அன்று மாலை 8 மணியளவில், தனது 85-ஆம் அகவையில் காலமானார்.[22] அவர் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் மா. சுப்பிரமணியம், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.[23]
படைப்புகள்
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம்(கள்) |
---|---|---|---|
1960 | நெஞ்சிலே பூத்த நிலா /
(வேழவேந்தன் சிறுகதைகள்) |
சிறுகதைத் தொகுப்பு | இராசம்மாள் பதிப்பகம்
வேந்தர் பதிப்பகம், சென்னை |
1963
(& 2000?) |
வேழவேந்தன் கவிதைகள் | கவிதைத் தொகுப்பு | வேந்தர் பதிப்பகம், சென்னை |
1970 | தமிழா? அமிழ்தா? | கட்டுரைத் தொகுப்பு | தமிழ்த்தேன் பதிப்பகம் [1] |
1972 | வண்ணத் தோகை | கவிதைத் தொகுப்பு | வேந்தர் பதிப்பகம் /
பூங்கொடிப் பதிப்பகம், சென்னை |
1993 | ஏக்கங்களின் தாக்கங்கள் | வேந்தர் பதிப்பகம், சென்னை | |
தூறலும் சாரலும் | |||
2000 | தெரிய...தெளிய... | கட்டுரைத் தொகுப்பு | |
மனக்காட்டுத் தேனடைகள் | |||
2002 | தமிழா எங்கே போகிறாய்[24] | ||
2003 | வெற்றிக்கு ஒரு முற்றுகை | ||
2007 | அனல் மூச்சு | கவிதைத் தொகுப்பு | |
2009 | அண்ணாவும் பாவேந்தரும்[25] | கட்டுரைத் தொகுப்பு | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
2011 | கவிதைச் சோலை | கவிதைத் தொகுப்பு | சீதை பதிப்பகம் |
2012 | டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி | கட்டுரைத் தொகுப்பு | |
2014 | நாடறிந்தோர் வாழ்வில்... | கவிதைத் தொகுப்பு | |
2015 (?) | தித்திக்கும் தீந்தமிழ் | கட்டுரைத் தொகுப்பு | மணிவாசகர் பதிப்பகம் |
பட்டங்களும் விருதுகளும்
புகழ்பெற்ற வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழாவையொட்டி 1961-இல் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் வேழவேந்தனின் 'தாகூராஞ்சலி' என்ற பாடல் முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றது.[2]
இவரின் வண்ணத் தோகை கவிதை நூல், தமிழக அரசின் 1971- 1972 ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் பரிசு பெற்றது. மேலும் பாவேந்தர் பாரதிதாசன் விருது (1990), கலைமாமணி விருது (2000), இலண்டன் சுடரொளிக்கழகம் நடத்திய இரண்டாவது உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியில் முதற்பரிசு (2004)[26], கி. ஆ. பெ. விசுவநாதம் விருது (2007), சி.பா. ஆதித்தனார் நினைவு இலக்கியப் பரிசு (2009)[27][28][29] உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார்.[5]
புகழ்
வேழவேந்தனின் கட்டுரைகளுக்காக அவருக்குக் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது, 16 சூலை 2019 அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்த விழாவில் வழங்கப்பட்டது.[13] அவ் விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் (சுபவீ), அண்ணா குறித்து வேழவேந்தன் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பாரதிதாசன் குறித்து சுரதா இயற்றிய "தடைநடையே அவர் எழுத்தில் இல்லை வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு"[30] என்ற கவிதையை மேற்கோள் காட்டி, "[வேழவேந்தனின்] கவிதைகளிலேயும் தடுக்கின்ற கணுக்களை எப்போதும் நான் பார்த்ததில்லை" என்றார்.[31]
ஆண்டு | தலைப்பு | ஆசிரியர்/
தொகுப்பாளர்(கள்) |
வகை | பதிப்பகம் |
---|---|---|---|---|
1998 | கவிவேந்தர் கா.வேழவேந்தன் ஒரு பாட்டருவி | கவிவேந்தர் மணி விழாக் குழு | வாழ்க்கை வரலாறு | வேந்தர் பதிப்பகம், சென்னை[32] |
1998 | வேழவேந்தன் கவிதைகளில் இயற்கை | செ.மீனா | ||
1999 | கவிவேந்தர் கா.வேழவேந்தன் கவிதைகள் - ஒரு திறனாய்வு | முனைவர் எஸ்.குலசேகரன் | இலக்கியத் திறனாய்வு | அமிழ்தம் பதிப்பகம், வேலூர் |
2000 | இலக்கியவானில் கவிவேந்தர் | டி.எஸ். பாலு | ஒப்பாய்வு | |
2003 | கவிவேந்தரின் கருத்துச்சோலை | முனைவர் அ.ஆறுமுகனார் | ||
2005 | கவிஞர் கா.வேழவேந்தன் படைப்புகள்-ஓர் ஆய்வு | ச.ஜெமிலா ராணி
நெறி—வீ.அசோகன் அழகப்பா பல்கலைக்கழகம் |
ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்கான ஆய்வேடு | ------ |
2006 | Kavivendar Vezhavendan's Poems
An English Rendering |
ஜி.ஜான் சாமுவேல் | கவிதைகளின் மொழிபெயர்ப்பு | Institute of Asian Studies, Chennai |
2008 | கா.வேழவேந்தன் படைப்புலகம் | அ.சு.வாசுகி (எம்.ஏ., எம்.ஃபில்., எம்.எட்., பகுதிநேர ஆய்வாளர்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
நெறியாளர்: முனைவர் ஜி .டி.நிர்மலா மோகன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்கல்லூரி, மதுரை |
முனைவர் பட்டத்துக்கான ஆய்வேடு | ------ |
2015 | கா.வேழவேந்தன் படைப்புகள் – ஓர் ஆய்வு | இர.சந்திரசேகரன்
நெறியாளர் – ந.வசந்தி எஸ்.கே.எஸ்.எஸ் கலைக்கல்லூரி, திருப்பனந்தாள், தஞ்சாவூர் |
முனைவர் பட்டத்துக்கான ஆய்வேடு | ------ |
உசாத்துணை
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "உலக நேசன்" கலைஞர் ஆட்சியில்தான், மே'1 தொழிலாளர் தினம் அறிவிப்பு (1969) அமைச்சர் வேழவேந்தன் Part 1, retrieved 2022-02-02
- ↑ 'அறம் காத்த வர்மாக்கள்' நூல் வெளியீட்டு விழா!, retrieved 2022-02-20
- ↑ "பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/207 - விக்கிமூலம்" (in ta). https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/207.
- ↑ கன்னியப்பன், வ.க. (8 ஆகஸ்ட் 2012). "கவிவேந்தர் கா வேழவேந்தன்". https://eluthu.com/kavithai/80119.html.
- ↑ 5.0 5.1 "Welcome To TamilAuthors.com". https://www.tamilauthors.com/writers/india/Ka.Velavendan.html.
- ↑ Siragu. "பாரதிதாசன் பரம்பரை « Siragu Tamil Online Magazine, News" (in en-US). http://siragu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%88/.
- ↑ 7.0 7.1 கா.வேழவேந்தன். "ஊட்டம் தந்த பாட்டுக்குயில்" (in ta-in). https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/152010-sp-206187732223/11464-2010-11-18-22-18-42.
- ↑ "பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/108 - விக்கிமூலம்" (in ta). https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.pdf/108.
- ↑ 9.0 9.1 திமுக ஆட்சியில்தான் கிராமம் முழுவதும் மின்சாரம், சாலைகளும் வந்தது அமைச்சர் வேழவேந்தன் ex"உலக நேசன்", retrieved 2022-02-02
- ↑ Staff (2009-06-30). "அறிவியல் தமிழ் மன்ற தலைவராக கவிஞர் கா.வேழவேந்தன்" (in ta). https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0630-velavendhan-appointed-as-scientific-tamil.html.
- ↑ விடுதலை: 1. மே 2012. doi:03-5-2012.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 [https://assembly.tn.gov.in/archive/4th_1967/Review%204_67-70.pdf "TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY QUADRENNIAL REVIEW 1967-70"]. https://assembly.tn.gov.in/archive/4th_1967/Review%204_67-70.pdf.
- ↑ 13.0 13.1 "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320175222/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf.
- ↑ "வகித்த பொறுப்புகள் – Kavi Vendhar Vezhavendan" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2022-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220202031622/http://kavivendarvezhavendan.in/%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/.
- ↑ "Indian Delegates and Advisers to International Labour Conference (1919-2016)". https://labour.gov.in/sites/default/files/Indian%20Delegates%20and%20Advisors%20in%20International%20Labour%20Conferences%20of%20ILO%2C%20Geneva.pdf.
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ [https://assembly.tn.gov.in/archive/5th_1971/5th-71-76.pdf "TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY QUINQUENNIAL REVIEW 1971-76"]. https://assembly.tn.gov.in/archive/5th_1971/5th-71-76.pdf.
- ↑ முத்துக்குமார், ஆர். (2010). "திராவிட இயக்க வரலாறு (பாகம்-2)". கிழக்கு. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184935981. https://www.google.co.in/books/edition/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/jZldDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=inauthor:%22%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22&printsec=frontcover.
- ↑ "கவிவேந்தர் கா. வேழவேந்தன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்". https://www.viduthalai.page/2022/01/blog-post_775.html.
- ↑ Syed Muthahar Saqaf (6 மே 2016). தி இந்து.
- ↑ கல்விச்சோலை.காம். "எளிமையின் சின்னம் அண்ணா!" (in en-GB). https://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_14.html.
- ↑ முன்னாள் அமைச்சர் கா. வேழவேந்தன் காலமானார். செய்தி, தினமணி, 28. சனவரி. 2022
- ↑ "திமுக முன்னாள் அமைச்சர் கவிஞர் கா.வேழவேந்தன் மறைவு; முதல்வர் அஞ்சலி" இம் மூலத்தில் இருந்து 2022-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220201150857/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=738096.
- ↑ "நூல் வெளியிட்டு விழா!". http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/84-2012-05-09-06-41-53.
- ↑ "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~". https://www.tamiluniversity.ac.in/tamil/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/.
- ↑ புதுயுகத் தமிழர். 2005. பக். 19. https://noolaham.net/project/668/66799/66799.pdf.
- ↑ Staff (2009-09-26). "தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், கா. வேழவேந்தனுக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு" (in ta). https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0926-athithanar-award-for-silamboli-vezhaventhan.html.
- ↑ Vezhavendan speech - dhinathanthi, retrieved 2022-02-11
- ↑ Vezhavendan part2, retrieved 2022-02-11
- ↑ tnpscwinners (2017-01-05). "சுரதா" (in en-US). https://tnpscwinners.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be/.
- ↑ Suba Veerapandian speech | கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா - 2019, retrieved 2022-02-09
- ↑ குழந்தைசாமி, வா.செ.. "எனது பார்வையில்... [அணிந்துரைகள் தொகுதி-1"]. http://www.tamilvu.org/library/kulothungan/pdf/Enathu_Paarvayil_01.pdf.
கூடுதல் வாசிப்பு
- முகம் மாமணி,'100 சாதனையாளர்கள்' மணிவாசகர் பதிப்பகம்-1994.
வெளி இணைப்புகள்
- கவிவேந்தர் வேழவேந்தன்- வலைப்பக்கம் பரணிடப்பட்டது 2022-02-01 at the வந்தவழி இயந்திரம்
- கவிஞர் வேழவேந்தரின் கவிதை வழி சமுதாயம் பரணிடப்பட்டது 2022-02-16 at the வந்தவழி இயந்திரம்
- கா.வேழவேந்தன் படைப்புகள் – ஓர் ஆய்வு