திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கொடி மாடச்செங்குன்றூர் அர்த்தநாரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கொடி மாடச்செங்குன்றூர்
பெயர்:திருக்கொடி மாடச்செங்குன்றூர் அர்த்தநாரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருச்செங்கோடு
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அர்த்தநாரீசுவரர்
தாயார்:பாகம்பிரியாள்
தல விருட்சம்:இலுப்பை,வன்னி
தீர்த்தம்:தேவதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:1200 படிகள் கொண்ட மலை மீதமைந்தது

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் (Tiruchengode Ardhanareeswarar Temple) திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்.[1]

திருநீலகண்டம் பதிகம் - திருஞானசம்பந்தரால் தேவாரம்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.1
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.2
1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்

விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.3
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே

கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.4
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்

கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.5
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்

செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.8
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்

சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.9
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்

பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

1.116.10
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்

திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

1.116.11

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்

கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.

திருச்சிற்றம்பலம்

இறைவர் திருப்பெயர்: அர்த்தநாரீஸ்வரர். (முருகன் - செங்கோட்டு வேலவர்).
இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்.
தல மரம்: இலுப்பை.
தீர்த்தம் : தேவ தீர்த்தம்.
வழிபட்டோர்: கேதார கௌரி.

தல வரலாறு

  • மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
  • மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
  • கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.
  • சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
  • இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே?!" - என்று வியந்து பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது ஆய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டு உயர்ந்த குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே" [2] - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - வெந்தவெண் ணீறணிந்து

சிறப்புகள்

  • சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.
  • இது அர்த்தநாரித் தலம்.
  • இத்தலம் மலைமீது உள்ளது.
  • மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.
  • கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிகட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன.
  • ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வாடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.
  • இத்தலம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.
  • செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம் கொண்ட முருகப்பெருமான் வள்ளி, தேவசேனை உடனுறையவராக உள்ளார்.
  • இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.
  • வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவமும், மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் உருவமும் சிற்பக்கலையழகு நிறைந்தவை.
  • அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
  • திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
  • மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
  • இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
  • வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.
  • இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

அமைவிடம்

அஞ்சல் முகவரி: அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண்: 637211.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோட்டிலிருந்து 18-கி. மீ., சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் மற்றும் நாமக்கல்லிலிருந்து 32-கி.மீ. தொலைவில் உள்ளது.

மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில் உள்ளது.

போக்குவரத்து

மலைப்பாதையின் இறுதிப்பகுதி.

ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற நகரங்களிலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல பேருந்துவசதி உள்ளது. தொடருந்தில் பயணம் செய்ய விரும்புவோர் ஈரோடு சந்திப்பு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருச்செங்கோட்டை அடையலாம். திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. இதில் இருபாதைகள் உண்டு. ஒன்று நடைப்பயணமாகப் படிக்கட்டு வழிச் செல்வோருக்காக ஒரு பாதையும் வாகனம் மூலம் செல்வோருக்காக மற்றொன்றும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தால் மலைமேல் செல்ல கட்டனப்பேருந்துவசதி செய்யப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் சன்னிதி முன்மண்டபமும் கொடிமரமும்

அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழ-மேற்கில் 262 அடி நீளமும் தென்-வடலாக 201 அடி நீளமுடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென்திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இக்கோயில். மூலவர் அர்த்தநாரீசுவரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாயில் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணியுள்ளது.

ஆமை மண்டபம்-ஆமை வடிவை மண்டபத்தின் கீழ்ப்பகுதியிலும் அர்த்தநாரீசுவரர் சன்னிதிப் பலகணியைப் பின்புலத்திலும் காணலாம்.

அர்த்தநாரீசுவரர் சன்னிதியின் முன்மண்டத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன.

மேற்கு இராஜகோபுரம்

கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாயக்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர்.

பாடல் பெற்ற தலம் - அர்த்தநாரீசுவரர்

இத்தலத்தின் இறைவன் அர்த்தநாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார்.

செங்கோட்டு வேலவர்

இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல்:

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்க

ஆதாரங்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 360,361
  2. முல்லை முத்தையா, ed. (1972). முருகன் அருள் செல்வம். தாமரை நிலையம். p. 67.
  • திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருத்தல வரலாறு, திருக்கோயில் வெளியீடு

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.