உறையூர்ப் பல்காயனார்
உறையூர்ப் பல்காயனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் 374ஆவது பாடலாக உள்ளது.
இவர் பெயர் பராயனார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் யாப்பிலக்கணஞ் செய்திருந்தாரென்றும் யாப்பருங்கலக்காரிகை மூலம் அறிய முடிகிறது.
இணைப்பு
யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களின் உரையில் மேற்கோள் பாடல்களாகப் பல்காயனார் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன. அவை யாப்பிலக்கணம் பற்றியவை. நன்னூல் போன்ற நூல்கள் தோன்றிய காலத்துக்குச் சற்றே முன்பு தோன்றியவை. இந்த இலக்கணப் புலவர் பல்காயனார் வேறு, சங்ககாலப் புலவர் உறையூர்ப் பல்காயனார் வேறு என்பதே பொருத்தமானது.
உறையூர்ப் பல்காயனார் பாடல் தரும் செய்தி
திருமணத்துக்கு முன் அவனுக்கும் அவளுக்கும் கள்ள உறவு. ஊரெல்லாம் ஒரே பேச்சு. இப்போது அவளது தாய், தந்தையருக்குச் சொல்லியாயிற்று. அவன் அவளது தாய், தந்தையர் முன் வணங்கி நிற்கிறான். ஊர்மக்கள் குழப்பம் மேலும் சிக்கலாகிறது. உயர்ந்த தென்னைமரத்தில் வளைந்து தொங்கும் கீற்றில் தூக்கணங் குருவி கட்டியிருக்கும் கூட்டைப் போல அவர்களுக்கு மனக்குழப்பம். (அவனும் அவளும் அந்தக் கூட்டில் வாழும் குருவிகள் போல வாழ்வர் என்பது இதனால் உணர்த்தப்படும் இறைச்சிப் பொருள்)