எஸ். கே. மகேஸ்வரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். கே. மகேஸ்வரன், பேராசிரியர், வைத்திய நிபுணர் ஈழ மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாமனிதர்களுள் ஒருவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட மகேஸ்வரன் தனது இளைமைக் காலத்தை மலேசியாவிலும், தனது இறுதிக் காலங்களை அவுஸ்திரேலியா, மெல்பேர்ணிலும் கழித்தார்.

கல்வி

மலேசியாவில் வாழும் காலத்தில் கல்வியோடு, இசையையும் கற்கும் வாய்ப்புப் பெற்றார். பின் தனது பதினேழாவது வயதில் இலங்கை திரும்பி யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துறையில் இணைந்தார். மருத்துவப் பட்டதாரியாய் வெளிவந்த இவர் பின்னர், இலண்டன் சென்று மருத்துவத்துறையில் பின்பட்டம் பெற்றார்.

மருத்துவக்கல்விப்பணி

ஐந்து ஆண்டுகள் யாழ். வைத்தியசாலையில் பணியாற்றிய இவர் பின்னர் எட்டாண்டுகள் நைஜீரியாவில் தொழில் புரிந்தார். அதன் பின்னர் மலேசியப் பல்கலைக்கழகம், சிட்னிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றி ஈழமண்ணுக்குப் பெருமை சேர்த்தார். 1994 முதல் 2000 ஆண்டு வரை கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியராய்ப் பணியாற்றிய இவர் அக்காலத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையினை ஆரம்பிக்க ஆலோசகராகவிருந்து முழுமையாகப் பாடுபட்டார். அதே காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திலும் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலைக்கழக மருத்துவத்துறைப் பேராசிரியராகத் தனது வாழ்வின் நிறைவு வரை பணியாற்றினார்.

இசைத்துறை

டாக்டர் மகேஸ்வரன் மருத்துவத்துறையில் பணியாற்றியதோடு அமையாமல் கலைத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இளமை முதல் இசைத்துறையில் இவரும் இவரது சகோதரருமான ஈழத்தின் பிரபல பாடகரான எஸ். கே. பரராஜசிங்கமும் ஈடுபாட்டோடு இயங்கி வந்தனர். இவ்விருவரும் சேர்ந்து பல மேடைக்கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளனர். ஆழமான சங்கீத அறிவு கொண்ட டாக்டர் மகேஸ்வரன் அவர்கள் இலங்கை வானொலியில் பலகாலம் இசை நிகழ்ச்சிகளை வழங்கியும் வந்துள்ளார். இலங்கை கலாசார அமைச்சின் கலாசார நிலையத் தலைவராகவும், இலங்கை வானொலி இசைத்தேர்வுக்குழு உறுப்பினராகவும், அகில இலங்கைக் கம்பன் கழக இசை ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்து இசைத்துறைக்குப் பெரும் பணியாற்றிய பண்பாளர் இவர்.

இவர் தன் நிறைவுக் காலத்தில் அவுஸ்திரேலியாவில் அவர் வாழ்ந்து வந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் இலங்கைக்கு விஜயம் செய்து தான் சார்ந்த துறைகளை இம்மண்ணில் வளர்த்தெடுக்க பெரிதும் முயன்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தம்பியாரான பாடகர் எஸ்.கே. பரராஜசிங்கத்தின் மறைவால் பெரிதும் வருத்தமுற்ற டாக்டர் மகேஸ்வரன் தன் தம்பியாரது இசை முயற்சிகளைக் குறுந்தட்டுகளாக வெளியிட்டார். அத்தோடு தம் சகோதரரின் ஞாபகார்த்தமாக கம்பன் கழக இசை வேள்வியின் ஒருநாள் நிகழ்ச்சியை `அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் அரங்கு' எனும் பெயரிட்டு நடத்தி வந்தார்.

பின்னாளில், தான் நோய் வாய்ப்பட்டதும் தான் பிறந்த மண்ணுக்குப் பணி செய்ய வேண்டும் எனும் பெரு விருப்பில் `டாக்டர் மகேஸ்வரன் குடும்ப அறக் கட்டளை' எனும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி பெருந்தொகைப் பணத்தை அதற்காக்கியதோடு கொழும்பிலிருந்த தனது வீடு முதலியவற்றையும் விற்று அவ்வமைப்புக்காக்கி அவ்வமைப்புக்குத் தனது பிள்ளைகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து இலங்கையில் பல அநாதை மடங்களுக்கும், கலையமைப்புகளுக்கும் ஆதரவு நல்க ஆவன செய்துள்ளார்.

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._கே._மகேஸ்வரன்&oldid=25384" இருந்து மீள்விக்கப்பட்டது