பைரவர்
பைரவர் | |
---|---|
பைரவர் | |
தேவநாகரி | भैरव |
சமசுகிருதம் | Bhairava |
தமிழ் எழுத்து முறை | பைரவர் |
பாளி IAST | Bhairava |
எழுத்து முறை | வையிரவன், கஞ்சுகன், நிர்வாணி |
வகை | சிவனின் ஒரு உருவம் |
இடம் | கைலாயம் |
கிரகம் | சூரியன் |
மந்திரம் | ஓம் பைரவாய நமஹா |
ஆயுதம் | திரிசூலம் |
துணை | பைரவி |
பைரவர் (Bhairava) சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சுவர்ண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவனின் ருத்ர ரூபமாக இருப்பவர்; ஒரு சிவன் கோயிலின் வடக்கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்றும் அறியப்பெறுகிறார்.
பைரவர் தோற்றம்
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவனிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் அவர்கள் சேர்ந்து அந்தகாசுரணை கொன்று விட்டனர் மற்றும் அவர்கள் எல்லோரையும் கப்பரியுள்ளனர்.
பைரவ மூர்த்தியை பைரவர், பிரம்ம சிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ர பாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வைரவர் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.
அட்சர பீடங்களின் காவலன்
சிவனை பிரிந்த பார்வதி பிரம்மானின் மானசீக குமாரனான பிரஜாபதி தக்கன் மகளாக பிறந்தார். அவர் தாட்சாயினி என்றும் சதி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவனின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையை வெட்டி போட்டு அவருக்கு பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவன் மீது பிரம்ம குமாரனான தக்கன் கோபம் கொண்டிருந்தார். அதனால் தக்கன் தாட்சாயினிக்கும் சிவனுக்கும் அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றைத் தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதி விழுந்து தற்கொலையில் இறக்கிறார். மற்றும் சிவனும் பார்வதியும் சேர்ந்து தக்கனின் வேள்வியை அழித்து விட்டனர் அப்போது வெற்றிகரமாக.
சிவன் சதியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட விஷ்ணு, சிவனை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் விஷ்ணு அவ்வுடலைத் தகர்த்தார். சதியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதறுண்ட சதியின் உடல் பாகங்களை சிவன் சக்தி பீடங்களாக மாற்றினார். தாரகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்கு வரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் அவரின் ஒரு உருவமான ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார். மற்றும் முருகன் தாரகாசுரனை கொன்று விட்டார் அதற்கு அப்புறம் தேவர்களையும் முனிவர்களையும் காத்தார். [1]
பைரவர் வடிவங்கள்
மஹாபைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட (எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
அஷ்ட (எட்டு) பைரவர்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் விருத்தகாலர் கோயிலில் அருள் செய்கிறார். அன்னத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் பிருகஸ்பதியின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான பிராம்மி விளங்குகிறாள்.
ருரு பைரவர்
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் ஹனுமான் காட்டு கோயிலில் அருள் செய்கிறார். காளையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான மகேசுவரி விளங்குகிறாள்.
சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் துர்க்கை கோயிலில் அருள் செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.
குரோதன பைரவர்
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் காமாக்ஷி கோயிலில் அருள்செய்கிறார். செம்பருந்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.
உன்மத்த பைரவர்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் பீம சண்டி கோயிலில் அருள் செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.
கபால பைரவர்
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் லாட் பசார் கோயிலில் அருள் செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திரன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.
பீட்சன பைரவர்
பீட்சன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் பூத பைரவர் கோயிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் அருள் செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் இராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.[2]
வாரணாசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாக்ஷி கோயில், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - ஹனுமான் காட்டு கோயில், கபால பைரவர் - லாட் பஜார் கோயில், சண்ட பைரவர் - துர்க்கை கோயில், பீட்சன பைரவர் - பூத பைரவர் கோயில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம் கோயில்.
அறுபத்து நான்கு பைரவர்கள்
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.[3]
- நீலகண்ட பைரவர்
- விஷாலாக்ஷ பைரவர்
- மார்த்தாண்ட பைரவர்
- முண்டனப்பிரபு பைரவர்
- சுவஸ்சந்த பைரவர்
- அதிசந்துஷ்ட பைரவர்
- கோர பைரவர்
- சம்ஹார பைரவர்
- விஷ்வரூப பைரவர்
- ஞானாரூப பைரவர்
- பரம பைரவர்
- தண்டவகர்ண பைரவர்
- சுதாபாத்ர பைரவர்
- சீரீட பைரவர்
- உன்மத்த பைரவர்
- மேகநாத பைரவர்
- மனோவேக பைரவர்
- க்ஷேத்ரபாலக பைரவர்
- விருபாக்ஷ பைரவர்
- கராள பைரவர்
- நிர்பய பைரவர்
- சுவர்ண பைரவர்
- பிரேக்ஷத பைரவர்
- லோகபால பைரவர்
- கதாதர பைரவர்
- வஜ்ரஹஸ்த பைரவர்
- மஹாகால பைரவர்
- பிரகண்ட பைரவர்
- பிரளய பைரவர்
- அந்தக பைரவர்
- பூமிகர்ப்ப பைரவர்
- பீட்சன பைரவர்
- வினாஷின பைரவர்
- குலபால பைரவர்
- ருண்டமாலா பைரவர்
- ரத்தாங்க பைரவர்
- பிங்களேஷ்ண பைரவர்
- அப்ரரூப பைரவர்
- தாரபாலன பைரவர்
- பிரஜாபாலன பைரவர்
- குல பைரவர்
- மந்திர நாயக பைரவர்
- சிவ பைரவர்
- பிரம்ம பைரவர்
- விஷ்ணு பைரவர்
- வடுகநாத பைரவர்
- கபால பைரவர்
- பூதவேதாள பைரவர்
- திரிநேத்ர பைரவர்
- திரிபுராந்தக பைரவர்
- வரத பைரவர்
- பர்வத வாகன பைரவர்
- சசி வாகன பைரவர்
- கபால பூஷண பைரவர்
- சர்வவேத பைரவர்
- ஈசான பைரவர்
- முண்டாக்தாரிணி பைரவர்
- சர்வபூத பைரவர்
- கோரநாத பைரவர்
- பயங்க பைரவர்
- புத்திமுக்தி பயப்த பைரவர்
- காலாக்னி பைரவர்
- மஹாருத்ர பைரவர்
- தக்ஷிணா பிஷ்திதி பைரவர்
சுவர்ண பைரவர்
செல்வத்திற்கு அதிபதியான பைரவர் சுவர்ண பைரவர் என்றழைக்கப்படுகிறார். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.[4]
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்களம் நருவெளி மிக அருகில் காவேரி நதி வடக்கு நோக்கி ஓடி வட காவேரி என சிறப்பு பெயர் பெற்ற காவேரியின் மேற்கு கரையில் வினாயகர் கோயிலும், காசி விஷ்வநாதர் கோயிலும், இவ்விரு கோயிலுக்கும் இடையே மிக பழமையான இரட்டை கால பைரவர் கோயிலும் அமைந்துள்ளன. தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூசைகள் நடைபெருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய ஸ்ரீ சுவர்ண பைரவர் கோயில்
ஈரோடு மாவட்டம், ஈரோடு - காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்ரீ சுவர்ண பைரவர் கோயில் அமைந்துள்ளது. ஐந்து அடி உயரம் கொண்ட சர்வ லக்ஷணம் நிறைந்த மூலவர் சிலை, சுவர்ண லிங்கம் மற்றும் 33 அடி உயரத்தில் ஸ்ரீ மஹா பைரவரின் கம்பீரமான சிலை நுழைவாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் 64 பைரவர்களில் முகப்பிலும், கருவறையிலும் 2 பைரவர்களும் அமர்ந்தது போக, மீதி 62 பைரவர்களும் பிரகார மண்டபத்தின் மேற்பகுதியில் சுதைசிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர்.
தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக செவ்வாய் தோறும் மண் விளக்கு பூசை, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் சிறப்பு யாகம் மற்றும் சுவர்ண லிங்கம் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறுகிறார்கள். திருக்கோவில், ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களின் வழிகாட்டுதல் படி ஸ்ரீ பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
வழித்தடம்
ஈரோடு - காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அடுத்து ராட்டைசுற்றிபாளையம் பேருந்து நிறுத்தம்.
கால பைரவர்
வாரணாசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் கால பைரவர் திகழ்கிறார். வாரணாசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஷ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. வாரணாசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் வாரணாசி யாத்திரை செய்ததன் முழு பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
வேறு பைரவ வடிவங்கள்
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களை அழிப்பவர் என்று பொருள் ஆகும்.
பைரவர் வழிபாடு
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பைரவர் விரதம்
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.[5]
பைரவர் கோயில்கள்
- வாரணாசியில் கால பைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரங்கள் என்றும் கூறுகின்றனர்.
- குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள க்ஷத்திரபாலபுரம் எனும் ஊரில் கால பைரவருக்கு தனி கோயில் உள்ளது. சிவனை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் இருந்தாலும், தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றேயாகும்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது சீர்காழி ஊரில் உள்ள சட்டைநாதர் கோயிலில் சட்டைநாதரை தலைவராக் கொண்டு எட்டு பைரவர்களும் கோயில் கொண்டுள்ளனர்.
- திருச்சிராப்பள்ளி – உறையூர் சாலையில் உள்ள ஜெய காளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவிகள் மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.
- கோயம்புத்தூர் நஞசுண்டாபுரம் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர கால பைரவர் வீற்றிருக்கிறார்.
- காஞ்சிபுரம் திருமாகறல் தலத்தில் அர்த்தநாரி பைரவர் வடிவில் கால பைரவர் காட்சியளிக்கின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் ஆறகளுரில் ஶ்ரீ பெரியநாயகி உடனுறை காமநாதீஷ்வரர் கோயிலில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிக்கின்றனர்.
- யாழ்ப்பாணத்தில் பொன்னலையில் ஶ்ரீ நரசிங்க பைரவர் வடிவில் கால பைரவர் காட்சியளிக்கின்றனர்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் அருகில் காரைக்காடு கிராமத்தில் உள்ள பைரவ சாய் பீடத்தில் விதியினை மாற்றும் பன்னிரண்டு ராசிக்கும் உரிய அஷ்ட பைரவர்கள் உடன் சுவர்ண பைரவரும் இணைந்து நவ பைரவர்களாக காட்சியளிக்கின்றனர்.
பைரவர் படங்கள்
மந்திரங்கள் பைரவ காயத்ரி 1
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்
பைரவர் காயத்ரி 2
ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்
மேற்கோள்கள்
- ↑ "Essence Of Skanda Purana Kartikeya exterminates". www.kamakoti.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-30.
- ↑ http://www.sivabhogam.com/astabairavar.html பரணிடப்பட்டது 2016-05-27 at the வந்தவழி இயந்திரம் அஷ்ட பைரவ
- ↑ http://www.bairavafoundation.org/types-of-bairavar-daily-news158.htm பைரவரின் 64 வகைகள்
- ↑ அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-01. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
வெளி இணைப்புகள்
- Shri Kaal Bhairav Mandir, New Delhi பரணிடப்பட்டது 2017-01-29 at the வந்தவழி இயந்திரம்
- Bhairav Worship Chant - Chalisa
- Obtaining a Yidam (Bhairava or Dakini) as a guide and protector (from wisdom-tree.com)
- Shri Bhairavnath Mandir - Kikali
- செல்வம் பெருகச் செய்யும் பைரவர் தரிசனம் தினமலர்