வையாபாடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது.
நூலாசிரியர்
இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி.பி 1500 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டதாகும்.
காலம்
இந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேற்கோள்கள்
- வையாபாடல் - க. செ. நடராசா பதிப்பு பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் (மின்னூல் - நூலகம் திட்டம்)