வெ. யோகேசுவரன்
வி. யோகேஸ்வரன் V. Yogeswaran | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் | |
பதவியில் 1977–1983 | |
முன்னையவர் | சி. சே. மார்ட்டின், ITAK |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 5, 1934 |
இறப்பு | சூலை 13, 1989 342/2 பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு, இலங்கை | (அகவை 55)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
துணைவர் | சரோஜினி யோகேஸ்வரன் |
முன்னாள் கல்லூரி | பரி யோவான் கல்லூரி சம்பத்தரிசியார் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
வெற்றிவேலு யோகேஸ்வரன் (Vettivelu Yogeswaran, 5 பெப்ரவரி 1934 - 13 சுலை 1989) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். யோகேஸ்வரன் விடுதலைப் புலிகளால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1][2]
ஆரம்ப வாழ்க்கை
யோகேஸ்வரன் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஏ. வெற்றிவேலு, பராசக்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரி, யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் ஐக்கிய இராச்சியம் சென்று சட்டம் பயின்றார். பிரித்தானியாவில் படித்த போது அவர் மாணவர்களுக்கான தேசிய ஒன்றியம், இனவொதுக்கலுக்கு எதிரான முன்னணி போன்ற அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். வெளிநாட்டு இலங்கைத் தமிழர் முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளையின் தலைவராகவும் பணியாற்றினார். சட்டக் கல்வியை முடித்து விட்டு நாடு திரும்பிய இவர் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
யோகேஸ்வரன் சரோஜினி பொன்னம்பலம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
அரசியலில்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர ஆதரவாளரான யோகேஸ்வரன் கட்சியின் செயல் குழுவில் இணைந்து இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 6,291 அதிகப்படியான வாக்குகளால் சுயேட்சையாகப் போட்டியிட்ட குமார் பொன்னம்பலத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[3]
1981 சூன் 1 இல் சிங்களக் காவல்துறை, மற்றும் கும்பலால் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது யோகேஸ்வரனின் இருப்பிடமும் எரிக்கப்பட்டது.[4][5] யோகேஸ்வரனும் அவரது மனைவியும் பின் சுவரால் குதித்து வெளியேறி தப்பினர்.
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வி. யோகேஸ்வரன் யாழ்ப்பாணத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[6].
யோகேஸ்வரனும் அவரது குடும்பமும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்று சென்னையில் வாழ்ந்து வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலுய்ம் யோகேஸ்வரன் நாடு திரும்பினார். 1987 சூலையில் இந்திய அமைதி காக்கும் படையினர் யாழ்ப்பாணம் வரும் வரையில் புலிகள் அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்தனர். 1988 ஆரம்பத்தில் யோகேஸ்வரனும் மனைவியும் கொழும்பு சென்று கறுவாத் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்களான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
படுகொலை
தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட யோகேஸ்வரன் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பலமுறை அவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களில் ஈடுபட்டார். அவ்வாறான ஒரு சந்திப்பு 1989 சூலை 13 ஆம் நாள் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பீட்டர் அலோசியசு லியோன், விசு (இராசையா அரவிந்தராஜா), சிவகுமார் ஆகியோர் அன்று யோகேஸ்வரனின் இல்லத்திற்கு வந்தனர். சிவகுமார் வீட்டிற்கு வெளியே காத்திருக்க ஏனைய இருவரும் உள்ளே சென்று முதலாம் மாடியிலிருந்த யோகேஸ்வரனின் இல்லத்தில் அவரையும், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரையும் சந்தித்தனர். பேச்சுக்களின் இடையில் விசு என்பவர் தனது கைத்துப்பாக்குயால் அமிர்தலிங்கத்தின் தலையிலும், மார்பிலும் சுட்டார். இதனை அடுத்து யோகேஸ்வரன் எழுந்து நிற்கவே அவரையும் அவர்கள் சுட்டனர். இவர்களின் மெய்ப்பாதுகாவலர் உடனடியாக விரைந்து கொலையாளிகளை நோக்கிச் சுட்டனர். அவர்கள் திருப்பிச் சுட்டதில் சிவசிதம்பரம் தோளில் காயமடைந்தார். கொலையாளிகள் காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினர். சிவகுமாரும் சூட்டுக் காயத்திற்கு உள்ளானார். இவர் பின்னர் இறந்தார். அமைர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் இறக்க, சிவசிதம்பரம் காயங்களுடன் உயிர் தப்பினார். விடுதலைப் புலிகள் இக்கொலையைத் தொடக்கத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் அதற்குப் பொறுப்பேற்றனர்.
யோகேஸ்வரனின் மனைவி சரோஜினி பின்னர் யாழ்ப்பாண நகர முதல்வராகப் பணியாற்றினார். இவரும் பின்னர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலப்பட்டார்.
மேற்கோள்கள்
- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 253. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". The Nation, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm.
- ↑ Rajasingham, K. T.. "Chapter 39: Amirthalingham eliminated". SRI LANKA: THE UNTOLD STORY இம் மூலத்தில் இருந்து 2002-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020515215711/http://atimes.com/ind-pak/DE11Df02.html. பார்த்த நாள்: 2013-10-05.
- ↑ "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF.
- ↑ "Torching of Jaffna, Part 3". Ilankai Tamil Sangam. http://www.sangam.org/taraki/articles/2006/06-04_Torching_Jaffna_3.php?print=sangam.
- ↑ "Torching of Jaffna, Part 1". Ilankai Tamil Sangam. http://sangam.org/taraki/articles/2006/06-04_Torching_Jaffna_1.php?print=sangam.
- ↑ Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
- 1934 பிறப்புகள்
- 1989 இறப்புகள்
- இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்