த. நா. குமாரசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
த. நா. குமாரசாமி
த. நா. குமாரசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
த. நா. குமாரசாமி
பிறந்ததிகதி 24 டிசம்பர் 1907, சென்னை
இறப்பு 1982



தண்டலம் நாராயண குமாரசுவாமி (T. N. Kumaraswami) (1907 - 1982), தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் இணையருக்கு 24 டிசம்பர் 1907 அன்று சென்னையில் பிறந்தவர். சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போதே தமிழ் மொழியுடன், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளையும் கற்றார். கல்லூரிப் படிப்பில் தத்துவம் மற்று உளவியல் பாடங்களில் 1928ல் பட்டம் பெற்றார்..

1930ம் ஆண்டில் கொல்கத்தா சென்று வங்காள மொழி பயின்ற பின், இரவீந்திரநாத் தாகூரை சந்தித்து, அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அனுமதி பெற்றார். நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய இளைஞன் கனவு, புதுவழி முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.

த.நா. குமாரசுவாமி எழுதிய முதல் சிறுகதை கன்யாகுமரி 1934 ஆம் ஆண்டு தினமணி நாளிதழில் வெளியானது. பின்னர் அவரது சிறுகதைகள் சுதேசமித்திரன், கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், கலைமகள் முதலிய இதழ்களிலும் வெளியானது.

1960-61களில் நடைபெற்ற சாகித்திய அகாதமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரவீரந்திரநாத் தாகூரின் சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

1962 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது லியோ டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, ஆன்டன் செக்கோவ் எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

த.நா. குமாரசுவாமி வங்க மொழி இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (நேதாஜி இலக்கிய விருது) விருது அளிக்கப்பட்டது. நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.

கன்யாகுமரி, சந்திரகிரகணம், நீலாம்பரி, இக்கரையும் அக்கரையும், கற்பவல்லி முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார்.

விடுதலை, ஒட்டுச்செடி, குறுக்குச் சுவர், வீட்டுப்புறா, அன்பின் எல்லை, கானல் நீர் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார். ஒட்டுச் செடி நாவல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியானது.

மொழிபெயர்ப்பு நூல்கள்

த.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது. இவரது தம்பி த. நா. சேனாபதியும் இவரைப் போன்றே வங்க மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்.

வங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் பானர்ஜி முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இரவீந்திரநாத் தாகூரின் புயல், சதுரங்கம், ராஜகுமாரி விபா, ராஜரிஷி, கோரா, பூந்தோட்டம், இரு சகோதரிகள், லாவண்யா, சிதைந்த கூடு, மூவர், விநோதினி முதலிய புதினங்களையும், காரும் கதிரும், கல்லின் வேட்கை, மானபங்கம், போஸ்ட் மாஸ்டர், பத்தினிப் பெண், நெற்றிப் பொட்டு, வெற்றி முதலிய சிறுகதைகளையும், மகுடம், புலைச்சி முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். [1]

பங்கிம் சந்திரரின் விஷ விருட்சம், ஆனந்தமடம்[2], கிருஷ்ண காந்தன் உயில், மாதங்கினி, கபால குண்டலா முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சரத் சந்திரரின் பைரவி, அமூல்யன், சௌதாமினி, மருமகள் முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.[3]

கிழக்கோடும் நதி எனும் சீன மொழி நாவலை ஆங்கிலத்திலிருந்தும், துர்லக் எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், காதலர் எனும் பர்மிய மொழிக் கதையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நாட்டுப் பணிகள்

நாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் பற்று கொண்ட குமாரசுவாமி, சென்னை அருகே பாடி எனும் கிராமத்தில் நலிந்தவர்களுக்காக, தனது சொந்த நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். பாடி கிராம மக்கள் த.நா. குமாரசுவாமியை காந்தி ஐயர் என்று போற்றினர்.

குடும்பம்

த.நா. குமாரசுவாமி 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். த. நா. குமாரசுவாமியின் மகன் த. கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய சிந்தனை செயல் சாதனை எனும் நூலிற்கு, 1987ல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக உள்ளார்.[4]

மறைவு

தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார்.


மொழியாக்கப்பணி

த.நா.குமாரசாமி முதன்மையாக மொழியாக்கத்துக்காகவே இன்று நினைவுகூரப்படுகிறார். ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த கல்கி ஏற்கனவே ஒருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நான்கு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டிருந்த பங்கிம்சந்திர சட்டர்ஜியின் நாவல் ஒன்றை ஆனந்த விகடன் இதழுக்காக மொழியாக்கம் செய்து அளிக்கும்படி கோரினார். அவ்வாறாக த.நா.குமாரசாமி தன் முதல் மொழியாக்க நாவலை முழுமைசெய்து வெளியிட்டார். பங்கிம் சந்திரரின் 'மாதங்கினி' என்னும் நாவல் இருபத்துமூன்று அத்தியாயங்களாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது

த.நா.குமாரசாமியின் மொழியாக்கங்களில் முதன்மையானது ஆரோக்கிய நிகேதனம். தாராசங்கர் பானர்ஜியின் இந்நாவல் விமர்சகர்களால் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையானது என குறிப்பிடப்படுவதுண்டு. தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இன்றும் வாசிக்கப்பட்டுவரும் படைப்பு இது. த.நா.குமாரசாமி மொழியாக்கம் செய்த தாராசங்கர் பானர்ஜியின் கவி இன்னொரு முக்கியமான ஆக்கம்.

காந்தி மொழியாக்கம்

காந்தியின் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் குழுவில் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டு, முதல் தொகுதி தயாராகும் வரையில் பணியாற்றினார் . அக்குழுவின் தலைவருக்கும் அவருக்கும் குஜராத்திச் சொல்லொன்றைத் தமிழாக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகினார்."கருத்துகள் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் அதிகாரம்தான் நமக்கு உண்டே ஒழிய, நம் மனம் போனபடி மொழிபெயர்க்கும் உரிமை நமக்குக் கிடையாது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே ஐநூறு ரூபாய் ஊதியம் தந்த அந்தப் பணியை விட்டுவிட்டேன்’ என்று அதைப்பற்றி அவர் குறிப்பிட்டார். பின்னாளில் 'பாபுஜியின் நினைவுக்கோவை' போன்ற நூல்களை மொழியாக்கம் செய்தார்.

வங்கமொழியாக்கம்

த.நா.குமாரசாமி தன் முயற்சியால் வங்கமொழியைக் கற்றுக்கொண்டதாக தன் வரலாற்றுக் குறிப்பில் சொல்கிறார். தலைவலி மருந்துப் புட்டிகளின் மேலே உள்ள பலமொழி எழுத்துக்களில் இருந்து வங்கமொழி எழுத்துக்களை மட்டும் தனியாக எழுதி எடுத்து வங்கமொழி பயின்றதாகவும், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்தமடம்' நாவலை 1908-ல் மகேசகுமார சர்மா மொழியாக்கம் செய்திருந்ததை தேடிப்படித்து அதை மூலத்துடன் ஒப்பிட்டு வங்கமொழியை ஆழ்ந்தறிந்ததாகவும் சொல்கிறார்.

த.நா.குமாரசாமி தனிப்பட்டமுறையிலும் தாராசங்கர் பானர்ஜியின் நண்பர். தாராசங்கர் எழுதிய 'ஆகுர்' என்னும் நாவலை 1943-ல் 'அக்னி' என்னும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார். தமிழுக்கு வந்த தாராசங்கரின் முதல் நாவல் அதுவே.

த.நா.குமாரசாமியின் வங்க நூல்களின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை "ஒரு மொழியின் இலக்கியத்தில் புதிய கருத்துகள், புதிய உவமைகள், புதிய சொற்கள் புகுவதனாலேயே அம்மொழி வளர்ச்சியும் செழுமையும் பெறுகிறது. ஒரே ஒரு வழியுடைய அறையில் இருந்தால் புழுங்கித்தான் போக வேண்டும். சுற்றுப்புறத்தில் சாளரங்கள் இருந்தால்தான் நல்லன உள்ளே புகவும், நம்மைப் பற்றி பிறர் அறியவும் வழி ஏற்படும்" என அவர் எழுதினார். பங்கிம் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

ரவீந்திரநாத் தாகூர் மொழியாக்கம்

சாகித்திய அக்காதமி சார்பில், 1960-1961-களில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது 'ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு', 'ரவீந்திரர் கதைத்திரட்டு' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. த.நா.குமாரசாமி அவற்றின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தொகுப்பாளாராகப் பணியாற்றினார். தமிழில் முதன்மையாகத் தாகூர் மொழிபெயர்ப்பாளர் என்றே அறியப்படுகிறார்.

த.நா.குமாரசாமி 1962-ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் .

த.நா.குமாரசாமி கு.ப. ராஜகோபாலனுக்கு மிக அணுக்கமான நண்பராக இருந்தார். கி. வா. ஜகந்நாதன், பி.எஸ். ராமையா ஆகியோருக்கும் மிகவும் நெருக்கமானவர்.

திரைப்படம்

1940-ல் ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எழுதிய ஆவணப்படத்துக்கு த.நா.குமாரசாமி பின்னணி உரை எழுதினார். அதைத் தொடர்ந்து வங்க திரைப்படத்துறையைச் சேர்ந்த தேவகி போஸின் தொடர்பு கிடைத்தது. அக்காலத்தில் வங்கமொழியில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட சில படங்களுக்கு தமிழ் வசனத்தை த.நா.குமாரசாமி எழுதினார்.வங்கமொழித் திரைக்கதைகளைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட சில படங்களுக்காகவும் அவர் பணியாற்றினார் என அவர் மகன் அஸ்வினிகுமார் தன் நூலில் குறிப்பிடுகிறார். தன் திரைப்பட அனுபவங்களை 'கானல்நீர்' என்னும் நாவலாக எழுதியிருக்கிறார்.

விருதுகள்

  • வங்க அரசு, தமிழ் – வங்க மொழிக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" அளித்தது.
  • த.நா.குமாரசாமியின் படைப்புகளைத் தமிழக அரசு 2006 - 2007-ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியது

மறைவு

த.நா.குமாரசாமி தமது 75-வது வயதில் செப்டம்பர் 17, 1982 அன்று காலமானார்.

நினைவுநூல்கள்

  • த.நா.குமாரசாமி- த.கு.அஸ்வின் குமார்- இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை (இணையநூலகம்)[5]
  • குடத்திலிட்ட விளக்கு -முகுந்தன்- வானதி பதிப்பகம்

நூற்றாண்டு விழா

த.நா.குமாரசாமியின் நூற்றாண்டு அவர் மகன் த.கு .அஸ்வின்குமார் மற்றும் குடும்பத்தவரால் பிப்ரவரி 2008-ல் சென்னையில் கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் சா.கந்தசாமி கலந்துகொண்டு த.நா.குமாரசாமி குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இலக்கிய இடம்

"நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ, சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல், அமைதியாக ஒரு மூலையிலிருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து, சொல் ஓவியமாக ஆக்கித் தரும் கலை உள்ளம் சிலருக்கு இயல்பாகவே அமைகிறது. த.நா. குமாரசுவாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே"- என்று மு.வரதராசன் 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார். த.நா.குமாரசாமியின் கதைகளை வாழ்க்கைச் சித்திரங்கள் என்று வரையறை செய்யலாம். நவீனச் சிறுகதையின் இலக்கணம் அமையாத சிறிய கதைகள் அவை.

"துயரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு அதிலுள்ள ரஸத்தை எல்லாம் வடித்துத் தந்து ஆனந்திப்பதை ஒரு உத்தியாக மேலைநாடுகளில் போற்றி வளர்த்து இருக்கிறார்கள். இத்தகைய 'ரொமாண்டிக் மெலான்கலி (Romantic Melancholy) அதாவது இன்பம் தரும் துயர மனப்பான்மை உத்திக்கு த.நா.கு.வின் கன்யாகுமரி முதலிய கதைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த அளவுக்கு இந்த மனோபாவத்தில் மூழ்கி இருப்பவர்கள் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் வேறு எவரும் இல்லை என்றும் சொல்லிவிடலாம்" என்று மதிப்பிடுகிறார், க.நா.சுப்ரமணியம்.

சிறுகதைகள்

த.நா. குமாரசாமி 1934-ஆம் ஆண்டு ’கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமணியில் எழுதினார். கல்கி ஆசிரியராக இருந்த ஆனந்த விகடனில் 'இராமராயன் கோயில்', 'ஸ்ரீசைலம்', போன்ற கதைகளை எழுதி புகழ்பெற்றார். தொடர்ந்து கலைமகள், கல்கி, சுதேசமித்திரன் இதழ்களில் சிறுகதைகளும் குறுங்கட்டுரைகளும் எழுதினார். 1934 முதல் 1939 வரை எழுதிய கதைகளைத் தொகுத்து 'கன்யாகுமரி முதலிய கதைகள்’ என்னும் முதல் சிறுகதை தொகுதியை அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

தன் முதல் சிறுகதை 'கன்யாகுமாரி 'பற்றி விரிவாக எழுதியிருக்கும் குமாரஸ்வாமி "இன்றைய தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஓர் இடம் ஏற்படுவதற்கு இந்தக் கன்யாகுமரியே காரண பூதமாக விளங்குகிறாள். இந்தக் கதையை எழுதி இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன. திப்பேத்தில் லாமாவின் உன்னதமான மடாலயமான போதாலா வே கன்யாகுமரியாம். அவளுடைய வழிபாடு திப்பேத்து வரை பரவியிருந்த அதிசயத்தைச் சமீபத்தில் ஓர் அமெரிக்க யாத்ரிகர் எழுதிய (Forbidden Land ) என்ற நூலில் படித்தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தென்படும் (இன்று அருகிய) 'புத்தேள் நாடு' என்பது இவ்வம்பிகையின் சக்தி பீடத்தைத் தான் குறிக்கின்றதோ? என் கன்னி முயற்சி ஒரு மனிதப் பிறவியைப் பற்றி இராமல், கடவுளாகத் திகழும் ஒரு கன்னிகையின் புகழாக அமைந்தது என் பாக்கியம்" என்கிறார். நூல்கள்

  • நடைமுறை தமிழ் அகராதி

சிறுகதை

  • கன்யாகுமாரி முதலிய கதைகள் - 1946
  • குழந்தை மனம்
  • சக்தி வேல்
  • தேவகி
  • மோகினி
  • பிள்ளைவரம்
  • போகும் வழியில்
  • வஸந்தா
  • கதைக்கொடி
  • அன்னபூரணி
  • கதைக் கோவை-3
  • கதைக் கோவை-4
  • இக்கரையும் அக்கரையும்
  • நீலாம்பரி
  • சந்திரகிரகணம்
  • பூந்தோட்டம்
  • காரும் கதிரும்
  • யாத்ரீகன்
  • மயூகன்
  • கற்பகவல்லி
  • பைரவி
  • இவளும் அவளும்

நாவல்

த.நா.குமாரசாமியின் நாவல் ஒட்டுச்செடி 1955-ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பின் நூலாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அணைக்கட்டு உருவாக்கிய இடப்பெயர்வைச் சித்தரிக்கும் முதல் நாவல் இது. விட்டல்ராவ் எழுதிய "போக்கிடம்", வைரமுத்து எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" ஆகியவை இதே கரு கொண்டு பின்னாளில் வெளிவந்த படைப்புகள். 'வீட்டுப்புறா', 'குறுக்குச்சுவர்' போன்ற நாவல்களையும் எழுதியிருக்கிறார்

  • ராஜகுமாரி விபா
  • விடுதலை
  • குறுக்குச் சுவர்
  • சந்திரிகா
  • இல்லொளி
  • மனைவி
  • உடைந்தவளையல்
  • ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
  • தீனதயாளு
  • இந்திரா
  • லலிதா
  • கானல் நீர்
  • அன்பின் எல்லை
  • ஒட்டுச்செடி
  • வீட்டுப்புறா

பங்கிம்சந்திரர்

  • விஷ விருட்சம்
  • ஆனந்த மடம்
  • கிருஷ்ணகாந்தன்
  • உயில்
  • கபாலகுண்டலா

தாராசங்கர் பானர்ஜி

ரவீந்திரநாத் தாகூர்

  • மானபங்கம்
  • தாகூரின் நகைச்சுவை நாடகங்கள்
  • தாகூர் சிறுகதைகள்
  • கோரா
  • வினோதினி
  • புயல்
  • மூன்றுபேர்
  • சாருலதா
  • தாகூரின் கடிதங்கள்
  • மனைவியின் கடிதம்
  • ரவீந்திரர் கதைத்திரட்டு
  • ரவீந்திரர் கட்டுரைத்திரட்டு
  • ரவீந்திரர் கவிதைத் திரட்டு
  • இளமைப்பருவம்
  • இரு சகோதரிகள்
  • லாவண்யா
  • புலைச்சி(சண்டாளிகா)
  • ராஜரிஷி
  • சிதைந்த கூடு
  • வெற்றி
  • சதுரங்கம்
  • ராஜகுமாரி விபா
  • ஜாவா யாத்திரை

சரத்சந்திர சட்டர்ஜி

  • தேவதாஸ்
  • அமூல்யன்
  • பைரவி
  • சௌதாமினி
  • விஜயா
  • மிருணாளினி

பிற

  • காதலர்- பர்மியக்கதைகள்
  • ரங்மகால்-ஹரிசாதன் முகோபாத்யாய
  • பொம்மலாடம் - "புதுல் நாச்சார் கி இதிகதா", வங்காளி, மாணிக் பந்தோபாத்யாய
  • இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்
  • புது வழி - நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்
  • கோதமபுத்தர்- ஆனந்த குமாரசாமி& ஐ.பி.ஹானர்
  • மால்கோஷ் வங்காளச் சிறுகதைகள்
  • பாபுஜியின் நினைவுக்கோவை
  • யாத்ரீகன் - பிரபோத் குமார் சன்யால்
  • சித்திரா- சரணதாஸ் கோஷ்
  • துர்லக்- ஹிரண்மய கோஷால்
  • சந்துவீடு -சந்தோஷ்குமார் போஸ்
  • கிழக்கோடும் நதி- ரா.தாமோதரன்

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=த._நா._குமாரசாமி&oldid=4351" இருந்து மீள்விக்கப்பட்டது