சதுர அடைப்பு (தமிழ் நடை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று சதுர அடைப்பு = Square brackets; brackets (US)- [ ] ஆகும். பொதுவாக, கூடுதல் தகவல் தரவும், ஒரு சொல்லையோ தொடரையோ தெளிவுபடுத்தவும் இது உதவுகின்றது.
சதுர அடைப்பு [ ]
பிறை அடைப்புக்குள் தரப்படும் செய்திக்கு மேலாக அச்செய்திக்கு மெருகூட்டும் தகவல் தர வேண்டுமாயின் சதுர அடைப்பு பயன்படுகிறது. சதுர அடைப்பு இடும் இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன.
- 1) கட்டுரை ஆசிரியர், பதிப்பாசிரியர் முதலியவர்கள் மேற்கோளுக்குள் மேற்கோளில் இல்லாதவற்றைத் தந்திருப்பதைக் காட்ட சதுர அடைப்பு இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- "சங்க இலக்கியங்களையும் பிறநூல்களையும் [திருக்குறள்] உரைக்கிடையே பரிமேலழகர் எடுத்தாளுகின்றார்."
- 2) பிறை அடைப்புக்குள் இன்னொரு அடைப்பு தேவைப்படும்போது சதுர அடைப்பு இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- தொற்று நோய்கள் (காதுத் தொற்று நோய்கள் [ பக். 31], மணல்வாரி [பக். 50]) வயிற்றுப்போக்குக்குக் காரணமாக அமையலாம்.
சான்றுகள்
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.