இலங்கை பிரதமர்
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கைப் பிரதமர் (Prime Minister of Sri Lanka) இலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.
இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி 1948 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது. பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை 1972 இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு 1978இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். நாடாளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.
இலங்கையின் 15 வது பிரதமராக தினேஷ் குணவர்தன 22 ஜூலை, 2022 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
வரலாறும் அதிகாரங்களும்
இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது. இருப்பினும் 1978ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதிப் பதவி அறிமுகமானதையடுத்து இலங்கை பிரதமர் பதவி அதிகாரமற்ற ஒரு அலங்கார நிலையையே அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.
நியமனம்
- அரசியலமைப்பின் படி இலங்கை சனாதிபதியே பிரதமரைத் நியமனம் செய்வார்.
- அரசியலமைப்பின் 43(3) உறுப்புரைப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் ஆதரவு உள்ளவரை சனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்வார். (இதன்படி ஆளும்கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவரொருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதலாம்.)
அதிகாரங்களும், கடமைகளும் குறைக்கப்பட்டுள்ள நிலை
1978க்கு முன்னர் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அரசியலமைப்புடன் ஒப்புநோக்கும் போது 1978ம் ஆண்டு அரசியலமைப்பின்படி பிரதமரின் அதிகாரங்களும், கடமைகளும் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு சனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும், கடமைகளையும் நிறைவேற்ற பிரதமரின் ஆலோசனை அவசியமில்லை. பிரதமரின் ஆலோசனை தேவை எனக் கருதினால் மட்டுமே சனாதிபதி பிரதமரின் ஆலோசனையைப் பெறலாம். எவ்வாறாயினும் பிரதமரின் ஆலோசனைப்படி சனாதிபதி நடக்க வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை.
அதிகாரங்களை வகைப்படுதல்
பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின்படி அவரின் அதிகாரங்களை வகைப்படுத்துவதும் கடினம்.
பதில் கடமை
அரசியலமைப்பின்படி ஜனாதிபதி சுகவீனமுற்றால், நாட்டிலிருந்து வெளியே சென்றால், அல்லது வேறு காரணங்களுக்காக ஜனாதிபதி கடமையாற்ற முடியாது என்றிருந்தால் ஜனாதிபதிக்கு பதில் கடமையாற்ற பிரதமர் நியமிக்கப்படலாம்.
பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல
பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல. அதேநேரம், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதில்லை. 2ம் குடியரசு அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இன்றுவரை சனாதிபதி பிரதமருக்கு மந்திரிசபைப் பொறுப்புக்களை வழங்கியமைனால் அவர் அமைச்சரவைக்குச் செல்கிறார். (பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை.)
முரண்பாடுகள்
இலங்கை சனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக கூடிய சந்தர்ப்பங்களில் இருந்ததினால் அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் எழவில்லை. இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து பிரதமரது கடமைகள், அதிகாரங்கள் தொடர்பான புதிய முரண்பாடுகள் தோன்ற இடமுண்டு.
1994 ஆகஸ்ட் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமைத்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையான் சந்திரிக்கா அரசாங்க காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியாக விஜேதுங்க இருந்த போதிலும் கூட விஜேதுங்கவின் ஒத்துசெல் போக்குநிலை காரணமாகப் பிரச்சினைகள் எழவில்லை.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- இலங்கைப் நாடாளுமன்றம் - நாடாளுமன்றக் கையேடு, பிரதமர்கள் பரணிடப்பட்டது 2008-03-25 at the வந்தவழி இயந்திரம்
- இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (1978)