க. சச்சிதானந்தன்
க. சச்சிதானந்தன் | |
---|---|
முழுப்பெயர் | கணபதிப்பிள்ளை |
சச்சிதானந்தன் | |
பிறப்பு | 10-10-1921 |
பிறந்த இடம் | மாவிட்டபுரம், |
யாழ்ப்பாணம் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
தமிழறிஞர் | |
மறைவு | 21-03-2008 |
பெற்றோர் | கணபதிப்பிள்ளை, |
தெய்வானைப்பிள்ளை |
பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 – மார்ச் 21, 2008) ஈழத்துத் தமிழறிஞரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குருக்களிடமும் சமக்கிருதக்கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971-ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.
ஆசிரியப் பணி
பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட சச்சிதானந்தன் 1946 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு புனித மேரி கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1947-1948 காலப்பகுதியில் உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். 1949 ஆகத்து 26 இல் திருமணம் நடைபெற்றது. 1960 இல் யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரியிலும், பின்னர் 1965 வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பணியாற்றினார். 1965 முதல் 1967 வரை அரசினர் பாடநூற் சபையில் பணியில் சேர்ந்தார். 1967 முதல் 1981 வரை பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் உளவியல் விரிவுரையாளராகவும், பின்னர் அதன் உப-அதிபராகவும் பணியாற்றினார்.
எழுத்துத் துறையில்
இவரது முதல் சிறுகதை "தண்ணீர்த்தாகம்" 1939 பெப்ரவரி 12 ஈழகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய இவரது எட்டுச் சிறுகதைகள் 1939-1944 காலகட்டத்தில் ஈழகேசரியில் வெளிவந்தன.
காதலியின் கையெழுத்து என்ற இவரது முதலாவது கவிதை தமிழகத்தின் நவசக்தி இதழில் வெளிவந்தது. 1954 இல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "ஆனந்தத் தேன்" வெளிவந்திருக்கிறது. கவிதைகள் மட்டுமன்றி "அன்னபூரணி" என்ற புதினத்தையும், தமிழரசுக் கட்சித் தலைவர் வன்னியசிங்கத்தின் வரலாறை "தியாக மாமலை" என்ற நூலாகவும் எழுதியுள்ளார். ஏராளமான கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார்.
சச்சிதானந்தன் எழுதிய "சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் - எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்ற பாடல் அக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரசார மேடைகளில் ஒலித்தது.
ஆய்வு நூல்கள்
சுவாமி விபுலாநந்தரின் படியெடுக்கும் மாணாக்கராகச் சில காலம் இவர் சேவையாற்றினார். அதனால் இவருக்கு ஆய்வுத்துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. "தமிழர் யாழியல்" என்ற இவரது நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதைப் பெற்றது. "மஞ்சுகாசினியம் - இயங்கு தமிழியல்" என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாண இராச்சியத்தின் காலகட்டத்தினை விவரிக்கும் "யாழ்ப்பாணக் காவியம்" என்ற நூல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, வடகிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது ஆகியவற்றைப் பெற்றது.
வெளியிட்ட நூல்கள்
- ஆனந்தத்தேன் (கவிதை) 1955
- தியாக மாமலை வரலாறு (1959)
- யாழ்ப்பாணக்காவியம் (1998)
- தமிழர் யாழியல் - ஆராய்ச்சி (1967)
- மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2001)
- Fundamentals of Tamil Prosody (2002)
- இலங்கைக்காவியம் : பருவப் பாலியர் படும்பாடு (2002)
- மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) (2003)
- எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் - கவிதை (2004)
- S.J.V. Chelvanayaham (அச்சில்)
கட்டுரைகள், கவிதைகள்
- தமிழன் (மதுரை) சக்தி ஈழகேசரியில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், ஈழகேசரியில் தொடராக வெளிவந்த அன்னபூரணி என்ற முழு நாவல் - (1942) சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையில் உளவியல் கட்டுரை.
- யாழ் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது சமர்ப்பித்த வானியல் (ஆய்வுக் கட்டுரை)
- ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தில் படிக்கப்பட்ட தமிழ் ஒலி மூலங்கள். (1989)
- கலாநிதி கு.சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல். (1990)
- யாழ் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (1991)
விருதுகள்
- சாகித்திய ரத்ன - இலங்கையில் இலக்கியத்துக்க வழங்கப்படும் அதியுயர் விருது
- சம்பந்தன் விருது (2001)
- வட கிழக்கு மாகாண ஆளுநர் விருது (2003)
- தந்தை செல்வா நினைவு விருது (2004)
- இலங்கை இலக்கியப்பேரவை விருது (2004)
- கலாகீர்த்தி தேசிய விருது (2005)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பண்டிதர் க.சச்சிதானந்தன் தமிழன்-கறுப்பி...