பவானி சங்கமேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
பவானி சங்கமேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பவானி
மாவட்டம்:ஈரோடு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)
தாயார்:வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
தல விருட்சம்:இலந்தை
தீர்த்தம்:காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்
ஆகமம்:காரண ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் தமிழ்நாடு, (பவானி) என்னும் ஊரில், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது.[1]

கோயில் அமைப்பு

தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.[2] பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோயிலின் முதன்மை கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது.[1]

மூலவர், பிற சன்னதிகள்

சுயம்புலிங்க மூலவர் சங்கமேஸ்வரர் ஆவார். இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இக் கோயிலில் ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. இறைவியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் வலப்பக்கம் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ள சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அதற்கடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.[1]

தொன்நம்பிக்கைகள்

இலந்தை மரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும் இக்கோயிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.[1]

திருவிழாக்கள்

இங்கு ஆடிப்பதினெட்டில் நீராடுவதை சிறப்பாகக் கருதுகின்றனர். சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, சித்திரையில் 13 நாள்கள் திருவிழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[2]

சிறப்புகள்

1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோயில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.[1]

சான்றுகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு

சிற்ப வேலைப்பாடுள்ள அம்மன் சன்னதி