நேரம்
வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.
நேரம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறு. மேலும் நேரம் அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதில் நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன. நேரம் என்பது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கொண்டிருந்த இயல்பியல் நோக்கு ஆகும்.
இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம் என்பது அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், பல்வேறு நிகழ்வுகளையும் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள். நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைக்க்காலத்தையும் அளந்து கொள்கிறார்கள். பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடுகிறார்கள். மேலும், இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. கோட்பிரைட் லீப்னிஸ், இம்மானுவேல் கண்ட் போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.
பொதுவாக நேரம் என்பது காலத்தை அளக்க பயன்படும் ஒரு அளவை ஆகும். காலத்தை அளக்க நிறைய வழிகள் உள்ளன இதனை அளந்தறிவதற்கு கால அளவியல் என்று பெயர்.
அறிவியலில், வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகள்:
பண்டைய முறை
பண்டைய காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக நாட்காட்டி உருவாக்கப்பட்டது. நாட்காட்டியை வைத்து ஆண்டுக்கு இத்தனை மாதங்கள் என்றும், மாதங்களுக்கு இத்தனை நாட்கள் என்றும் கணித்தார்கள். பின்னர் நாட்களுக்கு குறைவான காலத்தை கணக்கிடுவதற்காக சூரியக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. சூரியக் கடிகாரங்களில் சூரியனின் திசையை பொருத்து நிழல் விழும். அதை வைத்து நேரத்தை கணக்கிட்டனர். அதனினும் குறைவான நேரத்தை அளக்க நீர்க் கடிகாரம், மணல் கடிகாரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர்.
எகிப்தியர்கள் கி.மு 500 க்கு முன்பே T போன்ற வடிவம் உடைய கருவியை நேரம் அளக்க பயன்படுத்தினர். T போன்ற வடிவம் உள்ள வளைவு சூரியன் உதிக்கும் திசையில் அமைந்து இருக்கும். இதில் விழும் நிழலை வைத்து நேரத்தை அளவிட்டார்கள். இக்கருவியே பின் நாளில் சூரியக் கடிகாரமாக வளர்ந்தது.
நாட்காட்டி வரலாறு
பழைய கற்காலத்திலிருந்தே நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகில் உள்ள அனைத்து கலாச்சார மக்களும் நாட்காட்டி பயன்படுத்தியுள்ளனர். நாட்காட்டி பயன்படுத்துவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.
சந்திர நாட்காட்டியே பழைய நாட்காட்டியாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. சந்திர நாட்காட்டியில் சிலர் 12 மதங்களையும்(354),சிலர் 13 மாதங்களையும்(384) ஓராண்டாக பின்பற்றி வந்துள்ளனர். யூலியசு சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர். பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார். அந்நாட்காட்டி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவே கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.
தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.
நொடி
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள நொடியின் கால அளவை கணக்கிடும் முறை ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிபடையில் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். அதன்படி ஒரு நொடி என்பது நூற்று முப்பத்து மூன்று அணு எண் கொண்ட ஒரு சீசியம் அணு(இயல்பு நிலையில் சீசியத்தின் வெப்பம் சுழியம் ஆகும்) 9192631770 முறை அதிர்வதற்கு சமமான நேரம் ஆகும்.
அலகு
அலகு என்பது ஒன்றன் அளவைக் குறிக்கப் பயன்படும் முறை ஆகும். நேரத்திற்கு நிறைய அலகுகள் உள்ளன. நிமிடம், மாதம், நாள், வாரம், நூற்றாண்டு என்பன அவற்றுள் சில அலகுகள் ஆகும்.
சர்வதேச முறை அறிவிப்பின்படி நேரத்தின் அடிப்படை அலகு நொடி ஆகும். நாள், மாதம், ஆண்டு, மில்லி நொடி போன்றவை அடிப்படை அல்லாத அலகுகள் ஆகும். நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்கும் அலகுகள் உள்ளன.
அலகு | கால அளவு | குறிப்பு |
---|---|---|
நொடியில்(instant) | வரையறுக்கப் படாதது | கூறும் நேரத்தைக் குறிக்கும்; காலக் கோட்டில் ஒரு புள்ளி; அல்லது, பூச்சிய நேர அளவைக் குறிக்கும். |
ப்ளாங்க் நேரம் | 5.39 x 10−44 நொடி | ஒளியானது ஒரு ப்ளாங்க் நீளத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும், தோராயமாக 10−43 மணித்துளிகள். |
யாக்டோ நொடி | 10−24 நொடி | |
ஜெப்டோ நொடி | 10−21 நொடி | |
அட்டோ நொடி | 10−18 நொடி | அளக்கக்கூடிய மிக குறைந்த நேரம் |
ஃபெர்மெடொ நொடி | 10−15 நொடி | |
பிக்கோ நொடி | 10−12 நொடி | |
நானோ நொடி | 10−9 நொடி | |
மைக்ரோ நொடி | 10−6 நொடி | |
மில்லி நொடி | 0.001 நொடி | |
சென்டி நொடி | 0.01 நொடி | |
டெசி நொடி | 0.1 நொடி | |
நொடி | 1 நொடி | அடிப்படை அலகு |
டெக்கா நொடி | 10 நொடி | |
நிமிடம் | 60 நொடி | |
ஹெக்டோ நொடி | 100 நொடி | 1 நிமிடம் 40 நொடி |
கிலோ நொடி | 1,000 நொடி | 16 நிமிடம் 40 நொடி |
மணி/மணித்தியாலம் | 60 நிமிடம் | |
நாள் | 24 மணி | |
கிழமை/வாரம் | 7 நாள் | |
மெகா நிமிடம் | 1,000,000 நிமிடம் | 11.6 நாள் |
வருடம் | 12 மாதங்கள் | |
சக வருடம் | 365 நாட்கள் | 52 வாரங்கள் + 1 நாள் |
கிரிகோரியன் ஆண்டு | 365.2425 நாள் | |
லீப் வருடம் | 366 நாள் | 52 வாரம் + 2 நாட்கள் |
டெகேட் | 10 ஆண்டுகள் | |
தலைமுறை | மாறுபடக்கூடியவை | மனிதர்களுக்கு 17-35 ஆண்டுகள் |
பெருவிழா | 50 ஆண்டுகள் | |
நூற்றாண்டு | 100 ஆண்டுகள் |
கருவிகள்
நேரத்தை அளக்கப்பயன்படும் கருவிகளில்
- சூரிய கடிகாரம்-பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது.
- மண்கடிகாரம்-பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது.
- மணிக்கூடு-தற்போது பயன்படுத்தப்படும் கருவி.
நேர அளவீட்டு சாதனங்களின் வரலாறு
நேரத்தை அளவிடுவதற்கு பலவிதமான அளவிடும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனங்களைப் பற்றிய ஆய்வு கால அளவியல் என்று பரவலாக அறியப்படுகிறது.
கி.மு. 1500 கி.மு. வரை பயன்படுத்தப்பட்ட ஒரு எகிப்து நாட்டின் சாதனம், டி-சதுர வளைவரைக்கு ஒத்த வடிவம் போன்றது, அதன் கால்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குறுக்குச்சட்ட உழலையிலிருந்து தோன்றும் நிழலைக்கொண்டு நேரம் கணக்கிடப்பட்டது. டி-சதுர வளைவரைக்கு ஒத்த வடிவம் கொண்ட சட்டமானது, காலையில் கிழக்கு நண்பகல் வேளையில் சுழற்றி மாலைவேளையில் நிழல் தரும்படியும் வைக்கப் படுகிறது.[1]
ஒரு சூரிய மணிகாட்டியில் நிழலினாற் பொழுதறிதற்காக நேராக நடப்பெறும் சங்குக் குச்சி எனும் கோல் ஏற்படுத்தும் நிழலை அடிப்படையாகக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு அளவிடக்கூடிய அடையாளங்கள் வரையறுக்கப்படுகின்றன. நிழலின் நிலை நேர வலயம் எனும் உள்ளூர் நேரத்தை மணி என்னும் அலகில் குறிக்கிறது. எகிப்தியர்கள் ஒரு நாளை சிறிய பகுதிகளாக பிரிக்க திட்டமிட்டு இரட்ட எண்முறையை அவர்களின் சூரிய மணிகாட்டியில் உருவாக்கினர்.
ஒரு வருடத்தில் சந்திர சுழற்சியின் எண்ணிக்கை மற்றும் இரவு நேரத்தில் நேரத்தைக் கழிக்கப் பயன்படுத்தப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 12 எனும் இலக்கத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது.[2]
பண்டைய வரலாற்றுப்படி பூர்வ உலகின் மிக துல்லியமான காலவரிசை சாதனம், நீர் கடிகாரம் அல்லது நாழிகை வட்டில் எனப்படும் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு நேரம் அறிய உதவும் ஒரு கருவி ஆகும். இதில் ஒன்று அமன்ஹோதெப் I எனப்படும் எகிப்திய பாரோவின் (1525-1504 கி.மு.) கல்லறையில் காணப்பட்டது. இரவில் கூட நேரத்தை அளவிடுவதற்கு அவை பயன்படுத்தப்படலாம். ஆனால் நீரின் ஓட்டத்தை நிரப்புவதற்கும், பராமரிக்கவும் மனித ஆற்றல் வேண்டும். பண்டைக் கிரேக்கர்களும்,சாலடிய நாகரிகத்தினரும் (தென்கிழக்கு மெசொப்பொத்தாமியாவின் மக்களும்) தங்களது வானியல் ஆய்வுகளின் ஒரு முக்கிய பகுதியாக காலக்கெடுவைப் பதிவு செய்துள்ளனர். இடைக்காலத்தில் அரேபிய கண்டுபிடிப்பாளர்களும் பொறியியலாளர்களும் தண்ணீர் கடிகாரத்தைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டனர்.[3]
11 ஆம் நூற்றாண்டில், சீன கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தாமாக இயங்கும் முதல் இயந்திர கடிகாரங்களைக் கண்டுபிடித்தனர்.
மணல் ஓட்டத்தைக் கொண்டு நேரத்தை அளவிடுவதற்கு மணற்கடிகாரம் அல்லது மணற்கடிகை எனப்படும் மணல் சொரிந்து காலம் காட்டும் கருவி பயன்படுத்தப்பட்டது. பெர்டினென்ட் மகலன் தன்னுடைய 18 கப்பல்களிலும் கப்பலுக்கு ஒன்றாக மணற்கடிகையைப் பயன்படுத்தி உலகைச் சுற்றினார்(1522).[4] மத்திய காலங்களில், உலகம் முழுவதிலும், பொதுவாக கோவில்களிலும், தேவாலயங்களிலும் தூபக் குச்சிகள் மற்றும் மெழுகுவர்த்திகள் எரிவதற்கு ஆகும் காலத்தைக்கொண்டு நேரம் அளவிடப்பட்டது.
ஆங்கில வார்த்தை கடிகாரம் என்பது அநேகமாக மத்திய டச்சு சொல் 'குளோக்' (klocke) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என கருதப்படுகிறது. இது, இடைக்கால லத்தீன் வார்த்தையான 'கிளோகா'விலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. செல்டிக் (Celtic) நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, இலத்தீன் மற்றும் ஜேர்மனிய சொற்களால் மணி என்ற பொருளை விளக்கும் சொற்களே நேரத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
கடலில் பயணநேரமானது, மணிகளால் குறிக்கப்பட்டது.(பார்க்கவும்: கப்பல் மணி).
கடிகாரங்களில் கைக்கடிகாரம் போன்ற நீண்ட கால கவர்ச்சியான வகைகள் உள்ளன.
கடிகாரங்களின் பொதுக் கட்டுப்படுத்திகள்:
- புவியீர்ப்பு விசை
- கம்பிச் சுருள்கள்,
- மின்சக்தி,
- ஊசல்கள் மற்றும் பல
முதன்முதலாக கி.மு. 250ல் பூர்வ கிரேக்கத்தில், தண்ணீர் கடிகாரங்களில் கால மணி ஒலிப்பு அறிவிப்பிக் கடிகாரங்கள் ஒரு விசில் ஒலி ஏற்படுத்தும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த உத்தியை பின்னர் லேவி ஹட்சின்ஸ் (Levi Hutchins) மற்றும் சேத் இ தாமஸ் (Seth E. Thomas) ஆகியோர் எந்திரமயமாக்கப்பட்ட கடிகாரங்களில் பயன்படுத்தினர்.
மேற்கோள்கள்
- ↑ Barnett, Jo Ellen Time's Pendulum: The Quest to Capture Time—from Sundials to Atomic Clocks Plenum, 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-45787-3 p.28
- ↑ Lombardi, Michael A. "Why Is a Minute Divided into 60 Seconds, an Hour into 60 Minutes, Yet There Are Only 24 Hours in a Day?"
- ↑ Barnett, ibid, p.37
- ↑ Laurence Bergreen, Over the Edge of the World: Magellan's Terrifying Circumnavigation of the Globe, HarperCollins Publishers, 2003, hardcover 480 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-621173-5
- ↑ "NIST Unveils Chip-Scale Atomic Clock". 27 August 2004. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
வெளி இணைப்புகள்
- சர்வதேச நேரக் கணிப்பீடு - நிலா முற்றம் கட்டுரை பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்
- Exploring Time பரணிடப்பட்டது 2015-02-21 at the வந்தவழி இயந்திரம் from Planck Time to the lifespan of the universe
- Different systems of measuring time
- Time - In Our Time பி.பி.சி.யில். (listen now)
- Dowden, Bradley (California State University, Sacramento) (2007). "Time". The Internet Encyclopedia of Philosophy. Ed. James Fieser, PhD, Bradley Dowden, PhD. அணுகப்பட்டது 2011-04-09.
- Le Poidevin, Robin (Winter 2004). "The Experience and Perception of Time". The Stanford Encyclopedia of Philosophy. Ed. Edward N. Zalta. அணுகப்பட்டது 2011-04-09.
- Time at Open Directory