கம்பதாசன்
கம்பதாசன் (செப்டம்பர் 15, 1916 - மே 23, 1973) தமிழகக் கவிஞரும், எழுத்தாளரும், திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கம்பதாசன் |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 15, 1916 |
இறப்பு | மே 23, 1973 | (அகவை 56)
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் ,திரைப்படப் பாடலாசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
கம்பதாசன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் மருங்கே உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், (குலாலர்) குயவர் குலத்தில் சுப்பராயர் - பாலம்மாள் தம்பதிக்கு 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர் ஐவரும் பெண்கள். இவரது இயற்பெயர் அப்பாவு. பெற்றோர் இவரை "இராஜப்பா" என்று செல்லமாக அழைத்தார்கள். கம்பன் மீது அதிக பற்றுக் கொண்டவர் என்பதால் கம்பதாசன் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டார்.
ஆறாம் வகுப்பு வரைதான் தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார். கவிஞரின் குடும்பத்தினர் அவரது இளமைப் பருவத்திலேயே சென்னையைச் சேர்ந்த புரசைவாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள குயப்பேட்டை நகர சபைப் பள்ளிக் கூட்டத்திலேயே தமது படிப்பைத் தொடர்ந்துள்ளார். நடிப்புக் கலையிலே நாட்டம் ஏற்பட்டதால், ஆரம்பப் பள்ளிக்கு மேல் இவர் நாட்டம் கொள்ளவில்லை. நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களுக்குப் பாட்டெழுதினார். கம்பதாசனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நாடகங்களில் பாடுவார். பாடகராகவும் புகழ் பெற்றார். ஆர்மோனியமும் வாசிப்பார்.
திரைப்படத்துறையில்
மிகவும் இளமைக் காலத்திலேயே ‘திரெளபதி வஸ்திராபரணம்’, ‘சீனிவாச கல்யாணம்’ போன்ற படங்களில் தனது நடிப்புத் திறனைத் காட்டி நின்றார். 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல் எழுதினார். அதனைத் தொடர்ந்து வேணுகானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசெளந்தரி, அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியும், கதை வசனம் எழுதியும் புகழின் உச்சியில் காணப்பட்டார். இதில் அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப் படங்களில் இவர் எழுதிய பாடல்கள் இன்னும் காலத்தால் அழியாத பாடல்களாகவும், திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத பாடல்களாகவும் காணப்படுகின்றன.
தமிழில் மறுமலர்ச்சிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமதர்மக் கொள்கை கொண்ட கம்பதாசன், தாம் எழுதிய திரைப்படப் பாடல்களில் முற்போக்குக் கருத்துகளை எளிய நடையில் புகுத்தினார்.
தமிழ் உணர்வுமிக்க அவருக்குப் போட்டிகள் நிறைந்த திரையுலகம் அதிக வாய்ப்பைத் தராவிட்டாலும், குரல் அசைவுப் படங்களுக்கு (டப்பிங்) அதிகம் எழுதியிருக்கிறார். "வானரதம்" என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கப் பாடலில் எளிய தமிழைப் பயன்படுத்தினார்.
கம்பதாசனின் கவித்திறமையை அடையாளங்காட்டி "கனவு" என்ற கவிதை நூல் 1941இல் வெளிவந்தது.
குடும்பம்
மலையாளப் பெரும் கவிஞர் வள்ளத்தோள் என்பவரின் மகளும், நாட்டியத் தாரகையுமான சித்திரலேகா என்பவரை கம்பதாசன் முதன் முதலாக மணந்தார். நீண்ட காலத்துக்கு உறவு முறை நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே மண வாழ்க்கை முறிந்தது. பின்னர் கவிஞர் சுசீலா என்ற பாடசாலை ஆசிரியையை இரண்டாந் தாரமாக மணந்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடியவே பின்னர் அனுசுயா என்ற இன்னொரு நர்த்தகியை மணந்து கொண்டார்.
உடல்நலக் குறைவு காரணமாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் காலமானார்.
எழுதிய நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- கனவு; 1941; வங்கக்கவி ஹரிந்தீரநாத் முன்னுரையுடன்
- விதியின் விழிப்பு
- முதல் முத்தம்
- அருணோதயம்
- அவளும் நானும்
- பாட்டு முடியுமுன்னே
- புதுக்குரல்
- தொழிலாளி
நாடக நூல்கள்
- ஆதிகவி
- சிற்பி
சிறுகதைத் தொகுதி
- முத்துச் சிமிக்கி
- சிலோன் விஜயேந்திரன் தொகுத்து வெளியிட்டவை
- கம்பதாசனின் கவிதைத் திரட்டு (1987)
- கம்பதாசன் திரை இசைப்பாடல்கள் (1987)
- கம்பதாசன் காவியங்கள் (1987)
- கம்பதாசன் சிறுகதைகள் (1988)
- கம்பதாசன் நாடகங்கள் (1988)
- கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
எழுதிய சில திரைப்படப் பாடல்கள்
- மின்னல் போலாடுமிந்த வாழ்க்கையே (1953)
- கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே (அக்பர்- 1961, இசை - நொவ்ஷத், பாடியவர்: பி. சுசீலா
- கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும் (அவன் - 1953, இசை - சங்கர் ஜெய்கிஷன், பாடியவர்: ஜிக்கி
உசாத்துணை
- "பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்" இம் மூலத்தில் இருந்து 25 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525025529/http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/sep/26/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-246683.html., தினமணி
- "காலம் மறந்து விட்ட காதலும் கண்ணீரும் தந்த கவிஞர் கம்பதாசன்" இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703024756/http://www.thinakaran.lk/vaaramanjari/2010/07/04/?fn=k1007041.
வெளி இணைப்புகள்
- கம்பதாசன் நூற்றாண்டு விழா – சிறப்பு காலத்துளி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், எஸ்பிஎஸ், 19 அக்டோபர் 2015
- கம்பதாசன் என்னும் காளிதாசன் உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2017