தூரத்து இடிமுழக்கம்
தூரத்து இடிமுழக்கம் | |
---|---|
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | கே. விசயன் |
கதை | டி. சோமசூடன் |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | விஜயகாந்த் பூர்ணிமா பீலி சிவம் ஏ. கே. வீராசாமி சுருளி ராஜன் |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | சாய் சுதா பிலிம்ஸ் |
விநியோகம் | சாய் சுதா பிலிம்ஸ் |
வெளியீடு | 5 திசம்பர் 1980 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தூரத்து இடிமுழக்கம் (Doorathu Idi Muzhakkam) 1980 ஆம் ஆண்டு விஜயகாந்த், பீலிசிவம் மற்றும் அறிமுக நடிகை பூர்ணிமா நடிப்பில், கே. விஜயன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், சலில் சௌதுரி இசையில் வெளியான தமிழ் திரைப்படம். 1981 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அகில உலக திரைப்படவிழாவில் திரையிடத் தேர்வான திரைப்படம்.[1][2][3] இப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் விஜயகாந்த் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.[4]
கதைச்சுருக்கம்
பெருமூப்பன் அந்த மீனவக் கிராமத்தின் தலைவர். ஒருநாள் கடலில் மிதந்துவரும் படகில் இருக்கும் குழந்தையைக் கண்டெடுத்து பொன்னன் (விஜயகாந்த்) எனப் பெயரிட்டு வளர்க்கிறார். வளர்ந்து மீனவனாகும் பொன்னனும் குயவர் சமூகத்தைச் சேர்ந்த செல்லியும் (பூர்ணிமா) காதலிக்கிறார்கள். செல்லியைத் திருமணம் செய்ய விரும்பும் அவளின் முறைமாமன் மாரிக்கு (பீலிசிவம்) இது தெரியவருகிறது. மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் பொன்னன் திரும்பிவரவில்லை. அவனுடன் சென்றவர்கள் அவன் இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இதனால் தற்கொலைக்கு முயலும் செல்லியை மாரி காப்பாற்றுகிறான். செல்லிக்கு மாறியுடன் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
எதிர்பாராவிதமாக இறந்துவிட்டதாக நினைத்த பொன்னன் உயிரோடு வருகிறான். செல்லிக்கு மாரியுடன் திருமணம் நடந்துவிட்டதை அறியும் பொன்னன் அங்கிருக்க விரும்பாமல் வெளியேறுகிறான். அவனை வளர்த்த பெருமூப்பன் வீட்டு வாசலில் அவன் கொண்டுவந்த வலம்புரிச்சங்கை வைத்துவிட்டு வெளியேறுகிறான். மறுநாள் அதைக் காணும் பெருமூப்பன் ஏற்கனவே பம்பாதேவி கோயிலிலுள்ள வலம்புரிச்சங்கைக் கொண்டுவந்தது பொன்னன் என்பதால், இதையும் அவன்தான் கொண்டுவந்திருக்க வேண்டும் என்று அறிந்து அவன் உயிரோடிருப்பதை உணர்கிறார். ஆனால் அதுபற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் தவிர்க்கிறார்.
மாரி - செல்விக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் கிராமத்திற்கு வரும் பில்லிகோடா எனும் மந்திரவாதி மாரியைத் தனியே சந்தித்து தன் பூஜைக்கு ஒரு குழந்தையும், பம்பா தேவி கோயிலிலுள்ள வலம்புரிச்சங்கையும் கொண்டுவந்தால், அதற்குப் பதிலாக தங்கக்கட்டிகள் தருவதாகக் கூறுகிறான். தங்கக்கட்டிகளுக்கு ஆசைப்பட்டு தன் குழந்தையையும் கோயிலிலுள்ள சங்கையும் யாருக்கும் தெரியாமல் திருடிச்சென்று பில்லிகோடாவிடம் கொடுக்கிறான். அப்போது பொன்னனின் நண்பனான நல்லான் பொன்னனை எதிர்பாராமல் ஓரிடத்தில் சந்தித்து அவனை அழைத்துக் கொண்டு பெருமூப்பனிடம் வருகிறான். தன் கணவனையும் குழந்தையையும் தேடி பம்பாதேவி கோயிலுக்குச் செல்லும் செல்லி அங்கிருந்த வலம்புரிச்சங்கையும் காணாததால் பெருமூப்பனிடம் இதைத் தெரிவிக்க வருகிறாள். செல்லி பார்க்காதவாறு மறைந்துகொள்ளும் பொன்னன் நடந்தவற்றை அறிகிறான். மாரி மற்றும் குழந்தையை மீட்கச் செல்கிறான். அப்போது நடக்கும் சண்டையில் மாரி மற்றும் பொன்னன் இறக்கிறார்கள். படகில் தப்பிக்க நினைக்கும் பில்லிகோடா இடி தாக்கி இறக்கிறான். குழந்தை மீட்கப்படுகிறது.
நடிகர்கள்
- பூர்ணிமா தேவி - செல்லி
- விஜயகாந்த் - பொன்னன்
- பீலிசிவம் - மாரி
- ஏ. கே. வீராசாமி - பெருமூப்பன்
- ஏ. ஜெகதீசன் - பில்லிகோடா
- சுருளிராஜன் - நீலகண்டன்
- கருப்பு சுப்பையா
தயாரிப்பு
இப்படத்தில் விஜயகாந்திற்குப் பின்னணிக் குரல் கொடுக்கப்பட்டது.[5]
பட விழா திரையிடல்
1981 ஆம் ஆண்டு "இந்தியன் பனோரமா"வில் அகில உலகத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான 21 படங்களில் இப்படமும் ஒன்று. இப்படத்துடன் தேர்வான மற்றொரு தமிழ் படம் நிழல்கள்.[6][7]
இசை
படத்தின் இசையமைப்பாளர் சலில் சௌதுரி. பாடலாசிரியர் கு.மா.பா. இப்படம் சலில் சௌதுரி இசையமைத்த கடைசி தமிழ் திரைப்படம் ஆகும்.
வ.எண் | பாடல் | பாடலாசிரியர் | காலநீளம் |
---|---|---|---|
1 | உள்ளம் எல்லாம் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:27 |
2 | செவ்வல்லி பூவே | பி. சுசிலா | 4:19 |
3 | அலையேந்தி கொள்வோம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | 3:22 |
4 | உள்ளம் எல்லாம் | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | 2:56 |
5 | இரண்டு மனம் | கே. ஜே. யேசுதாஸ் | 2:48 |
மேற்கோள்கள்
- ↑ "சர்வதேச படவிழா". https://tamil.indianexpress.com/entertainment/actor-vijayakanth-fourty/.
- ↑ "சர்வதேச படவிழா". https://tamil.oneindia.com/news/tamilnadu/a-positive-article-post-on-vijayakanth-on-rounds-wattsapp-221954.html.
- ↑ "Indian Cinema '80/'81". Directorate of Film Festivals. p. 98. http://dff.nic.in/2011/IP1981.pdf.
- ↑ "விஜயகாந்த்". http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50461-vijayakanth-birthday-celebration-2018.html.
- ↑ "விஜயகாந்த்" இம் மூலத்தில் இருந்து 2019-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190324124925/https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/60387-what-happened-to-vijayakanth-voice-captainisking.html.
- ↑ "தூரத்து இடிமுழக்கம்". http://dff.nic.in/2011/IP1981.pdf.
- ↑ "தூரத்து இடிமுழக்கம்". https://books.google.com/books?id=IedkAAAAMAAJ.