மு. நல்லதம்பி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மு. நல்லதம்பி |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 13, 1896 |
பிறந்தஇடம் | வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | மே 8, 1951 | (அகவை 54)
பணி | தமிழாசிரியர், புலவர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
பெற்றோர் | முருகுப் பிள்ளை, தங்கம்மை |
பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 - 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் படிக்கப்படுகின்றது[1]. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டையில் சிந்துபுரம் என்ற கிராமத்தில் முருகுப் பிள்ளைக்கும் தங்கம்மையாருக்கம் புதல்வராகப் பிறந்தார். கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் கல்வி கற்ற போது அங்கு தமிழாசிரியராக விருந்த தென்கோவை, பண்டிதர் ச. கந்தையபிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். பின்னர் கொழும்பு சாகிரா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்[2]. 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சில ஆண்டுகள் இவர் விரிவுரையாளராகப் பணியாற்றினார்[3].
இவரது 'மணித்தாய் நாடும் மரதனோட்டமும்' என்ற நூல் மரதனோட்டக் கவிதைப்போட்டியில் முதற் பரிசைப் பெற்றது.
தமிழில் இலங்கை நாட்டுப்பண்
இலங்கையின் நாட்டுப்பண் சிங்கள மொழியில் ஆனந்த சமரக்கோன் என்பவரால் 1940 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இதனை நல்லதம்பி சிறீ லங்கா தாயே என்ற தலைப்பில் 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். 1975 ஆம் ஆண்டு தேசிய பொதுக்கல்வித் தராதரப் பத்திர தமிழ்ப்பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் தமிழிற் பதியப்பட்டுள்ளது. 1975 தேசிய பொதுக்கல்வித்தராதரப் பரீட்சைக்கான - கர்நாடக சங்கீத பாடத்திட்டத்தின் படி - தேசிய கீதம் தமிழிற் கற்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக நீக்க அரசுத்தலைவர் மகிந்த இராசபக்ச தலைமையிலான அமைச்சரவை கலந்துரையாடல்களை டிசம்பர் 2010 இல் நிகழ்த்தியது[4]. இதற்கு இலங்கை தமிழ் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து தமிழ் மொழி தேசிய கீதத்தை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என இலங்கை அரசின் அமைச்சர் செனிவரத்ன ஊடகங்கள் மூலம் அறிவித்தார்[5][6].
எழுதிய சில நூல்கள்
- மணித்தாய் நாடும் மரதனோட்டமும்
- மொழிப் பயிற்சி
எழுதிய சில கவிதைகள்
- பாரதியார்[7]
உசாத்துணை
- ↑ The Sri Lankan national anthem of Tamil version is not the exact translation of the Sinhala version. They have included the word Eelam in the Tamil version to refer the Tamil homeland. (ஆங்கில மொழியில்)
- ↑ வித்தகம் ச. கந்தையபிள்ளை, மகாஜனக் கல்லூரி தமிழ்மன்றம்
- ↑ ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் பரணிடப்பட்டது 2011-05-03 at the வந்தவழி இயந்திரம், ஆ. சதாசிவம்
- ↑ Sri Lanka scraps Tamil version of its national anthem
- ↑ Sri Lanka denies move to ban national anthem in Tamil
- ↑ Sri Lanka minister denies Tamil national anthem ban, பிபிசி, டிசம்பர் 13, 2010
- ↑ "மு.நல்லதம்பி" (in en-US). 2020-05-16. http://e-kalvi.com/m-nallathambi/.