இன்னிலை
இன்னிலை என்னும் பெயரில் பழம்பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக ஒரு நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சொர்ணம்பிள்ளையார் என்பவர் இதனைத் தோற்றுவித்தார்.
வ. உ. சிதம்பரம் பிள்ளையைக் கொண்டு இதற்கு விரிவுரை எழுதி, அவரைக் கொண்டே பதிப்பிக்கவும் செய்தார். [1]
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக்காட்டும் பாடலில் ‘இன்னிலைய காஞ்சி’ என்னும் தொடர் வருகிறது. [2]
கைந்நிலை என்னும் நூல் காணப்படாத காலத்தில் 18 என்னும் எண்ணிக்கையைச் சமன்செய்ய இந்த நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல் ஒன்று இதில் இடம்பெற்றுள்ளது[3] இந்தப் பாடலின் காலம் 11-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது.
இந்த நூலை உருவாக்கியவர் இந்த நூலின் ஆசிரியர் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் எனவும் கூறுகின்றார்.
இப்படிக் காட்டுவதன் வாயிலாக இந்த நூலைத் திருக்குறளுக்கும் முந்தியது எனவும் காட்ட முனைந்துள்ளார்.
இவை அனைத்தும் போலியானவை என இப்பொழுது அறிஞர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர்.
இப்பொழுது இந்த நூலை விடுத்து, ‘கைந்நிலை’ நூலைச் சேர்த்து, 18 நூல்களைக் காண்கிறோம்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005