சிலோன் விஜயேந்திரன்
சிலோன் விஜயேந்திரன் | |
---|---|
முழுப்பெயர் | |
ராஜேஸ்வரன் | |
பிறப்பு | 1946 |
பிறந்த இடம் | மாவிட்டபுரம், |
யாழ்ப்பாணம் | |
மறைவு | 08-2004 |
சென்னை, | |
தமிழ்நாடு | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | நடிகர், |
எழுத்தாளர், | |
கவிஞர் | |
மற்ற | இ. விஜயேந்திரன் |
பெயர்கள் | |
சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்படும் இ. விஜயேந்திரன் (1946 - ஆகத்து 2004) ஈழத்து எழுத்தாளரும், கவிஞரும், நாடக, மற்றும் திரைப்படத் துணை நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் ஆவார். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரன். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்தவர். தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர், மனைவி இசுலாமியர். இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார். கல்லடியாரைப் போலவே விஜயேந்திரனும் நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.
நடிப்பு
1960 இல் கோப்பாய் கலைவளர்ச்சிக் கழகம் மேடையேற்றிய "கட்டபொம்மன்' நாடகத்தில் முதன் முதலில் வில்லன் பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து காதலா கடமையா, மலர்ந்த வாழ்வு போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தார். இவரது முதல் திரைப்படம் பைலட் பிரேம்நாத். இதில் வில்லனாக நடித்தார். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர் சிவாஜி கணேசன் உட்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 77 திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.
எழுத்துத் துறை
சிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். 1950களிலேயே எழுதத் தொடங்கிய இவர் ஏராளமான சிறுகதைகளையும், நாடகங்களையும், புதினங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய வரலாற்று நூல்களில் "ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை" எனும் நூல் பெரிதும் பாராட்டுப் பெற்றது. 'வைகறை', 'விஜயா', 'நடிகன்' ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழகத்தின் மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர். கவிஞர் கம்பதாசனை ஆய்வு செய்து நூல்கள் எழுதினார்.
சிலோன் விஜயேந்திரன் இராஜீவ் காந்தி கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர்.
விபத்தில் இறப்பு
2004, ஆகத்து 26 வியாழக்கிழமை திருவல்லிக்கேணியில் இடம்பெற்ற ஒரு தீவிபத்தில் படுகாயமடைந்து , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் தனது 58வது அகவையில் காலமானார்.
எழுதிய நூல்கள்
- ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள்
- விஜயேந்திரன் கவிதைகள் (1968)
- அவள் ( நாவல்) (1968)
- அண்ணா என்றொரு மானிடன் (1969)
- செளந்தர்ய பூஜை (சிறு கதைகள்)(1970)
- பிரேம தியானம் (வசன காவியம்) (1971)
- ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (வரலாறு) (1973)
- விஜயேந்திரன் கதைகள் (1975)
- பாரதி வரலாற்று நாடகம் (1982)
- நேசக் குயில் (கவிதைகள்) (1984)
- உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும் (1985)
- கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் (1986)
- சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 2) (1990)
- ஈழத்துக் கவிதை விமர்சனம் (1992)
- மூன்று கவிதைகள் (1993)
- சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 3) (1994)
- இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும் கவிதைகளும் (1994)
- அல்லாஹு அக்பர் (1996)
தொகுத்த நூல்கள்
- கல்லடிவேலன் நகைச்சுவை கதைகள் (1987)
- கம்பதாசன் கவிதைத் திரட்டு (1987)
- கம்பதாசன் திரை இசைப்பாடள்கள் (1987)
- கம்பதாசன் காவியஙள் (1987)
- கம்பதாசன் சிறுகதைகள் (1988)
- கம்பதாசன் நாடகங்கள் (1988)
- கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
- கலைஞர் திரை இசைப் பாடல்கள் (1988)
- ஈழத்துக் கவிதைக் கனிகள் (1990)
- அறுபது காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும் (1992)
நடித்த திரைப்படங்கள் சில
- பைலட் பிரேம்நாத் (1978)
- பொல்லாதவன் (1980)
- ஓசை (1984)
- ஏமாறாதே ஏமாற்றாதே
- கொலுசு
- எரிமலை
- லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
- மங்கம்மா சபதம் (1985)
- சிவப்பு நிலா (1985)
- புன்னகை மன்னன் (1986)
- பிரளய சிம்மன் (தெலுங்கு)
பட்டங்கள்
- 'நவரச மன்னன்' - 1976
- 'ரசிக விற்பன்னர்'
- 'கலைஞானமணி'