திராவிடக் கட்டடக்கலை
இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டடக்கலை (English: Dravidian architecture) என்னும் தென்னிந்தியக் கட்டடக்கலை (Southern Indian temple style) முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ் அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய தமிழக கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.
திராவிடக் கட்டடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
திராவிடக் கட்டடக்கலையில் கால வரைவு பின்வருமாறு:
- பல்லவர் காலம் (பொ.ஊ. 600 – பொ.ஊ. 900)
- சோழர் காலம் (பொ.ஊ. 900 – பொ.ஊ. 1150)
- பாண்டியர் காலம் (பொ.ஊ. 1100 – பொ.ஊ. 1350)
- விஜயநகரக் காலம் (பொ.ஊ. 1350 – பொ.ஊ. 1565)
- நாயக்கர் காலம் (பொ.ஊ. 1600 – )