உயிரே உனக்காக (திரைப்படம்)
உயிரே உனக்காக | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. ரங்கராஜன் |
தயாரிப்பு | கோவைத்தம்பி |
கதை | எம். ஜி. வல்லபன் (வசனம்) |
திரைக்கதை | கே. ரங்கராஜன் |
இசை | இலட்சுமிகாந்த்-பியாரேலால் |
நடிப்பு | மோகன் நதியா சுஜாதா விஜயகுமார் செந்தில் கோவை சரளா மீசை முருகேசன் மீனா |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் பி. கிருஷ்ணகுமார் |
கலையகம் | மதர்லாண்ட் பிக்சர் இன்டர்நேஷனல் |
வெளியீடு | மார்ச்சு 7, 1986[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உயிரே உனக்காக (Uyire Unakkaga) 1986 ஆம் ஆண்டு மோகன் மற்றும் நதியா நடிப்பில், கே. ரங்கராஜன் இயக்கத்தில், இலட்சுமிகாந்த்-பியாரேலால் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும்[2][3][4].
கதைச்சுருக்கம்
ஜெய்நகர் அரசகுடும்பத்தின் வழிவந்த ராஜா விஜயரகுநாத பூபதியின் (விஜயகுமார்) ஒரே மகள் விஜயநிர்மலாதேவி (நதியா). பூபதி இரண்டாவதாக ஆஷா தேவியைத் (சங்கீதா) திருமணம் செய்துகொள்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்துத் தன் மாளிகைக்குத் திரும்பும் விஜயநிர்மலாதேவி தன் தந்தை மற்றொரு திருமணம் செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். தந்தை மற்றும் சித்தியிடமிருந்து அவள் அந்நியமாக உணர்கிறாள். அன்பில்லாத அந்த மாளிகையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறுகிறாள். நேராக கன்னியாகுமரிக்கு செல்கிறாள். தன் மகள் வீட்டைவிட்டு சென்றதை அறியும் பூபதி ஆத்திரப்படுகிறார். ஊரார் இதை அறிந்தால் தனக்கு அவமானம் என்றெண்ணி செய்தித்தாளில் அறிவிப்பு தருவதையும், காவல்துறையில் புகாரளிப்பதையும் தவிர்க்கிறார். தன் மகளைத் தேடி அனைத்து இடங்களுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.
கன்னியாகுமரியில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிபவன் பாலமுரளி (பாலு) (மோகன்). அவன் தன் தாய் அபிராமி (சுஜாதா), அபிராமியின் அண்ணன் முருகேசன் (மீசை முருகேசன்) மற்றும் இரு சகோதரிகளோடு வசிக்கிறான். டெல்லியில் வசிக்கும் அபிராமியின் மற்றொரு அண்ணனும், முருகேசனின் தம்பியுமான கதிரேசன் (வி. கோபாலகிருஷ்ணன்) அவர் மகள் உமாவை கன்னியாகுமரிக்கு அனுப்புவதாக கடிதம் எழுதியிருந்தால் உமாவை அழைத்துச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறான் பாலு. அவன் உமாவை பார்த்ததில்லை. அப்போது அங்குவரும் விஜயநிர்மலாதேவியை உமா என்று நினைத்து பேசுகிறான். பாதுகாப்பாக எங்கு தங்குவது என்ற குழப்பத்தில் இருக்கும் விஜயநிர்மலாதேவியும் தான் யார் என்பதை மறைத்து, தன்னை உமா என்றே பாலு முதலில் அழைத்ததால், தான்தான் அவன்தேடி வந்த உமா என்று சொல்லி அவனுடன் வீட்டுக்குச் செல்கிறாள். வீட்டில் உள்ள அனைவரும் அவள்தான் உமா என்று நம்புகின்றனர். அவர்களுடைய குடும்பத்தில் ஒருத்தியாக மாறுகிறாள். கதிரேசன் தன் மகள் உமாவிற்கு கன்னியாகுமரி வர விருப்பமில்லை என்று எழுதும் கடிதம் விஜயநிர்மலாதேவியிடம் கிடைக்கிறது. அதை அவள் மற்றவர்களிடம் மறைத்துவிடுகிறாள். பாலு அவளைத் தன் மாமன் மகள் என்று நினைத்துக் காதலிக்கிறான். அவளும் பாலுவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்குகிறாள். இருவருக்கும் திருமணம் செய்ய அபிராமி மற்றும் முருகேசன் விரும்புகின்றனர்.
அப்போது டெல்லியிலிருந்து கதிரேசன் தன் மகள் உமாவின் திருமணத்தைப் பற்றி தெரிவிப்பதற்காக வருகிறார். அதன்பிறகே இங்கு இருப்பது உமா இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரிகிறது. அப்போது தான் யார் என்ற உண்மையைத் தெரிவிக்கிறாள். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு வீட்டைவிட்டுச் செல்ல எத்தனிக்கும் விஜயநிர்மலாதேவியைத் தடுத்து அவள் விரும்பும்வரை அங்கேயே தங்கிக்கொள்ள அபிராமி அனுமதிக்கிறாள். அவள் மீது முதலில் கோபப்படும் பாலு பின் சமாதானமாக, அவர்கள் காதல் தொடர்கிறது. அவளை எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகாரளிக்கிறார் பூபதி. செய்தித்தாளில் அறிவிப்பும் கொடுக்கிறார். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபிராமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. பணம் திரட்ட அவர்கள் படும் சிரமத்தைக் காணும் விஜயநிர்மலாதேவி தன் தந்தைக்கு தொலைபேசி மூலம் தான் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கிறாள். அவளை அழைத்துச்செல்ல வரும் தந்தையிடம் அபிராமியின் மருத்துவத்திற்கு உதவவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறாள். அவரும் தன் மகளுக்காக உதவுகிறார். இறுதியில் தன் மகளைப் புரிந்துகொள்ளும் பூபதி, பாலு - விஜயநிர்மலாதேவி காதலுக்கு சம்மதம் தெரிவித்து அவளை அங்கேயே விட்டுச்செல்கிறார்.
நடிகர்கள்
- மோகன் - பாலமுரளி (பாலு)
- நதியா - விஜயநிர்மலாதேவி (உமா)
- சுஜாதா - அபிராமி
- விஜயகுமார் - ராஜா விஜரகுநாத பூபதி
- மீசை முருகேசன் - முருகேசன்
- வி. கோபாலகிருஷ்ணன் - கதிரேசன்
- செந்தில் - செருப்பு தைப்பவர்
- கோவை சரளா
- சார்லி - பேருந்து நடத்துனர்
- தியாகு
- சங்கீதா - ஆஷாதேவி
- சின்னி ஜெயந்த்
- ஏ. ஆர். எஸ்.
- பேபி மீனா - சிறுவயது விஜயநிர்மலாதேவி
- பேபி பிரியதர்சினி - காஞ்சனா
- டிங்கு - ராமு
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இலட்சுமிகாந்த்-பியாரேலால் இசையமைத்திருந்தனர்.[5].
வ.எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலநீளம் |
---|---|---|---|---|
1 | பன்னீரில் நனைந்த | எஸ். ஜானகி | வள்ளி | 06:52 |
2 | தேனூறும் ராகம் - 1 | எஸ். ஜானகி | வைரமுத்து | 05:33 |
3 | ஓடோடி விளையாடு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, தினேஷ் பாபு, பொன்னுசாமி, பத்மா | எம். ஜி. வல்லபன் | 05:14 |
4 | தேனூறும் ராகம் - 2 | எஸ். ஜானகி | வைரமுத்து | 01:12 |
5 | பல்லவி இல்லாமல் - 1 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 02:54 |
6 | ஐ வாண்ட் டு பீ எ பிக்மேன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வள்ளி | 06:53 |
7 | கவிதைகள் விரியும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | எம். ஜி. வல்லபன் | 05:53 |
8 | கையாலே உன்னை | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | முத்துலிங்கம் | 04:36 |
9 | பல்லவி இல்லாமல் - 2 | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 02:18 |
மேற்கோள்கள்
- ↑ 100010509524078 (3 July 2016). "மணிரத்னம் டைரக்ஷனில் இதயக்கோயில்" இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190103061534/https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/07/03221613/1023195/cine-history-mani-ratnam.vpf.
- ↑ "உயிரே உனக்காக தயாரிப்பாளர் நேர்காணல்" இம் மூலத்தில் இருந்து 2019-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190103061534/https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/07/03221613/1023195/cine-history-mani-ratnam.vpf.
- ↑ "உயிரே உனக்காக". http://www.filmibeat.com/tamil/movies/uyire-unakkaaga.html.
- ↑ "உயிரே உனக்காக". http://spicyonion.com/movie/uyire-unakkaga/.
- ↑ "பிரபலமான பாடல்கள்". https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/88104-have-you-ever-listened-to-songs-from-the-movie-uyire-unakkaga.html.[தொடர்பிழந்த இணைப்பு]