வட்டரக்க விஜித்த தேரர்
வட்டரக்க விஜித்த தேரர் (Watareka Vijitha Thero) என்பவர் இலங்கையின் பௌத்த மதகுருவும், அரசியல்வாதியும் ஆவார்.
அரசியலில்
மகியங்கனையைப் பிறப்பிடமாகக் கொண்ட விஜித்த தேரர் வித்தியாலங்கார மடப்பள்ளியில் கல்வி கற்று மதகுருவானார். 1994 ஆம் ஆண்டில் மகியங்கனை பௌத்த விகாரைக்கு அதிபதியாகச் சென்றார். அங்கிருந்தபடி அவர் ஏனைய சமய, சமூகங்களுடன் நெருங்கிப் பணியாற்றினார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் இணைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார். அஷ்ரப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டார்.[1] இதனை அடுத்து விஜித்த தேரர் பௌத்த தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானார்.[1]
விஜித்த தேரர் மகியங்கனை பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றை ஏற்படுத்தி போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாக்குதல்கள்
முசுலிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவை இவர் கடுமையாக விமரிசித்து வந்தார். இக்குழுவினரால் இவர் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ஊடகவியலாளர்களின் முன்னிலையில் இவரைப் பலமுறை கடுமையான வார்த்தைகளினால் தூசித்துள்ளார்.[2]
2014 சூன் 16 ஆம் நாள் அளுத்கமை நகரில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை இவர் பகிரங்கமாகக் கண்டித்தார். சூன் 19 இல் இவர் கொழும்பின் புறநகரான பாணந்துறையில் வைத்துக் கடத்தப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.[2] மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜித்த தேரர், காவி உடை தரித்த சிலர் கடத்திச் சென்று தாக்கியதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்தார். ஆனாலும், மருத்துவமனை மருத்துவ அதிகாரி, விஜித்த தேரர் "தன்னைத்தானே காயப்படுத்தி சேதம் விளைவித்துக் கொண்டதாக" தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருந்தார்.[3] இதன் அடிப்படையில், 2014 சூன் 25 இல் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் விஜித்த தேரர் உடனடியாகவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[3] 2014 சூலை 7 வரை தடுப்புக் காவலில் இருந்த வட்டரக்க தேரரை பாணந்துறை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்ட அவர் தான் நிரபராதி எனத் தெரிவித்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "வட்டாரக்க விஜித தேரர்: ஒரு எச்சரிக்கை". மாற்றம். 30 சூன் 2014. http://maatram.org/?p=1351. பார்த்த நாள்: 30 சூன் 2014.
- ↑ 2.0 2.1 "Pro-Muslim monk attacked in Sri Lanka". அல்-ஜசீரா. 19 சூன் 2014. http://www.aljazeera.com/news/asia/2014/06/sri-lankan-pro-muslim-monk-attacked-2014619143022995385.html. பார்த்த நாள்: 30 சூன் 2014.
- ↑ 3.0 3.1 "The Ven. Watareka Thera Saga". சண்டே லீடர். சூன் 30, 2014 இம் மூலத்தில் இருந்து 2014-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715001444/http://www.thesundayleader.lk/2014/06/29/the-ven-watareka-thera-saga/. பார்த்த நாள்: 30 சூன் 2014.
- ↑ "வட்டரக்க தேரருக்கு பிணை". தமிழ்மிரர். சூலை 7, 2014. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/117128-2014-07-07-08-52-08.html. பார்த்த நாள்: 7 சூலை 2014.